Monday, October 16, 2017


சீரகக் குடிநீர், ஏலாதி சூரணம்... தீபாவளி இனிப்புகளின் பக்கவிளைவுகளை எதிர்கொள்ள எளிய வழிகள்! #HealthAlert

vikatan
Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

நெருங்கிவிட்டது தீபாவளி. இந்த தீப ஒளித் திருநாளில் முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று பட்டாசு மற்றொன்று இனிப்பு. பட்டாசு என்பது தொடக்கத்திலிருந்தே சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமான வில்லன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இனிப்புக்கோ தொடக்கத்திலிருந்தே நேர்மறையான கதாபாத்திரம்தான். பல வருடங்களுக்கு முன்னர் இனிப்பு, ஆரோக்கியத்தை வாரி வழங்கும் ஹீரோவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது கிடைக்கும் இனிப்புகளை, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வில்லன்களாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. தீபத் திருநாளில் இனிப்புகளின் வருகை, அவற்றின் பரிணாம வளர்ச்சி, கலப்பட இனிப்புகள் மற்றும் அதிகளவு இனிப்புகளால் உண்டாகும் உடல் உபாதைகள், அவற்றுக்கான மருந்துகள்... அனைத்தையும் பார்ப்போம்!




பலகாரத்தின் பரிணாமம்!

தீபாவளி அன்று மட்டுமே கிடைத்த நெல்லரிசிச் சோறுதான் பல வருடங்களுக்கு முன்னர் தீபாவளி கொண்டாடியவர்களுக்கு மிகப்பெரிய ஸ்வீட் ரெசிப்பி. காலப்போக்கில் விதவிதமான பலகாரங்கள் தீபாவளி தினத்தன்று இடம்பிடிக்க ஆரம்பித்தன. கலாசாரத்துக்கேற்ப இடம்பிடிக்க வைத்தோம் என்றும் சொல்லலாம். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தொடங்கும் பலகாரத் தயாரிப்புப் பணிகள், இப்போதெல்லாம் ஒரு வருடத்துக்கு முன்னரே தொடங்கிவிடுகின்றன... ’தீபாவளி பலகாரச் சீட்டு’ என்ற பெயரில்!

பாட்டி சுட்ட பலகாரம்!

’காக்கா நரி’ கதைக்கு, பாட்டி சுட்ட வடைதான் சிறப்பு. அதேபோல, தீபாவளிப் பண்டிகைக்கு வீட்டில் உள்ள பாட்டி சுட்ட பலகாரங்கள்தான் மிகச் சிறப்பானவை. இப்போது கொண்டாடப்படும் தீபாவளிகளில், வீட்டில் சுட்ட பலகாரங்களும் இருப்பதில்லை, பாட்டிகளும் இருப்பதில்லை. அப்போதெல்லாம் வீடுகளில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளில் உடல்நலத்தைச் சீராக்கும் கூட்டுப் பொருள்கள் சேர்ந்திருந்தன. இனிப்புச் சுவையின் உயிர்ப்பையும் நாம் உணர்ந்தோம்.




பாட்டியும், பலகாரங்கள் செய்வதில் கைத்தேர்ந்தவர்களும் தயாரித்த இனிப்பு-கார வகைப் பண்டங்களில் சுவை, மணத்தோடு சேர்ந்து ஆரோக்கியமும் நிறைந்திருந்தன. அவர்களுக்குச் செயற்கை நிறமிகளைப் பற்றியோ, ரசாயனங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. ஆனால், அவர்கள் செய்த பண்டங்களின் சுவைக்கு ஈடு இணையில்லை. பாரம்பர்யப் பலகாரங்களுக்கு என்றுமே மகத்துவம் அதிகம்.

’எனக்கு சர்க்கர வியாதி இருக்கு, நான் ஸ்வீட் சாப்பிடறதில்லை’ என்று சில பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் சொல்லியதாக நினைவில்லை. பாரம்பர்ய இனிப்புகளைச் சாப்பிட்டபோது நோயின்றி வாழ்ந்தோம். பண்டிகை நாளன்று அதிகளவில் பலகாரங்கள் சாப்பிட்டால்கூட பெரிதாகத் தொந்தரவுகள் இருக்காது.

கலர் கலர் இனிப்புகள் வேண்டாமே!

இன்று தீபாவளி இனிப்பு-காரங்கள், பல வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன. வீட்டிலேயே செய்யப்பட்ட அதிரசம், லட்டு, முறுக்கு, சீடை, சிறுதானியங்களால் செய்யப்பட்ட தின்பண்டங்கள் போன்றவை ஓரங்கட்டப்பட்டுவிட்டன. மஞ்சள், சிவப்பு, பச்சை என கண்ணைப் பறிக்கிற கலர்களில், கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கவர்ச்சியான இனிப்புகளில்தான் மனம் நிலைகொள்கிறது. வழக்கம்போல நாமும் நிறங்களால் ஈர்க்கப்பட்டு, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறோம். உதாரணமாக, ’ஜிலேபியின்’ நிறம் வருடா வருடம் கூடிக்கொண்டே போகிறது... யாரைக் கவர்வதற்காகவோ!




கலப்பட இனிப்புகள் என்பது மிகப் பெரிய மோசடி. அவற்றுக்கு வண்ணங்களைக் கொடுப்பதற்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் செரிமானம் சார்ந்த பல உபாதைகள் உண்டாகின்றன. பண்டிகை நாளன்று மட்டுமல்லாமல், தொடர்ந்து அதிகளவில் சாப்பிடும்போது, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சரி அப்போது இனிப்புகளே வேண்டாமா? இனிப்புகளைச் சாப்பிடலாம் தவறில்லை. அவை நமது பாரம்பர்ய இனிப்புகளாக இருந்தால் மிகவும் நல்லது. பாரம்பர்ய இனிப்புகளைப் பற்றி வலைதளத்தில் தேடுவதற்குப் பதிலாக வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். பல பலகார வகைகள் தெரியவரும். தவிர்க்க முடியாத இன்றையச் சூழ்நிலையில் சிறிதளவு இனிப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், கண்கள் கூசும் நிறங்களில் இருக்கும் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

செரிமானக் கோளாறுகள்... கவனம்!

முன்பெல்லாம் பண்டிகை நாளன்று மட்டும் அதிக இனிப்புகளைச் சாப்பிட்டோம். இப்போது அனுதினமும் பண்டிகையைப்போல, அதிக இனிப்புகளைச் சாப்பிடுகிறோம். தீபாவளியன்று சில வகை இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் முதல் தொந்தரவு செரிமானம் சார்ந்தது. வயிறு உப்புசம், வயிற்றுவலி, மலக்கட்டு, மந்தம், உணவு எதிர்த்தெடுத்தல் (எதுக்களித்தல்) எனப் பிரசனைகள் நீளும். தேவைக்கு மட்டும் இனிப்பைச் சுவைத்து நம்மை உற்சாகப்படுத்திக்கொள்வது நல்லது. தீபாவளி விடுப்போடு சேர்த்து, மறுநாள் உண்டாகும் உடல் உபாதைகளுக்காகவே கூடுதலாக விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் பலர் இருக்கின்றனர்.

சீரகக் குடிநீர்... சிறப்பு!

தரமற்ற இனிப்புகள், அதிகளவு இனிப்புகளைச் சாப்பிடுவதால் தோன்றும் செரிமானம் சார்ந்த பிரச்னைகளுக்கு, சிறிதளவு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நன்றாகக் கொதிக்கவைத்துப் பருகலாம். ‘அகத்தைச் சீராக்கும் சீரகம்’ என்பதை மறந்துவிட வேண்டாம். வாயுவைக் கண்டிக்கும் தன்மை (அகட்டுவாய்வகற்றி) சீரகத்துக்கு இருக்கிறது.


பஞ்ச தீபாக்கினி சூரணம் பலன் தரும்!

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம். வயிற்றில் நிலைகொண்ட மந்தத்தைப் போக்குவதில் பஞ்ச தீபாக்கினி சூரணம் பலன் தரும். பஞ்ச தீபாக்கினி சூரணத்தில் சேரும் சுக்கு, மிளகுக்கு நஞ்சுமுறிவு தன்மை இருப்பதால், உடலில் தேங்கிய நச்சுகளும் நீங்கும். அன்று தயாரிக்கப்பட்ட பாரம்பர்ய இனிப்புகளில் சீரகம், ஏலம் போன்றவை அதிகளவில் சேர்க்கப்பட்டிருக்கும். இன்றோ சீரகம், ஏலம் மாதிரியான சுவை தரும் செயற்கைச் சுவையூட்டிகள்தான் சேர்க்கப்படுகின்றன.




தீபாவளி லேகியம் நல்லது!

செரிமான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தீபாவளிக்கென்றே சிறப்பாக அந்தக் காலத்தில் லேகியம் தயாரிக்கப்படுவதுண்டு. பெயரளவில் பல மாறுதல்களைப் பெற்று இப்போது `தீபாவளி லேகியம்’ (சுக்கு, வாய்விடங்கம், மிளகு, சீரகம், லவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, தேன், நெய் சேர்த்து செய்யப்படுவது) என்று அழைக்கப்படுகிறது. லேகியம் என்றவுடன் மருந்து என நினைத்துவிட வேண்டாம். இனிப்பாகவும், கூடவே செரிமானத்தைப் பாதிப்படையாமல் வைத்திருக்கும் இனிப்பான மருந்தாகவும் தீபாவளி லேகியம் பயன்படும்.

ஓமக் குடிநீர், சோம்புக் குடிநீர் போன்றவையும் செரிமான உபாதைகளுக்குச் சிறந்தவை. இவை தவிர இஞ்சி லேகியம், செளபாக்கிய சுண்டி லேகியம், ஏலாதி சூரணம், அஷ்டச் சூரணம் போன்ற மருந்துகளும் பயனளிக்கும். இனிப்புகளைச் சாப்பிட்டவுடன் வெந்நீர் அருந்துவது சிறந்தது. மிளகுத் தூளை அதிகமாக உணவுகளில் சேர்க்கவேண்டியதும் அவசியம். சீரகக் குடிநீர், ஓமக் குடிநீர், சோம்புக் குடிநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் போன்றவற்றை வீட்டிலேயே செய்யலாம். இவை சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

தீப ஒளித் திருநாளை தீபங்களோடும், அளவான இனிப்புகளோடும் கொண்டாடுவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எளிமையான இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தி மகிழ்ச்சியாகக் குதூகலிப்போம்! இனிப்புகள் மகிழ்ச்சி தரக்கூடியவை... அவற்றில் ஆரோக்கியக் கூறுகள் நிரம்பியிருக்கும் வரை!

No comments:

Post a Comment

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years

Worrisome trend: Breast cancer cases in younger women doubled in 5 years  AWARENESS MONTH Yashaswini.Sri@timesofindia.com 21.10.2024 Bengalu...