Saturday, October 28, 2017

கலைக்கப்பட்டது அண்ணா பல்கலை. தேடல் குழு: மூன்றாவது தேடல் குழு எப்போது?


By DIN  |   Published on : 28th October 2017 04:09 AM 
anna university

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழு கலைப்பட்டதால், கடந்த 4 மாதங்களாக அந்தக் குழு மேற்கொண்ட பணிகள் அனைத்தும் வீணாகிப் போயுள்ளதாக பேராசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் துணைவேந்தருக்காக காத்திருந்த அண்ணா பல்கலைக்கழகம், தொடர்ந்து காத்திருக்க வேண்டியச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் 2016 மே 26 -ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பிறகு, பல மாதங்களுக்குப் பின்னர் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களை அப்போதைய தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நிராகரித்தார். 
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். சுந்தரத்தேவன், கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர், பேராசிரியர் கே. அனந்த பத்மநாபன் ஆகியோர் அடங்கிய புதிய தேடல் குழு கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பணி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், குழுவில் பேராசிரியர் கே.அனந்த பத்மநாபன் நியமிக்கப்பட்டது, பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த சர்ச்சை காரணமாக, தேடல் குழு தலைமைப் பதவியை ஆர்.எம். லோதா ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை, அப்போதைய தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு அனுப்பினார். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து , லோதாவின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்க மறுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உயர் கல்வித் துறை அதிகாரிகளிடையே எழுந்தது.
இதற்கிடையே, தமிழகத்துக்கு புதிய முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட்டார். ஆனால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில், இந்தத் தேடல் குழு கலைக்கப்பட்டதாக தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆளுநர் அலுவலகத்திலிருந்து உயர் கல்வித் துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியது:
துணைவேந்தர் தேடல் குழு கலைக்கப்பட்டதாக, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை தெரிவு செய்வதற்கு மீண்டும் புதிய தேடல் குழு அமைக்கப்பட வேண்டும். இதனால், ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகம் மேலும் 4 முதல் 5 மாதங்கள் இதற்காக காத்திருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, விரைவில் புதிய தேடல்குழு அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது:
அண்ணா பல்கலைக்கழக தேடல் குழு மீண்டும் கலைக்கப்பட்டிருக்கிறது. இதில், ஆளுநர் பிரதிநிதியான உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் பல்கலைக்கழக பிரதிநிதியான பேராசிரியர் கே.அனந்தபத்மநாபன் இருவர் மட்டுமே குழுவிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அரசு பிரதிநிதியான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.சுந்தரத்தேவன் குழுவில் தொடர்கிறார். எனவே, ஆளுநர் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி ஆகிய இருவர் மட்டுமே இப்போது புதிதாக நியமிக்கப்பட வேண்டும். 
எனவே, அதிகபட்சம் 10 நாள்களில் புதிய தேடல் குழு அமைக்கப்பட்டு, விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டுவிடுவார் என்றார் அவர்.
 

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...