Thursday, October 26, 2017

நெல்லையில், கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த தம்பதியினர் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி



நெல்லையில், கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த தம்பதியினர் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறினார்.

அக்டோபர் 25, 2017, 03:00 AM

நெல்லை,

நெல்லையில், கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த தம்பதியினர் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறினார்.குடும்பத்துடன் தீக்குளிப்பு

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் எம்,.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 28). கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குடும்பத்தோடு தீக்குளித்தார். இதில் அவருடைய மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி ஆருண்யா, அக்‌ஷயா என்ற பரணிகா ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். பலத்த தீக்காயத்துடன் இசக்கிமுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர்

இசக்கிமுத்து குடும்பத்தோடு தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு இசக்கிமுத்து குடும்பத்தினர் காசிதர்மம் புதுமனை தெருவில் உள்ள தளவாய்ராஜ் வீட்டில் வாடகைக்கு இருந்தபோது தனது குழந்தைகளின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு ரூ.60 ஆயிரமும், வீடு கட்டுவதற்கு ரூ.85 ஆயிரமும் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, தளவாய்ராஜின் மனைவி முத்துலட்சுமியிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் மானூரை சேர்ந்த ஆறுமுககோனார் மனைவி இசக்கியம்மாளிடம் ஏற்கனவே வாங்கி இருந்த கடனுக்காக முத்துலட்சுமியின் 19 கிராம் தங்க நகையையும் வாங்கி உள்ளார்.

இதேபோல் சுப்புலட்சுமி அதே ஊரை சேர்ந்த பலரிடம் கடன் வாங்கி உள்ளார். இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் இந்த பணத்தை வைத்து செங்கோட்டையில் ராஜ், முப்புடாதி தேவர் ஆகியோருடைய வீடுகளை தலா ரூ.50 ஆயிரம் கொடுத்து ஒத்திக்கு வாங்கி உள்ளனர். மேலும் இவர்கள் காசிதர்மத்தில் 1½ செண்ட் நிலம் வாங்கி உள்ளனர். மேலும் பலருக்கு இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளனர்.வங்கியில் நகைகளை வைத்து...

மேலும் காசிதர்மத்தை சேர்ந்த பரமசிவன் மனைவி கண்ணம்மாள், சுப்புலட்சுமியிடம் 10 நாட்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வட்டி வீதம் ரூ.65 ஆயிரம் வாங்கியதாகவும், அத்துடன் தனது 48 கிராம் தங்க நகைகளை சுப்புலட்சுமி மூலம் வங்கியில் ரூ.95 ஆயிரத்திற்கு அடகு வைத்ததாகவும், சுப்புலட்சுமி அதற்கான ரசீதை தர மறுப்பதாகவும், மேலும் தான் சுப்புலட்சுமியிடம் ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறி அவதூறாக பேசி தன்னுடன் சண்டைக்கு வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கண்ணம்மாள் கடந்த 20–4–2017 அன்று அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் 2 பேரும் நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் தேடிக்கொள்வதாக எழுதி கொடுத்ததன் பேரில் அந்த புகார் மனு முடிக்கப்பட்டது.

மேலும் தளவாய்ராஜ் மனைவி முத்துலட்சுமி, அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 18–8–2017 அன்று இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் தன்னிடம் பணம், நகையை வாங்கிக்கொண்டு கொடுக்க மறுப்பதாக புகார் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் ஆஜராகவில்லை. இசக்கிமுத்துவின் தந்தை பலவேச தேவர் மட்டுமே ஆஜரானார்.தற்கொலை முயற்சி

இதன் தொடர்ச்சியாக முத்துலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 11–9–2017 அன்று இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் மீது புகார் கொடுத்தார். அந்த புகார் மனு அச்சன்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சன்புதூர் போலீசார் விசாரணைக்கு அழைக்க சென்றபோது காசிதர்மம் கிராமத்தில் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் குடியிருக்கவில்லை என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய உறவினர்களிடம் தெரிவித்தும் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி 30–9–2017 அன்று வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் போலீசில் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் தன்னிடம் வாங்கிய பணம் மற்றும் நகைகளை திருப்பிதராததால் மனம் உடைந்து வி‌ஷம் குடித்ததாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் ஊரில் இல்லை.பதிவு தபால் திரும்பி வந்தது

இந்த நிலையில் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர், தங்களிடம் முத்துலட்சுமி கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுப்பதாக 4–9–2017, 18–9–2017, 25–9–2017, 9–10–2017 ஆகிய தேதிகளில் கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் மூலம் அச்சன்புதூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனு மீது நடக்கும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினருக்கு பதிவு தபால் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தபால் அவர்களுக்கு வாங்கப்படாமல் அந்த முகவரியில் ஆள் இல்லை என்று திரும்பி மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்தது.கடும் நடவடிக்கை

மேலும் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் கடந்த 4 மாதங்களாக இந்த முகவரியில் வசித்து வரவில்லை என்று கிராம நிர்வாக அலுவலர் 16–10–2017 அன்று சான்று வழங்கி உள்ளார். இதனால் இந்த மனுக்கள் மீது இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினரிடம் விசாரிக்க முடியவில்லை. இதனால் 16–10–2017 அன்று ஆஜரான முத்துலட்சுமி இது சம்பந்தமாக உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு தேடிக்கொள்ளவேண்டும் என்றும், அவர்களிடம் எந்த பிரச்சினையும் செய்யமாட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தென்காசி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவருடைய விசாரணை அறிக்கையின் பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.246 கந்துவட்டி வழக்குகள்

கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 246 கந்துவட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 4 வழக்கில் விசாரணை முடிந்து நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் யார், யார்? கந்துவட்டி கொடுக்கிறார்கள்? என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுக்கப்படுகின்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை மேற்கொள்ளப்படும். மாதந்தோறும் கந்துவட்டி சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...