Friday, October 6, 2017

டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்

பதிவு செய்த நாள்06அக்
2017
03:25

மதுரை: ''டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' என, கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: திறந்த வெளிப்படையான விரைவான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி நடக்கிறது. இதுவரை, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தற்போதைய நடைமுறையின்படி பணிப்பதிவேடுகளை பராமரிப்பதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஒரு அரசு ஊழியர் அவரது பணிப்பதிவேட்டை முறையாக கவனித்திருக்க இயலாது. அவர் ஓய்வு பெறும் நிலையில் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் சம்பள விவரங்களை பதிவு செய்ய விடுபட்டிருந்தால், அவர் அந்த அலுவலகத்திற்கு சென்று அதை சரி செய்ய வேண்டும்.
இதனால் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்படும். கணினிமயமாக்குவதன் மூலம், உடனுக்குடன் இதுபோன்ற குறைகளை சரி செய்ய முடியும்.
வங்கி கணக்குகளை அலைபேசியில் வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்வதை போல, அரசு ஊழியர்கள் தங்கள் அலைபேசியில் பணிப்பதிவேடு பதிவுகளை பார்த்து கொள்ளலாம். ஊழியர்கள் குறித்து வயது, பணி அனுபவம் என ஏதாவது ஒரு அடிப்படையில் கணக்கெடுக்க அரசு உத்தரவிடும் போது, தற்போது மூன்று நாட்களுக்கு மேலாகி விடுகிறது.

கணினிமயமாக்குவதால், உடனுக்குடன் கணக்கெடுத்து விட முடியும். இதுகுறித்து அடுத்த வாரம் திருநெல்வேலி, திண்டுக்கல்லில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024