"ஆறு கிலோ சிக்கன் நான்கு கிலோவாக குறைந்தது எப்படி?" மாணவர் விடுதி ஆய்வில் சிவகங்கை கலெக்டர் லதா
பாலமுருகன். தெ
சாய் தர்மராஜ்.ச
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கடந்தமாதம் லதா பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக வந்திருக்கும் கலெக்டர் வசாயிகள் பிரச்சனைகள், பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பாரா? என மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன.
மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்
இந்த நிலையில், கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த லதா, “மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவேன். குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு போதுமான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உரிய பதில் சொல்லக் கூடிய அதிகாரிகள்தான் வர வேண்டும். வரவேண்டியவர்களுக்கு மாறாக, கீழ்நிலையில் இருக்ககூடியவர்கள் வந்திருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்நிலையில் லதா பதவியேற்ற பின்னர் நடந்த முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தேவகோட்டையில் இருந்து வரவேண்டிய நகராட்சி ஆணையாளர் வராமல் அவருக்குப் பதிலாக வயர்மேன் வந்திருந்தார். இதைக் கண்டு கோபமான ஆட்சியர் "நான் சொன்னேன்னு சொல்லுங்கள் இனிமேல் கமிஷனர் அல்லது அவருக்குக் கீழே உள்ள உயர் அதிகாரிதான் வரவேண்டும்" என்று சொன்னதோடு இல்லாமல் "கமிஷனரை என்னை வந்து சந்திக்கச்சொல்லுங்கள்" என்றார். லதாவின் அதிரடிகளைக் கண்டு அதிகாரிகள் ஆடிப்போய் இருக்கிறார்கள். எந்த அதிகாரியும் பொய் சொல்லி தப்பிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
மக்களோடு மக்களாக
இது இப்படி இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு காளையார்கோவில் அருகே உள்ள அதப்படக்கி கிராமத்துக்கு முதல் நாள் இரவே போய் தங்கிவிட்டார் லதா. அங்குள்ள மக்களோடு மக்களாக இருந்து ரேசன் கடை, அரசு பள்ளி, கண்மாய், குளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்களோடு உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டார். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் ஆய்வுசெய்தவர், "இன்றைக்கு என்ன சாப்பாடு" என்று வார்டனிடம் கேட்டார். "சிக்கன் கறி, சாப்பாடு" என்றதும்,"எத்தனை கிலோ சிக்கன் வாங்கினீங்க" என்று கேட்டார். "6 கிலோம்மா" என்றார் வார்டன். "தராசுல எடைபோடுங்க" என்று உத்தரவிட்டார். ஆனால், சிக்கன் 4 கிலோ எடை மட்டுமே இருந்தது. "யாரை ஏமாத்தப் பாக்குறீங்க. மாணவர்களின் சாப்பாட்டு விஷயத்தில் கைவைக்ககூடாது" என்று அந்த வார்டனை எச்சரிக்கை செய்தார் ஆட்சியர்.
கொசுவலை தராதது ஏன்?
காரைக்குடி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த ஆட்சியர், டெங்கு பாதித்த நோயாளிகளைப் பார்வையிட்டார்.அப்போது கொசு வலைகள் இல்லாமல் நோயாளிகள் இருந்ததைப் பார்த்துவிட்டு, “ஏன் கொசு வலைகொடுக்கவில்லை" என்று கேட்டார். அதற்கு செவிலியர்கள், "நோயாளிகள்தான் கொசுவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்..." என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நோயாளிகள், "இவர்கள்தான் கொசு வலைகொடுக்கவில்லை" என்று உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்கள்.
டெங்கு காய்ச்சல் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளைப் பார்வையிட்ட கலெக்டர், “உங்கள் குழந்தைகளுக்கு என்ன காய்ச்சல் என்று தெரியுமா" என்று கேட்டார் . "தெரியாது" என்றவர்களிடம் "உங்கள் குழந்தைகளுக்கு வந்திருப்பது டெங்கு காய்ச்சல். முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துப் போங்கள்" என்று அறிவுறுத்தினார். "டெங்கு கொசு உற்பத்தியாகும் வீடுகள் கடைகள் வணிகநிறுவனங்கள், எலிசா டெஸ்ட் கருவி இல்லாமல் டெங்கு காய்ச்சல் குறித்து டெஸ்ட் எடுத்து பொதுமக்களை ஏமாற்றும் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கலெக்டர் லதா எச்சரித்தார்.
சிவகங்கை நகராட்சியில் சில தெருக்களைச் சுற்றி வந்த ஆட்சியர், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமலும், தண்ணீர் தேங்கிய இடங்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பக்கத்தில் இருந்த நகராட்சி ஆணையாளரைக் கடுமையாக எச்சரித்தார். "நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க. இப்படி இருந்தால் டெங்கு வராமல் என்ன செய்யும். தெருக்களைச் சுத்தமா வைக்க நடவடிக்கை எடுங்க" என்று உத்தரவிட்டார். இப்படி ஆட்சியரின் மக்கள் நலன் சார்ந்த அதிரடிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
No comments:
Post a Comment