Friday, October 6, 2017

நிச்சயம் முடிந்த பெண்ணுக்கு லவ் டார்ச்சர்: ஹெல்மெட்டால் அடித்து இன்ஜினியர் படுகொலை: 3 வாலிபர்கள் கைது: ஒருவருக்கு வலை

2017-10-06@ 01:01:14



சென்னை: வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்த இன்ஜினியர், ஹெல்மெட்டால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர், வேதா நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ராஜ்குமார் (28), இன்ஜினியரான இவர் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு ராஜ்குமார் பணி முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இரண்டு பைக்கில் வந்த 4 ேபர் வழிமறித்து ராஜ்குமாரிடம் பேசியுள்ளனர். பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜ்குமாரை பைக்கில் வந்தவர்கள் ஹெல்மெட்டால் அடித்துள்ளனர். இதில் ராஜ்குமார் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்த ராஜ்குமார் தந்தை துரைராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். இதுகுறித்து போலீசார் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார், கொலை வழக்காக மாற்றி ராஜ்குமாரை தாக்கிய ஜெயசீலன் (27), கிங்ஸ்டன் (25), பிரவீன்குமார் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அபிஷேக் (27) என்பவரை தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றும் பெண் ஒருவரை ராஜ்குமார் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். பலமுறை ராஜ்குமார் தனது காதலை சொல்லியும் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் ராஜ்குமார் அந்த பெண்ணை பின்தொடர்ந்து பல இடங்களில் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் பிறகும் ராஜ்குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். அதனால் மனமுடைந்த அந்த பெண் இதுகுறித்து பெற்றோர் மற்றும் திருமணம் செய்து கொள்ளும் நபரிடம் சொல்ல முடியாமல் தவித்தார். பின்னர் அவருடன் கல்லூரியில் படித்த திருவான்மியூரை சேர்ந்த ஜெயசீலனை சந்தித்து சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, ராஜ்குமாரை சந்தித்து அவர் காதலிக்கும் பெண்ணை விட்டுவிடும்படி பஞ்சாயத்து பேச கடந்த 23ம் தேதி இரவு ஜெயசீலன் அவரது தம்பி கிங்ஸ்டன் மற்றும் அவரது நண்பர்கள் அபிஷேக், பிரவீன்குமார் ஆகியோர், ராஜ்குமாரை அவர் வீட்டின் அருகே சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ராஜ்குமார், நான் அந்த பெண்ணை விடமாட்டேன். அவரது திருமணத்தை கண்டிப்பாக நிறுத்திவிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் கடுமையாக ராஜ்குமாரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்து அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் நாங்கள் ராஜ்குமார் காதலித்த பெண்ணிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024