Wednesday, October 25, 2017


தலையங்கம்

‘கந்து வட்டி தடைச்சட்டம்’ என்ன ஆனது?




அக்டோபர் 25 2017, 03:00 AM

கம்பராமாயணத்தில் போர்முனையில் ராவணன் அவமானத்தால் கூனிக்குறுகி நின்றகாட்சியை கம்பர் வர்ணிக்கும்போது, ‘கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று எழுதியிருக்கிறார். அந்தவகையில், வேறு வழியில்லாமல் கடன் வாங்குபவர்கள் அதற்கான வட்டி குட்டிபோட்டு, வட்டிக்குமேல் வட்டியாக திரும்ப கட்டமுடியாத நிலையில் அவமானத்தால் கூனி குறுகிப்போகிறார்கள். அதிலும் இப்போதெல்லாம் தாங்கமுடியாத அளவு நாள்வட்டி, கந்துவட்டி, மணிக்கு மணி வட்டி, மீட்டர் வட்டி, ஹெலிகாப்டர் வட்டி, தினவட்டி, ரன் வட்டி என்பதுபோன்ற பல பெயர்களில் வசூலிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து கந்துவட்டி கொடுமையை தாங்கமுடியாமல், தன் மனைவி சுப்புலட்சுமி, 4 வயது குழந்தை மதிஆருண்யா, 1½ வயது குழந்தை அக்‌ஷயா என்கிற பரணிகா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனுகொடுக்க வரும்போதே, கையில் 5 லிட்டர் மண்எண்ணெய் கேனையும் எடுத்து வந்தார்.

ஏற்கனவே இதுபோல 6 மனுக்களை கொடுத்துவிட்டோம். எந்தவித பலனும் இல்லை என்று நினைத்தாரோ?, என்னவோ? தெரியவில்லை. திடீரென தன் மனைவி மீதும், 2 பெண் குழந்தைகள் மீதும், தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். எல்லோருடைய உடலிலும் தீ பற்றி இருந்த நிலையில், அந்தப்பிஞ்சு குழந்தைகள் அம்மா... அம்மா... என்று கத்தியபடி, இங்கும் அங்கும் ஓடியகாட்சி இப்போதும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கிறது. போலீஸ் பாதுகாப்பு இருந்தும், எல்லாவற்றையும் மீறி அவர்கள் உடலில் தீ வைத்துக்கொண்டதால் அலறி துடித்தனர். இந்தச்சம்பவத்தில், இசக்கிமுத்துவை தவிர, அவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இசக்கிமுத்துவும் மரணவாக்குமூலம் கொடுத்துவிட்டார். இந்த சம்பவம் சில கேள்விகளையும் எழுப்பி, எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளது.

இந்தசம்பவத்தில், கந்துவட்டி கொடுமையை தடுக்கவேண்டிய போலீசாரே அதை தடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். மாவட்ட கலெக்டரிடம், இசக்கிமுத்து மனுகொடுக்க, அவர் அதை போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்ப, சூப்பிரண்டு டி.எஸ்.பி.க்கு அனுப்ப, டி.எஸ்.பி. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கே அந்தப்புகாரை அனுப்பி, எந்த போலீசார் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கந்து வட்டிக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்களோ, அவரிடமே விசாரணைக்கு போயிருக்கிறது. 6 முறை இவ்வாறு மனு அனுப்பியும் கடைசியில் அந்த போலீஸ் அதிகாரியிடமே அந்த மனு சென்றதால் எந்தப்பயனும் இல்லை. 2003–ம் ஆண்டு கந்துவட்டி கொடுமையால் பட அதிபர் ஜீ.வி. தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதுபோன்ற கந்துவட்டி கொடுமையை தடுக்க ஒரு சட்டத்தை பிறப்பித்தார். அந்த சட்டம் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீதும், கந்துவட்டி கொடுமையால் யாராவது தற்கொலை செய்துகொண்டால், அதற்கு பொறுப்பாக கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மீதும் மிகக்கடுமையான தண்டனை, குறிப்பாக 10 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். கையில் ஜெயலலிதா ஆயுதத்தைக்கொடுத்தார். ஆனால், இதுவரை இந்தசட்டத்தின் கீழ் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த சட்டத்தை அரசும், காவல்துறையும் தீவிரமாக அமல்படுத்தவேண்டும். ஆனால், சாதாரண ஏழை–எளிய மக்கள் ஆத்திர அவசரத்துக்கு, கைமாற்று செலவுக்கு அந்த நிமிடத்திலேயே பணம் வேண்டுமென்றால் கந்துவட்டிக்காரர்களைத் தவிர, வேறு எங்கும் பணம் கிடைக்காது. எனவே, அதற்கு ஒரு எளிய, நடைமுறை சிக்கல் இல்லாத வழியை வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்தாலொழிய, கந்துவட்டி கொடுமையை அகற்றமுடியாது. எனவே, ஏழை–எளிய மக்களின் அவசர தேவைக்கு பணம் கிடைக்கும் வழிகளையும் அரசுகளும், வங்கிகள், கூட்டுறவு சங்கங்களும் ஆராய வேண்டும்.











No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...