Thursday, October 26, 2017

கரிக்கட்டை முதல் டிஜிட்டல் பேனர்கள் வரை... விளம்பரங்களும் விதிமுறைகளும்..!

தமிழகம் ஒரு விளம்பர விரும்பி மாநிலம்! இந்த மாநிலத்தின் கலாசாரப் பயணத்தில் விளம்பரங்களுக்கு என்றும் தனிப் பங்கு உண்டு. அதன் வடிவங்கள், வேறு வேறாக இருந்தாலும், தமிழகத்தின் நிகழ்வுகளில் விளம்பரங்கள் இல்லாமல் போகாது! விளம்பரங்களால் மட்டுமே சில நிகழ்வுகள், வரலாற்று அத்தியாயங்களாக மாறிப்போன வரலாறும் தமிழகத்துக்கு உண்டு. சாதாரண வீட்டில் நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சியில் இருந்து கல்யாண வீடு வரைக்கும்... கட்சிக் கிளைக்கூட்டத்தில் இருந்து பிரமாண்டமான மாநாடுகள் வரையிலும், பத்துக்குப் பத்து அளவுள்ள டீ-கடை தொடங்கி, ஷாப்பிங் மால்களின் திறப்பு விழாவுக்கும், விளம்பரங்கள் வேண்டும்; இவை அனைத்தையும் தாண்டி, துக்க வீட்டிலும்கூட சிலருக்கு கெத்துக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு குக்கிராமங்கள், மாநகரங்கள் என்ற வேறுபாடுகள் எதுவும் கிடையாது. தமிழக மக்களின் இந்த மனோபாவத்தின் ஓரத்தில் இருந்துதான், நடிகர்களை நாடாள வைத்த வரலாறும் பிறந்திருக்க வேண்டும்.

விளம்பரங்களின் வரலாறு!




கரிக்கட்டைகளை வைத்துச் சுவர்களில் எழுதிப் பிரசாரம் செய்தது ஒரு காலம். அதன்பிறகு, சுவர்களில் வெள்ளை அடித்து, அதன்மேல் காவி, கறுப்பு, சிவப்பு, நீல நிறப் பொடிகளை கரைத்து எழுதி விளம்பரம் செய்யும் வழக்கம் பிறந்தது. இதை பேப்பர்களில் எழுதி தட்டி போர்டுகளாக வைப்பதும், சைக்கிள் டயர்களில் காகிதங்களை ஒட்டி, அதில் வண்ணங்களைக் கரைத்து எழுதி ஒட்டுவதும் இன்றும் கிராமப்புற பகுதிகளில் உண்டு. அதன்பிறகு, அந்த இடங்களை வால் போஸ்டர்கள் பிடித்தன. துண்டுப் போஸ்டர்கள், சுவர் போஸ்டர்களாக மாறின. அண்ணா காலத்திலேயே கட்-அவுட்கள் இந்த வரிசையில் இணைந்துகொண்டன. ஆனால், அவை சாதரண சிறிய சைஸ் கட்-அவுட்கள். நிலைமை அப்படி இருந்தபோதே, விளம்பரம் செய்வதற்கு சுவரைப் பிடிப்பதிலும், கட்-அவுட் வைப்பதற்கு இடத்தை ஆக்கிரமிப்பதிலும், போஸ்டருக்கு எதிர் போஸ்டர் அடிப்பதிலும் தகராறுகள், அடிதடிகள், கலவரங்கள் நடந்து... அவை கொலைகளில் முடிந்தது உண்டு. அப்படிப்பட்ட ரத்தச் சரித்திரம், தமிழக அரசியலுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் உண்டு! ஆனால், அப்போது சுவர் விளம்பரங்களால் விபத்துகள் ஏற்பட்டதில்லை; சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறியதில்லை; தூக்கி நிறுத்தப்பட்ட கட்-அவுட்கள் சரிந்து உயிர்ப் பலிகள் ஏற்பட்டதில்லை. காட்சிகள் 1990-களுக்குப் பிறகு விளம்பரங்களின் வடிவங்கள் மாறியபோது, இவை எல்லாம் நடக்கத் தொடங்கின.

பிரமாண்ட கட்-அவுட்கள்!



1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப்பிடித்து, ஜெயலலிதா முதல் அமைச்சரான பிறகு, ‘கட்-அவுட்’ கலாசாரம் எனத் தனியாக ஒரு கலாசாரம் உருவானது. ஆளுயர கட்-அவுட்கள் போய், வானுயர கட்-அவுட்கள் வந்தன. ஜெயலலிதாவுக்காக, 150 அடியில் அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் வைக்கப்பட்டன. 1992-ம் ஆண்டு மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில்தான் 150 அடி உயர கட்-அவுட்கள் அறிமுகமானது. அங்கு அதுபோல் வைக்கப்பட்ட ஒரு கட்-அவுட் சரிந்து சிலர் காயம் அடைந்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க-வின் கிளைக்கழக கூட்டம் என்றாலும், அதில் ஜெயலலிதாவின் ஆளுயர கட்-அவுட் இடம்பெறும் என்பது எழுதப்படாத விதியானது. வேறு பல இடங்களில் அதுபோல் வைக்கப்பட்ட கட்-அவுட் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் சில இடங்களில் நடைபெற்றது. 1991-96 வரை நடைபெற்ற ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் வெறுக்க, கட்-அவுட்களும் ஒரு காரணமானது. அதன்பிறகு, 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல் அமைச்சர் ஆனார். அவர் அந்த ஆட்சியில், பிரமாண்ட கட்-அவுட் விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். தி.மு.க மாநாடு நடைபெறும் திடல், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம் தவிர வேறு இடங்களில் பிரமாண்ட கட்-அவுட்களை தி.மு.க-வினர் தவிர்த்தனர்.

லித்தோ போஸ்டர்கள்!



2000-வது ஆண்டுக்குப்பிறகு, விளம்பர வரிசைகளில், லித்தோ போஸ்டர்கள் வந்து ஒட்டிக்கொண்டன. அதை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு நிகராக ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் அடித்து ஒட்டி ஊரைக் கதிகலங்க வைத்தனர். அதற்கு முன்பாக, 4 பிட், 5 பிட் கலர் போஸ்டர்களாக இருந்தவை, அதன்பிறகு 30 பிட் போஸ்டர்கள் முதல் 50 பிட் போஸ்டர்கள் என்று மாறின. திருச்சியில் 200 பிட் லித்தோ போஸ்டர்களை ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ஒருமுறை அடித்து ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால், லித்தோ போஸ்டர்கள் அதிகம் செலவு பிடிக்கும் சமாசாரம். அதனால், அதற்கு அரசியல் கட்சிகள், சினிமா ரசிகர்களிடமே வரவேற்பு குறைவாகத்தான் இருந்தது. ஆனால், லித்தோ அச்சகங்கள் பரபரப்பாகவே இயங்கி வந்தன. அந்தப் பரபரப்பு தூள் பறந்து கொண்டிருந்த நேரத்தில், சத்தமில்லாமல் டிஜிட்டல் பேனர்கள் சந்தைக்கு வந்தன.

டிஜிட்டல் பேனர்களின் சகாப்தம்!

டிஜிட்டல் பேனர்களின் வருகை, அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்கள், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பொற்காலமாகத் திகழ்ந்தன. அவர்களோடு, சமானிய மக்களின் விளம்பர மோகம் அப்பட்டமாக வெளிப்பட்டது டிஜிட்டல் பேனர் சகாப்தத்தில்தான்! வீட்டில் நடக்கும் காது குத்து, கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல... துக்க நிகழ்வுகளையும் பிளக்ஸ் பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டன. தமிழகத்தின் பிரதான நகரங்கள் அரசியல் தலைவர்களின் பிளக்ஸ் பேனர்களால் நிறைந்தன; தமிழகத்தின் சாலைகள் வாகனங்களைவிட, வணிக நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்களைத்தான் கூடுதலாக சுமந்துநின்றன; தமிழகத்தின் வீதிகள் காது குத்து, கல்யாணம், கோயில் விழாக்கள், ரசிகர் மன்றங்களின் பிளக்ஸ் பேனர்களுக்குள்ளேயே குடிபுகுந்துவிட்டன. மவுண்ட்ரோடு கட்-அவுட் என்ற பழைய பெருமையை மவுண்ட் ரோடு பிளக்ஸ் பேனர்கள் தட்டிப் பறித்தன.

விபத்துகளும், பிரச்னைகளும்!



சுவர்களில் பெயின்ட் மற்றும் புளோரோசென்ட் பவுடர்களால் வரையப்படும் ஓவியங்களைப்போல... கட்-அவுட்கள் வைப்பதற்கு மெனக்கெடுவதைப்போல... பிளக்ஸ் பேனர்கள் வைக்க அதிகம் சிரமப்படத் தேவை இல்லை; வேலை எளிது. ஆனால், பெயிண்ட் விளம்பரங்களில், கட்-அவுட்களில் கிடைக்காத துல்லியமும், வண்ணங்களும் வடிவமைப்பும் பிளக்ஸ் பேனர்களில் கிடைக்கும். அதேநேரத்தில் அந்த பிளக்ஸ் பேனர்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டியவர்கள் விபத்துக்குள்ளானார்கள். விபத்துக்களுக்கான காரணங்களில் பிளக்ஸ் பேனர்களும் போலீஸ் ரெக்கார்டில் ஒரு குற்றவாளியாகப் பதிவானது. பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களுக்கு இடம் பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. தனியார் இடங்கள், வீடுகளை ஆக்கிரமிக்க நினைக்கும் கும்பல், குடிசை போடுவதை விட்டுவிட்டு, பிளக்ஸ் பேனர்களை வைக்கத் தொடங்கின. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை வரைமுறைப்படுத்த வலியுறுத்தி வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “தனியார் இடங்களில் அவர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கக்கூடாது, நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக- நிகழ்ச்சி முடிந்த பிறகு இரண்டு நாள்களுக்குள் பேனரை அகற்ற வேண்டும், பேனர் வைப்பதற்கு போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும், மாநகராட்சி இல்லாத பகுதிகளில் நகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்று வரைமுறைகள் வகுத்துத் தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பிறகும் அவை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பது தனிக்கதை! அரசியல் கட்சிகள், மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அத்துமீறல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. ஆனால், ரசிகர் மன்றங்கள், பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தனர். இந்த நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிளக்ஸ் பேனர்களை மையமாக வைத்து, கடந்த 23-ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது, மொத்தமாக அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்களிடம் பற்றி எரியும் பிளக்ஸ் பேனர் வெறியைத் தணிக்கத் தண்ணீர் ஊற்றி உள்ளது.

வழக்கும்... தீர்ப்பும்...



சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அண்ணாநகர் நாவலர் தெருவைச் சேர்ந்தவர் திருலோச்சன குமாரி. அவர் வீட்டின் முன்பு மதி என்பவர் வைத்த பிளக்ஸ் பேனரை அகற்றக்கோரி அவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 23-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேரில் ஆஜராகி, மனுதாரர் கூறுவது போன்று அவரை மிரட்டவில்லை என்றார். மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், “மனுதாரர் இடத்தில் உள்ள பிளக்ஸ் பேனர் உடனடியாக அகற்றப்படும், எதிர்காலத்தில் சென்னை மாநகரம் முழுவதும் உரிமையாளர்களின் முன்அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைப்பது, தனி நபர்களுக்குச் சொந்தமான சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது தடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.

அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, அதன்பிறகு அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில், “மனுதாரர் இடத்தில் உள்ள பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும். அந்த பேனரை அகற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் திறந்தவெளிகளின் அழகை சீர்குலைப்பதை தடுக்கும் சட்டப்படி, தமிழகத்தைத் தூய்மையாக, அழகாக, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைத் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். தேவையில்லாமல் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்து அதன் அழகை சீர்குலைக்கக் கூடாது. குறிப்பாக, பேனர் பிளக்ஸ் போர்டு, சைன் போர்டுகளில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. பேனர், பிளக்ஸ் போர்டு, சைன் போர்டு ஆகியவை முறையான அனுமதி வாங்கி வைக்கப்பட்டாலும்கூட, அதிலும் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் இடம்பெறக்கூடாது. அதை உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. அதை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பித்து இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

உயிருடன் உள்ளவர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்றால், அதை வேறு யாருக்கு வைப்பது? தங்களைத் தவிர்த்துவிட்டு, இறந்தவர்களின் படங்களைப்போட்டு, பிளக்ஸ் பேனர் வைக்க, உயிரோடு இருக்கும் எந்தத் தலைவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்; அப்படி ஒரு பேனரை அடிக்க எந்தத் தொண்டனும் சம்மதிக்கமாட்டார். தங்கள் அபிமான நடிகரின் போட்டோவைப் போடாமல், அந்த நடிகரின் ரசிகர்கள் வேறு யாருக்கு பேனர் வைக்கப்போகிறார்கள்? அதனால், இனிமேல் அவர்களுக்கும் பிளக்ஸ் அடிக்கும் வேலை மிச்சம்! உயிரோடு இருப்பவர்களுக்கு நடக்கும் காதுகுத்து, கல்யாண வீடுகளில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் படங்களைப் போட்டுத்தான் பிளக்ஸ் பேனர்களை வைத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கம் சுய விளம்பரம் மட்டுமே! இனி அவர்களாலும் அதைச் செய்ய முடியாது. துக்க வீடுகளில் இறந்தவரின் படத்தைப் போட்டு வேண்டுமானால், பிளக்ஸ் பேனர்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லி, உயிரோடு இருப்பவர் தன் படத்தைப் போட்டுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்களைப் போட்டு பேனர் வைக்கலாமா? இல்லை அதுவும் கூடாதா? என்பது பற்றி தெளிவான விளக்கம் இல்லை. அதனால், இப்போதைக்கு அரசியல்வாதிகள், நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் அபிமானத் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை மட்டும் விதவிதமாக டிசைன் செய்து, பேனர் வைத்துக்கொள்ள மட்டும் வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...