Sunday, July 9, 2017

திருமலையில் வாடகை அறையை முன்பதிவு செய்ய புதிய முறை: இனி இடித்துக் கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்யலாம்

Published on : 08th July 2017 02:29 PM  | 
tirupathi
திருமலையில் வாடகை அறையை முன்பதிவு செய்ய தேவஸ்தானம் புதியமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பக்தர்கள் பலர் கூட்ட நெரிசல் சமயத்தில் வாடகை அறை பெற திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் வாடகை அறை முன்பதிவை எளிதாக்க தேவஸ்தானம் மத்திய விசாரணை அலுவலகத்தில் தனியாக இயங்கும் 10 கவுன்ட்டர்களில் வாடகை அறை தேவைப்படும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்தவர்களின் வரிசைப் படி, காலி செய்யப்படும் வாடகை அறைகள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு அதுகுறித்த தகவல் கைபேசி மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அவர்கள் சென்று தங்கள் அறைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை ஜூலை 12- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

4000 பேருக்கு வாய்ப்பு: வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,500 பேருக்கு காலை 10 மணி, மதியம் 3 மணி என தேவஸ்தானம் இருமுறை இலவச தரிசனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அவர்கள் தங்கள் கோட்டாவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால், மாதத்தில் இருமுறை மட்டும், 4000 பேர் ஒரு நாளில் தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி இம்மாதம் ஜூலை 18 மற்றும் 25- ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2000 பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என இவ்விரு நாட்களில் மட்டும் 4000 பேர் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

5 வயது வரை அனுமதி: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் போல் 0- 1 வயது வரை உள்ள கைக்குழந்தைகளின் பெற்றோர் ஏழுமலையான் தரிசனத்திற்கு சுபதம் வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மாதம் இருமுறை 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி இம்மாதம் ஜூலை 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 9 மணிமுதல் மதியம் 1.30 வரை 0- 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் சுபதம் வழியாக ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

லட்டுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது

பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதத்திற்கு ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட மாட்டாது. ஆனால் தங்க டாலர் விற்பனை, வாடகை அறை, கல்யாண மண்டபம் உள்ளிட்டவை மட்டும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் வருகிறது. அதன்படி தங்க டாலர்களுக்கு 3 சதவீதமும், ரூ.1,000- ம் முதல் 10 ஆயிரம் வரை வாடகை உள்ள அறைகளுக்கு 12 சதவீதமும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாடகை உள்ள அறைகள் மற்றும் தேவஸ்தான கல்யாண மண்டபங்களுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் திருமலையில் 86 சதவீதம் வாடகை அறைகள் ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ளதால் சாதாரண பக்தர்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு உள்ளது. மேலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பின்படி பக்தர்களின் சேவைக்காக கொள்முதல் செய்யும் ரூ.32 கோடி மதிப்புள்ள பொருள்களுக்கு ஓராண்டிற்கு ரூ. 19 கோடி வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தேவஸ்தானம் தள்ளப்பட்டுள்ளது.

திருப்பி அளிப்பு

திருமலையில் வாடகை அறை முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் சொந்தக் காரணங்களால் இரண்டு நாட்களுக்கு முன் வாடகை அறையை ரத்து செய்தால் முழு பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். இம்முறை வரும் 15- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தரிசன வரிசை மாற்றம்
ஏழுமலையான் கோயிலுக்குள் வெள்ளி வாசல் அருகிலிருந்து தங்க வாசல் செல்லும் தரிசன வரிசையில், கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் வெள்ளி வாசலிலிருந்து தங்க வாசல் செல்லவும், மீண்டும் திரும்பி வரவும் இரு தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசனம் செய்து மீண்டும் கோயிலை விட்டு வெளியேற முடியும். தீர்த்தம் வழங்கும் இடத்திலும் கூட்டமாக செல்வதைத் தடுக்க 2 தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்சஸ் கார்டு: தர்ம தரிசன காத்திருப்பு அறை வழியாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் லட்டு டோக்கன்கள் பெற்றவுடன் வெளியில் சென்று மீண்டும் காத்திருப்பு அறைக்கு திரும்ப அவர்களுக்கு ஜூன் 30- ஆம் தேதி முதல் ஆக்சஸ் கார்டு வழங்கப்படுகிறது.

அந்த கார்டில் அவர்கள் பெயர், வெளியே செல்லும் நேரம், மீண்டும் தரிசனத்துக்கு வரும் நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்திற்கு அவர்கள் காத்திருப்பு அறைக்கு சென்றால் 2 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து விடலாம். அதன்படி பல மணிநேரம் அறையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். அதுபோல் தற்போது திவ்யதரிசன பக்தர்களுக்கும் ஆக்சஸ் கார்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...