Sunday, October 22, 2017

பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினருக்கு எதிராக வழக்கு


சென்னை:இந்திய பல் மருத்துவ கவுன்சிலின், தமிழக உறுப்பினராக, டாக்டர் பாலாஜி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல் மருத்துவ கவுன்சிலில், அனைத்து மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளும், உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கவுன்சிலில், தமிழக பிரதிநிதி பதவி காலியாக இருந்ததால், சென்னையைச் சேர்ந்த, பாலாஜி பல் மருத்துவமனையின் இயக்குனர், டாக்டர் பாலாஜி, புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, தமிழக சுகாதார துறை, ௨௦௧௭, செப்டம்பரில் பிறப்பித்தது.
டாக்டர் பாலாஜியின் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல் மருத்துவர் துக்காராம் என்பவர், மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'டாக்டர் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது; மற்ற டாக்டர்களுக்கு எதிராக, அவதுாறு பரப்பி உள்ளார். அவரை நியமித்த உத்தரவை, ரத்து செய்ய
வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, சுகாதார துறை செயலர், பல் மருத்துவ கவுன்சிலுக்கு,
டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY