Friday, October 6, 2017

சும்மா கிடைத்த ரூ.3,280 கோடியை  கடனாக சுமக்குது மின் வாரியம்

மின் திட்டப் பணிகளை, குறித்த காலத்தில், மின் வாரியம் முடிக்காததால், மத்திய அரசு ஒதுக்கிய, 3,280 கோடி ரூபாய் நிதி, திரும்ப செலுத்தக்கூடிய கடனாக மாறி உள்ளது.



மத்திய அரசு, ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., என்ற, திருத்திஅமைக்கப்பட்ட விரைவு மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தை, 2008ல் துவக்கியது. இத்திட்டம், இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி, 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட மின் சாதனங்களில், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பொருத்தி, மின் இழப்பை கண்காணிப்பது; இரண்டாவது, புதிய துணை மின் நிலையம், வழித்தடம் அமைத்து,

சீராக மின் சப்ளை செய்வது.திருத்திய திட்ட பணிகளை, மின் வாரியம், சென்னை உள்ளிட்ட, 110 நகரங்களில், 2009ல் துவங்கியது.

மத்திய அரசு, முதல் பணிக்கு, 417 கோடிரூபாயும், இரண்டாவது பணிக்கு, 3,279 கோடி ரூபாயும் ஒதுக்கியது. இப்பணிகளை முடிக்காததால், மின் வாரியம், மேற்கண்ட நிதியை, மத்திய அரசிடம் திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருத்திய மின் திட்ட முதல் பணிக்கு ஒதுக்கிய நிதியை, மத்திய அரசுக்கு, திரும்ப செலுத்த தேவை இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தால், இரண்டாவது பணிக்கு ஒதுக்கிய நிதியில், 50சதவீத தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை. மீதி, 50 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும்.அதன்படி, திட்டபணிகளை, 2012ல் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டது.

அதற்குள் பணிகளை முடிக்காததால், ஓராண்டு, இரு ஆண்டுகள் என, 2017 செப்., வரை, அவகாசம் வழங்கப்பட்டது; ஆனாலும், பணிகளை முடிக்கவில்லை. இதனால், 2018 மார்ச் வரை, அவகாசம் வழங்கும் படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது; எந்த பதிலும் வரவில்லை.இதனால், மத்திய அரசு, இரண்டாவது பணிக்கு ஒதுக்கிய முழு தொகையையும், 12 சதவீத வட்டியுடன், திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமோ என, அஞ்சப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024