Saturday, October 21, 2017


மெர்சலில் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் உள்ளன: எச்.ராஜா

Published : 20 Oct 2017 16:16 IST




நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள 'மெர்சல்' படத்தில் பொய்களின் அடிப்படையில், வெறும் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளிவந்த 'மெர்சல்' திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இதற்கு தமிழக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்ல நடிகர் விஜய்க்கு தகுதி இல்லை என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

மேலும் பாஜக எம்.பி., இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மெர்சலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தை விமர்சித்து எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் விவரம், "மெர்சல் படத்தில் பொய்களின் அடிப்படையில் வெறும் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையின் அடிப்படையில் விமர்சனங்கள் இருந்தால் அதை பாஜக வரவேற்கும். ஆனால் மோடிக்கு எதிராக ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் திட்டமிட்ட சதியாக காட்சிகள் அமைந்துள்ளன. இது ஏற்புடையதல்ல.

முதலில் ஜிஎஸ்டி புதிய வரி அல்ல. மேலும் அடிப்படை தேவைக்கானப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் 7% ஜிஎஸ்டி இருக்கும் போது மருத்துவம் இலவசம் என்று பொய் பேசியுள்ளார்.

அடுத்து சாராயத்திற்கு வரியில்லை என்கிறார். தமிழகத்தில் சாராயத்திற்கு 250% வரை வரி விதிக்கப்படுகிறது.

எனவே விஜய்யின் வசனங்கள் பிரதமர் மோடியை குறிவைத்து திட்டமிட்ட ரீதியில் அவதூறு பரப்பும் செயலே ஆகும்.

ஸ்டார் டிவியில் தீபாவளிப் பண்டிகை அவசியமா, ஆடம்பரமா என்று பட்டிமன்றம் நடத்தியதையும் விஜய் கோயில் கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று வசனம் பேசியதையும் தனித்தனியாக பார்க்க முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகள் 17500, மசூதிகள் 9700, இந்து கோவில்கள் 370. சர்ச்சுகள் கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று ஏன் வசனம் இல்லை.


ஹெச். ராஜா பதிவிட்டுள்ள பதிவு

இந்துக்களை தங்களின் இலக்காக்கித் தாக்குகின்றவர்கள் பல உருவில் வருகின்றனர் என்பதையே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்ப்புத் தீயில் பிறந்த அரசியல் தலைவர் மோடி. நெருப்பில் பூத்த மலர் தாமரை. இந்த பூச்சாண்டி எங்களை மெர்சலாக்காது" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY