Thursday, October 19, 2017

ஒக்கூரில் குடிநீர் பஞ்சம் : ஒரு குடம் ரூ.10


சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூரில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதால் ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒக்கூரில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 6 'போர்வெல்' அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால் குடிக்க, சமைக்க முடியாது. மற்ற உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
'போர்வெல்களை' முறையாக பராமரிக்காததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சில தெருக்களில் பல மாதங்களாக தண்ணீர் வினியோகம் இல்லை. மேலும் அக்கிராமத்தில் ஐ.ஜி.எப்.எப்., திட்டத்தில் 2015-16 ல் 7 லட்சம் ரூபாயில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு, தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆரம்பக் கட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடம் 2 ரூபாய் வீதம், ஒரு குடும்பத்திற்கு 2 குடங்கள் வழங்கப்பட்டன. காலப்போக்கில் 2 நாட்களுக்கு ஒருமுறை ஒரு குடம் மட்டுமே வழங்கப்பட்டது. பெண்கள் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து சென்றனர். முறையாக பராமரிக்காததால் மூன்று மாதங்களுக்கு முன் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது. இதனால் தனியாரிடம் ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 

கிராமமக்கள் கூறியதாவது: ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுதுபார்க்கவில்லை. மேலும் உவர்ப்பு நீரும் சரியாக வருவதில்லை. இதனால் தண்ணீருக்கே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY