தெற்கு ரயில்வே அறிவிப்புக்கு முன்பே கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்பு வெளியானது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை, ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்படும். ஒவ்வொரு முறையும் கால அட்டவணை அறிவிக்கும்போது புதிய ரயில்கள் அறிவிப்பு, ரயில்களின் நேரம் மாற்றம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள், ரயில் எண்கள் மாற்றம் உள்ளிட்டவை அதில் இடம் பெற்றிருக்கும்.
நவம்பர் 1-ம் தேதி
இந்த ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி புதிய அட்டவணை வெளியிடப்படும் என்றும் அதுவரை தற்போதைய ரயில் கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்பிறகு, ரயில் கால புதிய அட்டவணை வெளியீடு நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தெற்கு ரயில்வே இன்னும் கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், நேற்று முன்தினம் வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் புதிய கால அட்டவணை பட்டியல் வெளியாகியுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள புதிய கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்புகளில் ஒரு சில மாற்றம் இருக்கும். எனவே, இறுதி செய்த பிறகு தெற்கு ரயில்வே முழு விவரங்களுடன் அறிவிக்கும். மேலும், கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்’’ என்றனர்.
மறுப்பு தெரிவிக்கவில்லை
இதுதொடர்பாக டிஆர்இயு உதவி தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
ரயில்வேயில் காலஅட்டவணை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது என்பது முக்கியமானதாகும். குறிப்பாக, புதிய ரயில்கள் அறிவிப்பு என்பது மக்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டிய ஒன்றாகும். இதற்கிடையே, புதிய கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்பு நேற்று முன்தினம் தகவல் வெளியாகியுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து தெற்கு ரயில்வே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக உண்மை நிலவரத்தை தெற்கு ரயில்வே தெரிவிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment