நாதெள்ளா நகைக் கடைக்கு என்ன ஆனது? நகைச் சீட்டுக் கட்டிய வாடிக்கையாளர்கள் கவலை
By DIN | Published on : 24th October 2017 11:24 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள நாதெள்ளா நகைக் கடையின் 7 கிளைகளும் மூடப்பட்டதால், நகைச் சீட்டுக் கட்டிய வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தாங்கள் கட்டிய பணத்தைத் திருப்பிக் கேட்டு நாதெள்ளா நகைக் கடை வாயில்களில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், தங்களது நிதிநிலை துரதிருஷ்டவசமாக மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தர அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் நாதெள்ளா நகைக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகைக் கடை வாயில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுமார் 77 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இந்த நகைக் கடை, எதிர்பாராதவிதமாக நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும், வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 5 மற்றும் வேலூர், ஓசூரில் உள்ள தலா 1 கடைகளை விரைவில் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாதெள்ளா நகைக் கடையின் இயக்குநர் பிரசன்ன குமார் கூறியிருப்பதாவது, "நாங்கள் மிக மோசமான நேரத்தை சந்தித்துள்ளோம். எங்களது முழு முதற் கவனம் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தருவது மட்டுமே. எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நகைச் சீட்டில் பணம் கட்டியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது பணத்தைத் திருப்பித் தர, எங்களது சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளோம். உங்களை மின்னஞ்சல் வாயிலாக நாங்கள் விரைவில் அழைப்போம். இன்னும் ஓரிரு வாரங்களில் அனைத்து நிலுவைத் தொகைகளும் திரும்ப செலுத்தப்படும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தாம்பரத்தில் உள்ள நாதெள்ளா நகைக் கடை மீது பொதுமக்கள் சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாங்கள் கட்டிய நகைச் சீட்டு முதிர்வடைந்த பிறகும், நகையோ பணமோ அளிக்கப்படவில்லை என்று புகாரில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment