Thursday, July 20, 2017

நம்பிக்கை மோசம்!

By ஆசிரியர்  |   Published on : 20th July 2017 01:13 AM  |   
வாடிக்கையாளர்களால் வங்கிகளில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும் நகைகளும், ஆவணங்களும் திருடப்பட்டாலோ, வேறு ஏதாவது காரணத்தால் பாதிப்புக்குள்ளானாலோ அதற்கு வங்கிகள் பொறுப்பேற்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் 19 அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அந்த வங்கிகள் இதை தெளிவுபடுத்தியிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களது விலைமதிப்புள்ள பொருள்களை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைப்பது அவற்றின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தாது என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்புப் பெட்டகங்களில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில் அவற்றில் ஏற்பட்டிருக்கும் இழப்புக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது வங்கிகள் தரப்பு வாதம். பாதுகாப்புப் பெட்டகத்தை வாடிக்கையாளர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளும்போதே அந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருள்களின் இழப்புக்கோ, சேதத்துக்கோ தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பதைத் தெளிவாகவே வங்கிகள் பதிவு செய்து விடுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணா மாநிலம் சேனிப்பட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் நுழைந்து நடத்தப்பட்ட வங்கிக் கொள்ளை இந்தப் பிரச்னை குறித்த விவாதத்துக்கு வழிகோலியது. கேள்வி கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து நான்கு கொள்ளையர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறை வரை மண்ணுக்கு அடியில் 125 அடி நீளத்திற்கு சுரங்கப் பாதை அமைத்து அதற்குள் நுழைந்தனர்.
தினமும் இரவில் வேலையைத் தொடங்கி விடியும் வரை சுரங்கப்பாதையை தோண்டிய கொள்ளையர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு மண்ணுக்கு அடியில் செல்லும் தொலைபேசி தொடர்புகளோ, தொலைபேசி கம்பிகளோ, குடிநீர் குழாய்களோ கழிவுநீர்க் குழாய்களோ பாதிக்கப்படாமல் சுரங்கம் தோண்டியிருக்கிறார்கள். 7 அடி உயரம் 2.5 அடி அகலமும் உள்ள சுரங்கப்பாதை வழியாக வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் காணப்பட்ட 350 பெட்டகங்களில், 86 பெட்டகங்களை மிகவும் சாதுரியமாக அவர்கள் திறந்திருக்கிறார்கள். அவற்றிலுள்ள 72 பெட்டகங்களில் இருந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தப்பியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் தலைவனான மகிபால் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். ஏனைய பிடிபட்ட 3 பேரிடமிருந்து 43 கிலோ தங்கம், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தங்களது பொருள்களை இழந்த வாடிக்கையாளர்களுக்கு இன்னும்கூட எந்தவித நிவாரணமும் கிடைத்தபாடில்லை. உடைக்கப்பட்ட பெட்டகங்களின் வாடிக்கையாளர்களின் கூற்றுப்படி ஏறத்தாழ 100 கோடி ரூபாய் பெறுமானமான அவர்களது பொருள்கள் கொள்ளை போயிருக்கின்றன. அந்தப் பாதுகாப்பு அறைகளின் பெட்டகங்கள் 60 - 70 ஆண்டுகள் வரை பழைமையானவை என்றும், அந்த அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என்பதும் வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இந்தக் காரணத்தால் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
சட்டமும் வாடிக்கையாளர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. ஒப்பந்தச் சட்டம் 182 பிரிவின்படி பாதுகாப்புக்காக ஒருவரிடம் தரப்பட்டிருக்கும் பொருள்கள், அவர் முறையாகப் பாதுகாத்திருந்தும் தொலைந்துபோனாலோ, சேதமடைந்தாலோ அதற்கு அவர் பொறுப்பல்ல என்று கூறுகிறது. தங்களுக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவு என்பது வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருப்பவருக்கும் இடையே உள்ள உறவு போன்றதுதானே அல்லாமல் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள உறவு போன்றது அல்ல என்பது வங்கிகளின் வாதம்.
இந்த வாதத்தை சில நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனாலும்கூட வாடிக்கையாளர்களுக்கு அதனால் பயன் இருக்கிறதா என்றால் கிடையாது. தன்னுடைய விலையுயர்ந்த பொருள்களை வங்கிகள் பாதுகாக்கத் தவறும்போது வங்கிகளுக்கு எதிராக வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற வேண்டுமேயானால் தனது பெட்டகம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை மட்டுமல்ல, அதற்குள் வைக்கப்பட்டிருந்த பொருள்கள், அதன் மதிப்பு ஆகியவை குறித்த தரவுகளையும் தெளிவுகளையும் அவர்கள் கொடுத்தாக வேண்டும். இது சாத்தியமானது அல்ல.
வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை இழப்புதான் இந்த விவாதத்தின் அடிப்படை. பாதுகாப்புப் பெட்டக ஒப்பந்தத்தை வெறும் வாடகைதாரருடனான உறவாக வங்கிகள் கருதுமேயானால், அது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது நம்பிக்கை வைத்த குற்றத்திற்காக வாடிக்கையாளர்கள் தண்டிக்கப்படுவது நியாயமல்ல.
இதற்கு ஒரேயொரு தீர்வு வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களை முறையாகக் காப்பீடு செய்வதுதான். இதற்கு வாடிக்கையாளர்கள் அவரவர் பாதுகாக்கும் பொருள்களின் மதிப்பைப் பொருத்து இழப்பீட்டிற்கான தொகையின் ஒரு பகுதியை நிச்சயமாக கொடுக்க முன்வருவார்கள். வங்கிகள் - காப்பீட்டு நிறுவனங்கள் - வாடிக்கையாளர்கள் என்கிற மும்முனை ஒப்பந்தம்தான் வங்கிகள் மீதான் நம்பிக்கையையும் வாடிக்கையாளர்களின் நலனையும் உறுதிப்படுத்தும்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...