ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்
சென்னை - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் திருவாரூர் வழியாக இயக்கப்பட உள்ளதாக ரயில்வே கால அட்டவணையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் தனது ரயில் சேவை 2011 செப்.27-ல் தொடங்கப்பட்டது. திருவாரூர்-மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை பணி நடைபெற்றதை அடுத்து, இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சாவூருக்கு இரவு 10.15 மணி வந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு செல்கிறது. அதேபோல, சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தஞ்சாவூர் வருகிறது.
இந்நிலையில், ரயில்வே கால அட்டவணை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மன்னை எக்ஸ்பிரஸ் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் டி.சரவணன் கூறியபோது, “இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகவே இயக்கப்படும் என திருச்சியில் நடைபெற்ற ரயில் பயணிகள் நலச்சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக திருவாரூர் வழியாக இயக்கப்பட உள்ளது. இதனால் திருவாரூர் ரயில் நிலையம் மட்டுமே பயன்பெறும்” என்றார்.
தஞ்சாவூர் ரயில் பயணிகள் சங்க சட்ட ஆலோசகர் ஜீவகுமார், “இந்த ரயிலை தஞ்சாவூர் வழியாகவே மீண்டும் இயக்க வேண்டும். இல்லாவிட்டால், தஞ்சாவூர்- மயிலாடுதுறை இடையே இணைப்பு ரயில் இயக்க வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment