Saturday, October 21, 2017

பார்த்து எடுத்த படிப்பு: படிக்க சென்றால் ஏமாற்றம் : அதிர்ச்சி தந்த பல்கலை

மதுரை: அண்ணா பல்கலை கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பகுதிநேர படிப்பு, கட்டணம் செலுத்திய பின் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலையில் 2017-2018ம் கல்வியாண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட்டில் நடந்தது. இதில் அண்ணா பல்கலை மதுரை மண்டலத்தில் பகுதிநேர எம்.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பை மாணவ, மாணவிகள் தேர்வு செய்தனர். இதன்பின் அதற்கான கட்டணமும் செலுத்தினர்.
இதற்கான வகுப்புகள் செப்.,6ல் துவங்க இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர் கூறியதாவது:
சென்னையில் ஆக.,21ல் நடந்த பொறியியல் கலந்தாய்வின்போது இப்படிப்பு காண்பிக்கப்பட்டது. அதை நம்பி தேர்வு செய்தோம். 6.9.2017 வகுப்புகள் துவங்க வேண்டும். ஆனால் 'போதிய எண்ணிக்கையில் மாணவர் சேராததால் இப்படிப்பு ரத்து செய்யப்பட்டது,' என 26.9.2017ல் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேறு கல்லுாரியில் சேருமாறும் அறிவுறுத்தப்பட்டது. கலந்தாய்விற்கு முன்பே இதுகுறித்து தெரிவித்திருந்தால் வேறு கல்லுாரிகளை தேர்வு செய்திருப்போம். தற்போது ஓராண்டு வீணாகியுள்ளது.
இதே பல்கலையில் முழுநேரம் எம்.இ., படிப்பிலும் இதுபோல் குறைந்த மாணவர் சேர்ந்துள்ள நிலையில் அதற்கான வகுப்பு நடக்கிறது. இதுகுறித்து அண்ணா பல்கலை பதிவாளர் மற்றும் உயர்கல்வி செயலாளருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.
அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: இப்பிரச்னை மதுரை மட்டுமல்ல திருச்சி, கோவை, நெல்லை மண்டலத்திலும் உள்ளது. பகுதிநேரம் எம்.இ., படிப்புகள் சுயசார்பு (செல்ப் சப்போர்டிங்) அடிப்படையில் நடத்தப்படுகின்றன.
அரசு விதிப்படி சுயசார்பின் கீழ் நடக்கும் படிப்பில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் சேர்ந்தால் தான் அதை நடத்த முடியும். சம்பந்தப்பட்ட எம்.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பகுதிநேரம் படிப்பில் மூன்று மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால் இக்கல்வியாண்டு மட்டும் இப்படிப்பு தற்காலிகமாக நடத்த இயலவில்லை. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் உயர் கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது, என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY