வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல்- ஆதாரை இணைக்க வீட்டுக்கு வந்து சரி பார்க்கும் வசதி: மத்திய அரசு புது யோசனை
புதுடெல்லி: வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு வீட்டுக்கே சென்று ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு வசதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு நலத்திட்டம் மட்டுமின்றி, அனைத்து சேவைகளுக்கும் ஒரே அடையாளச்சான்றாக ஆதாரை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டும், போலி பெயர்களில் பயன்படுத்தப்படும் மொபைல் எண்களை முடக்கும் நோக்கிலும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த மார்ச் 23ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளன. ஆனால் நடைமுறையில் இது எளிதாக இல்லை. வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் நேரில் சென்று ஆதார் எண் இணைக்க முடியாமல் உள்ளனர். அதோடு விரல் ரேகை சரியாக இல்லாத முதியோர், நேரில் சென்றாலும் ஆதார் எண் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் மொபைல் நிறுவனங்கள் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அவர்கள் வைத்திருக்கும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்ப்பு செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்களிடம் ஆதார் சரிபார்ப்பு செய்வது நடைமுறையில் சிக்கலாக உள்ளது. அருகில் மொபைல் - ஆதார் இணைப்பு மையங்கள் இல்லாதவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும், ஒரு முறை பாஸ்வேர்டு மூலமாகவும் ஆதார் உள்ளீடு செய்யும் வசதியை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வர வேண்டும். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஏதேனும் ஒரு எண்ணை ஆதாருடன் இணைத்திருந்தால், அதன் அடிப்படையில் மற்றொரு எண்ணையும் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் சரிபார்க்கலாம். இதுபோல் ரேகை தேய்ந்து போன வயதானவர்கள் போன்றோரிடம் ஐரிஷ் கருவி மூலம் கண் கருவிழியை ஸ்கேன் செய்து ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஐரிஷ் கருவி வசதியுடன் ஆதார் இணைப்பு மையங்களை அதிகமாக நிறுவி வாடிக்கையாளர்களுக்கு உதவ வேண்டும். ஆன்லைன் மற்றும் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் சரிபார்ப்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பணியையும் எளிதாக்கும் என்றார். இதுவரை சுமார் 50 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தே பதிவேற்றம் செய்யும் வசதி இருந்தால் இணைப்பு அதிகரிக்கும். வயதானவர்களின் எண்களை இணைக்க கருவிழி ஸ்கேன் கருவி வசதி அவசியம். வாடிக்கையாளர்கள் உடனே செல்லும் தூரத்தில் பதிவு மையங்களை பரவலாக்க வேண்டும்.
No comments:
Post a Comment