கடந்த ஜூலை மாதம் மெரினாவில் ஜெர்மன் தம்பதியினரிடம் திருடப்பட்ட செல்லப்பிராணி லூக் என்ற லாப்ரடார் வகை நாய் நூறு நாள் தேடலுக்குப் பின் கிடைத்துள்ளது. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தனது மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயானா லாப்ரடார் வகையை சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்.
லூக் ஜெர்மன் தம்பதியினரின் செல்ல நாயாகும். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் லூக்கையும் தங்களுடனே அழைத்துச் செல்வார்கள். அண்டார்டிகா, அலாஸ்கா, அரேபியா என உலகம் முழுவதும் அவர்களுடன் லூக் சுற்றியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் தம்பதி பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றிப்பார்க்க வந்தனர். மெரினா கடற்கரையில் தாங்கள் வந்த காரில் அமர்ந்திருந்த அவர்கள், லூக்கை வெளியே காரில் கட்டி வைத்திருந்தபோது யாரோ மர்ம நபர் நாயை அவிழ்த்து திருடி சென்று விட்டார்.
லூக் நாய் காணாமல் போனது குறித்து ஜெர்மன் தம்பதியினர் மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் லூக்கை தேடி வந்தனர். சென்னையில் தங்கியிருந்த வரை நாயை தேடுவதில் தீவிரம் காட்டிய ஜெர்மன் தம்பதிகள் கவலையுடன் ஜெர்மன் புறப்பட்டு சென்றனர்.
புறப்படும் முன் சமூக வலைதளத்தில் லூக்கின் புகைப்படத்தைப் பதிவு செய்த ஜெர்மன் தம்பதியினர் தங்களது நாயை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்தத் தகவல் வைரலாகப் பரவியது. பலரும் நாயைத் தேடினர்.
இந்நிலையில் லூக் காணாமல் போய் நூறு நாட்கள் கடந்த நிலையில் நாய் பற்றி தகவல் கொடுத்திருந்த விலங்கின ஆர்வலர் விஜயா நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை ஒரு நபர் போன் செய்துள்ளார். அதில் காணாமல் போன லூக் நாய் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களை பெசன்ட் நகர் வரச் சொன்ன விலங்கின ஆர்வலர் அவர்கள் கொண்டு வந்த நாயை விலங்கின மருத்துவர் உதவியுடன் சோதனை செய்துள்ளார்.
காணாமல் போன லூக்கின் கழுத்தில் அது பற்றிய விபரம் அடங்கிய சிப் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதை மருத்துவர் உதவியுடன் சோதித்தபோது அது காணாமல் போன ஜெர்மன் தம்பதியினரின் நாய் லூக்தான் என உறுதியானது. இதையடுத்து திருவான்மியூர் கால்நடை மருத்துவர்கள் வசம் நாய் ஒப்படைக்கப்பட்டது. நாய் கிடைத்தது பற்றி போலீஸார் ஜெர்மன் தம்பதிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் ஓரிரு நாளில் சென்னை வருகின்றனர்.
காணாமல் போன நாய் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரித்ததில் நாயை கண்டுபிடித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் மெரினா கடற்கரைக்கு தனது மனைவியுடன் வந்தபோது இளைஞர் ஒருவர் கறுப்பு நிற நாயுடன் நின்றிருந்ததைப் பார்த்து அது லூக் நாயாக இருக்கும் என்ற சந்தேகத்தில் விசாரித்தபோது அது காணாமல் போன லூக் தான் என தெரிய வந்ததாம்.
உடனடியாக அந்த இளைஞரிடம் பேசி நாயை தங்கள் வீட்டுக்கு கொண்டுவந்த அவர்கள் நாயை கண்டுபிடிக்க சன்மானம் அளிப்பதாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இருக்கும் போன் நம்பரை வைத்து பின்னர் விலங்கின ஆர்வலரிடம் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment