Wednesday, October 4, 2017

வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டாத மல்லையா லண்டனில் கைதாகி விடுதலை
2017-10-04@ 01:23:37




புதுடெல்லி: கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லைா, லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் ரூ.6,027 கோடி கடன் வாங்கினார். வட்டியுடன் சேர்த்து கடன் நிலுவை தற்போது ரூ.9,000 கோடியை தாண்டி விட்டது. கடனை திருப்பித்தராத மல்லையா, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் பதுங்கியுள்ளார். விசாரணைக்கும் ஒத்துழைப்பு தரவில்லை. அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் மல்லையா வங்கிகளில் வாங்கிய ரூ.6,000 கோடிக்கும் மேற்பட்ட கடனை 7 நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதை அமலாக்கத்துறையும், சிபிஐயும் கண்டுபிடித்துள்ளன. இதற்கிடையில், லண்டனிலும் மல்லையா சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதன்பேரில் லண்டன் புலனாய்வு அமைப்பு அவரிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து விஜய் மல்லையா நேற்று கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.

மல்லையா மீது கடன் மோசடி வழக்கு ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. அவற்றை போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் பண மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. எனவே இரட்டை குற்றங்கள் புரிந்தவராக இருப்பதால், இந்திய சட்டப்படி மட்டுமின்றி இங்கிலாந்து சட்டப்படியும் அவர் நாடு கடத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது முறையாக கைதான மல்லையா மீண்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதால், வழக்கு உடனடியாக முடிவு பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு கடத்தும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

வங்கிகளில் மல்லையா வாங்கிய கடன் ரூ.6,027 கோடி. வட்டியுடன் சேர்த்து நிலுவை ரூ.9,000 கோடியை தாண்டிவிட்டது. கடன் மோசடியுடன், இந்த தொகையை 7 நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மார்ச் முதல் லண்டனில் பதுங்கியுள்ளார் மல்லையா. கடந்த பிப்ரவரியில் மல்லையாவை நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்தது.

கழுவிய மீனில் நழுவிய மல்லையா

வங்கி கடன் மோசடி வழக்கில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட மல்லையா, வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதுபோல், நேற்றும் கைது செய்யப்பட்ட உடனேயே மல்லையா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முறையும் அவர் தப்பி விட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024