Thursday, October 19, 2017

எங்கெங்கும் டெங்கு!

எங்கெங்கும் டெங்கு!
தீபாவளி பண்டிகை உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கடந்து போய்விட்டது. 
ஆனால் முன்பு எப்போதும் இல்லாதவாறு, இந்த பண்டிகை காலத்தை தமிழக மக்கள் மறக்க 
முடியாது. 'டெங்கு காலமாய்' இந்த பண்டிகை காலம் அமைந்தது துரதிருஷ்டமே. கடந்த 
50 நாட்களாக தமிழகம் முழுவதும், எங்கெங்கு காணினும் டெங்கு பாதிப்பும், மரணமும், வைரஸ்காய்ச்சலும் தான். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மட்டும் 79 பேர் வரை டெங்குவால் இறந்துள்ளனர். மத்திய குழுக்கள், மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு என அரசு இயந்திரம் டெங்குவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாலும், உயிரை காவு வாங்க தாண்டவமாடும் கொசுக்களிடம் இருந்து 
நம்மால் தப்ப முடியவில்லை. தென்மாவட்டங்களில் டெங்கு நிலை என்ன? 

நமது நிருபர் குழுவின் நேரடி ரிப்போர்ட்...

மதுரையில் 20 பேர் பலி : மதுரையில் அமைச்சர் ராஜு வசிக்கும் செல்லுார் உட்பட மாவட்ட அளவில் வெவ்வேறு இடங்களில் டெங்கு பாதித்து 8 குழந்தைகள் உட்பட 20 பேர் 
பலியாகியுள்ளனர். இங்கு, கடந்த 3 மாதங்களில் 15,045 பேருக்கு காய்ச்சல் பாதித்ததில், 
1,545 பேருக்கு டெங்கு அறிகுறி உறுதியானது. மதுரையில் டெங்குக்கு தினமும் இருவர் வீதம் 
பலியாவது வாடிக்கை ஆகிவிட்டது.மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் 
15 ம் தேதி வரை அமைச்சர் ராஜு வசிக்கும் செல்லுாரில் சிறுமி சஞ்சனா,4, போலீஸ்காரர் 
தங்கச்சாமி,28, உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர். மாவட்டத்தில் 900 துப்புரவு பணியாளர்கள் ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்ட அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப் பட்டோர் வருகின்றனர் என கண்காணித்து அந்த 
பகுதியில் சுகாதார துறையினர் முகாமிட்டு கண்காணிக்கின்றனர். ஜூலையில் 367, ஆகஸ்டில் 245 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டினர். செப்டம்பரில் 193 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது அலுவலகங்களில் 
இலவசமாக நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. விஸ்வநாதபுரத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பொது காய்ச்சல் கண்காணிப்பு மையம் செயல்படுகிறது. பொது மக்கள் இங்கும் அல்லது கட்டமணில்லா தொலைபேசி 104ல் புகார் செய்யலாம் என சுகாதார அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் பலி 41 : திண்டுக்கல் மாவட்ட அளவில் 'டெங்கு' மற்றும் காய்ச்சல் பாதிப்புக்கு 41 பேர் வரை இறந்துள்ளனர். பலநுாறு பேர் தினமும் காய்ச்சல் பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பரவலாக காய்ச்சல் இருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பே பழநி, அ.கலையம்புத்துார், தொப்பம்பட்டி, ஆயக்குடி பகுதியில் இதுவரை 23 பேர் இறந்துள்ளனர். தினமும் 200 பேராவது அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். திண்டுக்கல் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 7 பேருக்கு மேல் இறந்துள்ளனர். இதேபோல நத்தம், சாணார்பட்டி பகுதியில் 3 பேர், வேடசந்துார் பகுதியில் 4 பேர், அம்மையநாயக்கனுார், வெள்ளோடு பகுதியில் 3 பேர் என மொத்தம் மாவட்ட அளவில் 41 பேர் வரை இறந்துள்ளனர்.சுகாதார துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் கூறுகையில், ''வைரஸ் காய்ச்சல் மட்டுமின்றி வேறு உடல் நலக் குறைவாலும் பலர் இறந்துள்ளனர். இருப்பினும் 
சுகாதார துறை சார்பில் விழிப்புணர்வு, நிலவேம்பு கஷாயம் வழங்குதல், பாதிப்பு பகுதியில் முகாமிட்டு நடவடிக்கை என தீவிரமாக இயங்கி வருகிறோம்'' என்றார். திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு ஏற்படுத்தியுள்ளனர்.

தேனியில் எப்படி : தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த காவியா 6, ராதாஸ்ரீ ,7, அழகேஸ்வரி,12, சம்பத் குமார்,7, ஆகியோர் காய்ச்சலால் அடுத்தடுத்து பலியாயினர். ஆனால் அவர்களுக்கு 'டெங்கு' பாதிப்பில்லை; பல்வேறு காரணங்களால் இறந்ததாக டாக்டர்கள் 
தெரிவித்தனர். கடந்த வாரம் போடியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி ராஜேஸ்வரி,29, 'டெங்கு'வால் இறந்தார். அதனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டது. தனியார் மருத்துவமனையில் 'டெங்கு'வால் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு கூறியதாவது: இங்கு 'டெங்கு' சிறப்பு வார்டு ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. சிறப்பு ரத்த வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'டெங்கு'வை உறுதிப்படுத்த எலிசா ரீடர் மற்றும் தொடர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 250 குழந்தைகள் உள்ளிட்ட 550 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 'டெங்கு' சிறப்பு வார்டில் தற்போது 60 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 2 பேருக்கு மட்டுமே பாசிட்டிவ் உள்ளது,''என்றார்.

ராமநாதபுரத்தில் பலி 5 : ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்குவால் இதுவரை ஐந்து பேர் பலியாகி உள்ளனர். ஆனால், டெங்கு பாதித்து ஒருவர் மட்டுமே இறந்ததாக மாவட்ட நிர்வாகம் 
தெரிவித்துள்ளது.தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்து இறந்தவர்களை இந்த பட்டியலில் சேர்க்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.ராமநாதபுரம், பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேர காய்ச்சல் சிறப்பு வார்டுகளில் 38 பேர் டெங்கு காய்ச்சலுக்கும், 180 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும் சிகிச்சை பெறுவதாக, கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் 663 டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் உள்ளனர். உள்ளாட்சி துாய்மைக்காவலர்கள் 1834 பேர், உள்ளாட்சி சுகாதார பணியாளர்கள் 1,667 பேர் வீடு வீடாக சோதனை செய்கின்றனர். 30 படுக்கைகள் கொண்ட 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் பலி 9 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை கல்லுாரி மாணவி, சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். மாவட்டத்தில் காரைக்குடி, இளையான்குடி மானாமதுரை பகுதிகளில் இருந்து தினமும் 100 முதல் 130 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். 
கடந்த அக்., 1 முதல் 15 தேதி வரை 1500 க்கும் அதிகமானவர்கள் காய்ச்சலுக்காக புறநோயாளிகள் பிரிவிலும், அவசர சிகிச்சைப்பிரிவிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.டெங்கு பாதிப்பில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் 27 வது இடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த தகவல்கள், சுத்தம் செய்யப்பட வேண்டிய இடங்கள், அசுத்தமான குடிநீர் வினியோகம் குறித்த புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் இலவச தொலைபேசி கட்டுப்பாட்டு அறை எண் 1077 யை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் லதா அறிவித்துள்ளார்.

வேகமில்லாத டாக்டர்கள் : செல்லுார் மற்றும் நரிமேடு பகுதியில் கொசுக்கள் அதிகம். கொசுக்கடியால் தீவிர காய்ச்சல் வந்து தட்டணுக்கள் அளவு 8 ஆயிரமாக குறைந்தது. அரசு 
மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தருகின்றனர். டாக்டர்கள் வேகமாகவும், முறையாகவும் சிகிச்சை அளிப்பதில்லை. டெங்கு சிறப்பு வார்டு சுத்தமாக உள்ளது. ஆனால், கழிப்பிடம் துர்நாற்றம் வீசுகிறது.

கிறிஸ்டோபர் , இன்ஜி., மாணவர், நரிமேடு மதுரை

ஆறுதல் தரும் விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் 2014ல் டெங்கு காய்ச்சல் பரவியது. இதில் 32பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு டெங்கு பாதிப்பு குறைவு தான் என்றாலும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி ஜோராக உள்ளது. 
இந்தாண்டு காய்ச்சலால் ஆகஸ்டில் 560, செப்டம்பரில் 750 பேர் சிகிச்சை பெற்றாலும் கடந்த இரு மாதங்களில் 19 பேருக்கு டெங்குக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களும் தீவிர சிகிச்சைக்கு பின் முழுமையான குணமாகினர். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான சிகிச்சை உள்ளதால் இதுவரை இறப்புகள் இல்லை. ராஜபாளையம் டெங்கு பாதிப்புக்கு பின் டெங்கு உட்பட மற்ற காய்ச்சலை கண்டுபிடிக்க தேவையான 
மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன.ரத்தத் தட்டணு எண்ணிக்கை கண்டறியும் 23 புதிய செல் கவுண்டர் கருவிகள் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு முப்பது விநாடிக்குள் ரத்த அணுக்களின் அளவை அறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் வசதி இல்லை : என் மகனுக்கு டெங்கு பாதித்து, தட்டணுக்களின் அளவு குறைந்தது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, தட்டணுக்கள் மற்றும் தேவையான ரத்தம் இல்லாததால், மதுரைக்கு அனுப்பி விட்டனர். உசிலம்பட்டியில் 
இந்த வசதிகள் இருந்திருந்தால், இங்கு வராமலேயே இருந்திருப்போம். தாலுகா அரசு மருத்துவமனைகளில் டாக்டர், மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது

பிச்சைமணி செம்பராணி, திருமங்கலம்

தனியார் மருத்துவமனைகளுக்கு தடை : காய்ச்சல் நோயாளிகளுக்கு 'டெங்கு' பாதிப்புள்ளதா என கண்டறிய 'கார்டு டெஸ்ட்', 'எலிசா டெஸ்ட்' என இருவகை பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆரம்ப கட்ட பரிசோதனையான 'கார்டு டெஸ்ட்'டில் ரத்தத்தில் உயிரணுக்குள் குறிப்பிட்ட அளவை விடகுறைவாக இருந்தால் 'டெங்கு' அறிகுறி என தனியார் மருத்துவ மனைகள் தெரிவிக்கின்றன. இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
'கார்டு டெஸ்ட்' முடிவின்படி சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமடையாவிட்டால், 5 நாட்களுக்கு பிறகு எடுக்கப்படும் 'எலிசா டெஸ்ட்' முடிவை வைத்து தான் 'டெங்கு' என உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ
மனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் 'கார்டு டெஸ்ட்'க்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் சிகிச்சை பெற்று, ஓரளவிற்கு குணமடைந்ததும், 'எலிசா டெஸ்ட்' எடுக்காமல் பலர் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைகளில் இருந்து சென்று 
விடுகிறார்கள். இதனால், டெங்கு காய்ச்சல் எத்தனை பேருக்கு ஏற்பட்டுளளது என்பதை அரசு மருத்துவமனைகளில் சரியாக கணக்கிட முடியாத நிலைஉள்ளது.

டெங்கு அறிகுறி என்ன : டாக்டர் சங்குமணி அரசு மருத்துவமனை மதுரை:
காய்ச்சல் வந்த 3 நாட்களுக்கு பின் டெங்கு இருப்பதற்கான அறிகுறி ரத்த பரிசோதனையில் தெரியவரும். காய்ச்சல் 10 நாட்கள் நீடிக்கும். குளிர் காய்ச்சலோடு உடல், தலை, கழுத்து, கண்ணின் உள்பகுதி மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு தொடர்ந்து நிலவும். ரத்தத்தில் தட்டணுக்கள் அளவு குறைந்தால் உடலில் பொட்டு வைத்தார் போல் 
சிவப்பு நிற புள்ளி போன்று ஏற்படும். மூக்கு, பல் ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படும். 
வயிற்றில் ரத்தகசிவு இருந்தால் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும். இதுவே டெங்கு முற்றியதற்கான அறிகுறிகளாகும். இதற்கு பின் மூச்சு முட்டல், இருதயம் வலித்தால் டெங்கு 
தீவிர மடைந்துவிடும். காய்ச்சல் தென்பட்டவுடன் டாக்டர்களிடம் சிகிச்சை பெறவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY