Tuesday, October 24, 2017

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தை அரிக்கும் கரையான்கள்: சினிமாவையே மிஞ்சுகிறது


By ENS  |   Published on : 23rd October 2017 04:47 PM  
madurai


மதுரை: தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் சுமார் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்குக் கடனில் மூழ்கியுள்ளது. அதே சமயம், வேலையே செய்யாமல் பல ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஊதியம் பெற்று வருகின்றனர்.
சக்தி வாய்ந்த சங்கங்களில் இணைந்திருக்கும் ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் ஊதியம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாயை மாதந்தோறும் தண்டம் அழுகிறது போக்குவரத்துக் கழகம்.
அதே சமயம், போக்குவரத்துத் துறையில் கடுமையாக உழைத்து, ஓய்வு பெற்ற பல ஊழியர்கள் தங்களது ஓய்வூதியப் பலன்களைப் பெறாமல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மட்டும் மாதந்தோறும் இதுபோன்ற 180 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு என்று ரூ.60 லட்சம் அளவுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும், மிகப்பெரிய சங்கத்தில் இணைந்திருப்பது மட்டுமே ஒரே காரணம். இவர்கள் பணி நேரத்தின் போது பணிமனையில் இல்லாமல் இருப்பது, வேலை செய்யாமல், சொந்த வேலைகள் செய்வதும், வியாபாரத்தில் ஈடுபடுவதும் கூட நடந்தேறுகிறது.
சரி நட்டம் என்றால் ஊதியத்தோடு போகிறதா என்றால் இல்லை. வேலையே செய்யாத இவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடை. சீருடையை சலவை செய்ய ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் அலவன்ஸ். 
இதில்லாமல், இவர்களால் மதுரை மண்டலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.50 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. ஏன் தெரியுமா? இதுபோன்று இருந்தும் இல்லாமல் இருக்கும் ஊழியர்களால் போக்குவரத்தக் கழகத்தால் திட்டமிட்டபடி பேருந்து பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போகிறது. அதாவத, நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பேருந்துப் பயணம் மேற்கொள்ளப்படாததால் இந்த நட்டம் ஏற்படுகிறது என்கிறார் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர். வாசுதேவன்.
இந்த சங்கத்தின் துணைத் தலைவர் வி. பிட்சை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு மீது கிடைத்த தகவலில், விதிமுறைகளை மீறி, ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் அலுவலக வேலைகள் ஒதுக்கப்படுவதால், பேருந்துகளை இயக்க போதுமான ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது.
அதிரடியாக நடத்திய சோதனையில், சில ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அன்று பணியில் உள்ளனர். ஆனால் பணிமனையில் இல்லை. சில நிபுணத்துவம் பெற்ற நபர்கள் செய்ய வேண்டிய அலுவலக வேலைகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மூலம் செய்து முடிக்கப்படுகிறது.
உதாரணமாக, கணினிகளை பராமரிப்பது, புள்ளி விவரங்களை பதிவு செய்வது, தொழிலாளர் சட்டம், விபத்துகள், குற்றவியல் பதிவுகள், போன்ற விஷயங்கள் கூட அலுவலக வேலை என்று கூறி நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், சிலருக்கு வருவாய்த்துறை செயலர், கணினி ஆடிட்டிங், புள்ளிவிவரம் தொகுப்பது, கான்டீன் நிர்வாகம் மட்டுமல்லாமல் கண் பார்வை பரிசோதிப்பது போன்ற பணிகள் கூட ஒதுக்கப்படுகின்றன. 
சிலருக்கு, எந்த காரணமும் குறிப்பிடப்படாமலேயே ஆன் டியூட்டி என்றும் பதிவு செய்யப்படுகிறது. அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றும் போது ஆன் டியூட்டி என்று போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அது தவறாகப் பயன்படுத்துப்பட்டு வருகிறது.
ஆன் டியூட்டி விஷயத்தில் பல விதிகள் மீறப்படுவதாகவும், விரைவில் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...