Thursday, October 26, 2017

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடி எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு


திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிர்வகிப்பதில் இரு தரப்புக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால், அக்கல்லூரியில் பயின்ற 17 மாணவர்கள் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில், ‘‘வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையும் தயங்குகிறது. சில நேரங்களில் காவல் துறையும் அவர்களுடன் கைகோர்த்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது. தமிழகத்துக்கு வெளியே உள்ள லெட்டர்பேடு சட்டக் கல்லூரிகளில் சட்டப் பட்டத்தை விலை கொடுத்து வாங்கும் சிலர்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் எத்தனை சட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். அதில் எத்தனை பேர் வெற்றிகரமாக படிப்பை முடித்துள்ளனர். எத்தனை பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தை அகில இந்திய பார் கவுன்சில் சமர்ப்பிக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மீது காவல்துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்புத் தலைவராக பதவி வகிக்கும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவரான வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழக பார் கவுன்சிலில் 713 பேர் பள்ளி, கல்லூரி படிப்பை பூர்த்தி செய்யாமல், நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்ஏ பட்டம் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, அவர்களின் வழக்கறிஞர் பதிவை உடனடியாக ரத்து செய்ய நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். ஆவணங்களே இல்லாத 42 வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பார் கவுன்சில் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் சரிபார்ப்பதில்லை.
தற்போது தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை. எனவே, அரசு தலைமை வழக்கறிஞர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இக்குழுவில் இருக்கக் கூடாது. அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உண்மையான வழக்கறிஞர்களை வைத்துதான் பார் கவுன்சிலையும் நடத்த வேண்டும் என்பதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தார்.
இந்நிலையில், 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு, அவர்களின் கல்விச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து பார் கவுன்சில் நேற்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...