Friday, October 20, 2017

சம்பளம் உயர்வு, சலுகை: குஜராத் அரசு தாராளம்


சம்பளம்,உயர்வு,சலுகை,குஜராத்,அரசு,தாராளம்
ஆமதாபாத்: விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள குஜராத்தில், ஆசிரியர்கள், ஊராட்சி ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் அறிவிப்புடன், குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதி பின் அறிவிக்கப்படும் என, தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆசிரியர்கள், ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து முதல்வர், விஜய் ரூபானி கூறியதாவது: தொகுப்பூதியம் பெறும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், 16 ஆயிரத்து, 500 ரூபாயில் இருந்து, 26 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உதவி ஆசிரியர்களுக்கான சம்பளம், 10 ஆயிரத்து, 500 ரூபாயில் இருந்து, 16 ஆயிரத்து, 224 ரூபாயாகவும், நிர்வாக உதவியாளர்கள் சம்பளம், 11 ஆயிரத்து, 500 ரூபாயில் இருந்து, 19 ஆயிரத்து, 950 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிரது.

'மாவாத்சல்யா' எனப்படும், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு, 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள, 162 ஊராட்சி அமைப்புகளில், 105 அமைப்புகள், ஆறாவது சம்பள கமிஷன் விகிதத்திலேயே சம்பளம் வழங்கி வருகின்றன; அவற்றில், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையின் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024