Thursday, October 19, 2017

ஆதரவற்றோரும் கொண்டாடும் தீபாவளி: முடிதிருத்தி, புத்தாடை, இனிப்பு வழங்கிய ஈர நெஞ்சங்கள்


கோவையில் ஆதரவற்றோருக்கு முடி திருத்தம் செய்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையைச் சேர்ந்தோர்.   -  படம்:ஜெ.மனோகரன்
கோவை நகரில் உள்ள ஆதரவற்றோர்களை மீட்டு குளிக்க வைத்து, புத்தாடை வழங்கி தீபாவளிக்கு தயார்படுத்தியுள்ளனர் ஈரநெஞ்சம் அமைப்பினர்.
கோவை மாநகராட்சிப் பகுதியில் மீட்கப்படும் ஆதரவற்ற, மனநலம் குன்றியவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது ஈரநெஞ்சம் அறக்கட்டளை. மாநகராட்சி உதவியுடன் ஆர்.எஸ்.புரத்தில் நடத்தப்படும் காப்பகத்தில் மீட்கப்பட்ட ஏராளமானோர் பராமரிக்கப்படுகின்றனர். இந்த சேவையின் ஒருபகுதியாக, ஆதரவற்றோரையும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட வைத்து வருகின்றனர் ஈரநெஞ்சம் அமைப்பினர். 6-வது ஆண்டாக இம்முறை கோவையில் சாலையோரங்களில் தங்கியிருக்கும் ஆதரவற்றோரை தீபாவளிக்கு தயார்படுத்தி அசத்தியுள்ளனர் இந்த அமைப்பினர். கோவை அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை மீட்டு அவர்களுக்கு முடிதிருத்தி, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து சிறப்பித்தனர். அத்துடன் மற்றவர்களைப் போல இவர்களும் தீபாவளியை கொண்டாட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
இது குறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகி பி.மகேந்திரன் கூறும்போது, ‘அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் மகிழ்ச்சியான பண்டிகை. ஆனால் ஆதரவற்றவர்களுக்கு மட்டும் அந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை. யாரும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. ஆதரவற்றோருக்கு இருக்கும் ஏக்கம் மிகப்பெரியது. ஆனால் நாம் செய்யும் சிறிய உதவி அதை பூர்த்தி செய்துவிடும். அதை மனதில் வைத்துதான் ஆண்டுதோறும் உதவி செய்து வருகிறோம். மற்றவர்களைப் போல தங்களாலும் பண்டிகையன்று புத்தாடை உடுத்தி கொண்டாட முடிகிறது என்ற நம்பிக்கையே அவர்களுக்கு புத்துணர்வை தரும். இதுமட்டுமல்ல, கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் 100 பேருக்கு புத்தாடை வழங்கியுள்ளோம்’ என்றார்.
ஆதரவற்றோருக்காக மனமுவந்து பணிவிடைகள் செய்த தன்னார்வலர்களை மக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டிச் சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY