Monday, October 23, 2017

தண்ணீர் ஜாக்கிரதை


By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 21st October 2017 02:03 AM  
இயற்கைக்கு மாறான உயிரிழப்புகளில் 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துகளால் 52.8%, நீரில் மூழ்கி 8.9%, தீ விபத்துகளில் 5.3%, மின்சாரம் தாக்கி 3% பேர் உயிரிழந்துள்ளனர். 
இதில் நீரில் மூழ்கி உயிரை இழப்பது என்பது ஒருவர் தமக்குத் தாமே தேடிக் கொள்ளும் மரணமாகும். 
அண்மைக் காலமாக கடல், குளங்கள், ஏரிகள், ஆறுகள் போற்றவற்றில் குளித்து மரணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
இந்தியாவில் ஆண்டுதோறும் 29,000 பேரும், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 80 பேரும் நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 300 பேருக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பெற்றோர்களின் பராமரிப்பின்றி வளரும் இளம் வயதினர், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தான் நீர்நிலைகளில் குளிக்கும் போது மரணமடைகின்றனர் என்றும், 2015-ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 3,60,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
ஆறுகள், ஏரிகள், குளங்கள் சில குறிப்பிட்ட இடங்களில் அதிக ஆழம் கொண்டவையாகவும், சில இடங்கள் அதிக சுழற்சிக் கொண்டதாகவும் காணப்படும். 
சுற்றுலா செல்லும் பயணிகள் அங்குள்ள ஏரி அல்லது குளத்தின் தன்மையை அறியாமல், அங்கு வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பற்றி சற்றும் கவலைப்படாமல் உற்சாக மிகுதியில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்குச் சென்று நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். 
ஈரோடு மாநகர், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஏழு பேர் காவேரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போது, பவானி கட்டளை கதவணை நீர்மின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி, அசோக், அன்புச் செல்வன் ஆகிய மூன்று சிறுவர்கள் அப்பகுதியில் ஏரியில் களிமண் எடுப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூர் அடுத்துள்ள முருகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், பாண்டியன் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் அருகேயுள்ள குட்டையில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். 
அப்போது சிறுவன் பாண்டியன் நீரிழ் மூழ்க, அவனைக் காப்பற்றச் சென்ற சிறுவன் சிலம்பரசனும் நீரில் குதித்துள்ளான். எனினும், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
இதற்கு முன் நாள் தான் திருக்கோவிலூரை அடுத்துள்ள சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, கேளம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்யாண், உபேந்திரா ஆகிய இரு மாணவர்கள் மாமல்லபுரம் கடலில் குளித்த போது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் வீட்டின் அருகேயுள்ள குட்டையில் திடீரென விழுந்து ஆறு வயதான சிறுவன் பிரவீன் குமார் உயிரிழந்தான். கடலூர் மாவட்டம், திருவதிகை கெடிலம் ஆற்றில் குளித்த மூன்று மாணவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
"இளம் கன்று பயமறியாது' என்ற சொலவடைக்கு ஏற்ப, பொதுவாக கடல், ஆறுகள், குளங்கள், அருவிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளித்து உயிரிழப்பவர்களில் 90 சதவீதத்தினர் 12 முதல் 24 வயதிற்குட்பட்ட இளம் வயதினர்தான். 
இவர்கள் பெற்றோர் அனுமதியின்றி குளிக்கச் சென்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். காரணம் இவர்களிடையே காணப்படும் இளமைத் துடிப்பு மற்றும் அலட்சியம்தான். 
பெற்றோரின் அறிவுரைகளையும் மீறி, கடலோர காவல் படை காவலர்களின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது கடலில் குளிப்பதால் இத்தகைய மரணங்கள் ஏற்படுகின்றன. 
குறிப்பாக, கடலில் குளிக்கும்போது போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். அதிலும், திடீரென இராட்சத அலை எழும் போது நீச்சல் தெரிந்தவர்களே திணறும் போது, நீச்சல் தெரியாதவர்கள் அதிலும் சிறுவர்கள் சமாளிப்பது கடினம். 
விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 
தொடர் விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் தான் இத்தகைய நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக ஏற்
படுகின்றன. 
விடுமுறை தினங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் நீர்த்தேக்கங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் பலர் ஆழமான பகுதிகளுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். 
நீரில் மூழ்கும்போது ஏற்படும் குதூகலம், பின்னர் ஏற்படும் மூச்சு திணறலால் வெளியே வர முடியாமல், காப்பாற்றவும் ஆளில்லாமல் வாழ்க்கை சோகத்தில் முடிந்து விடுகிறது. 
மனித உயிர் என்பது விலை மதிப்பற்றது. அதிலும் நீர்நிலைகளில் குளிக்கப் போய் உயிரை விடுவது என்பது பரிதாபத்திற்குரியது. அரிது, அரிது மானிடராய் பிறப்பது அரிது. எனவே, கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை தண்ணீரில் மூழ்கி இழந்துவிட வேண்டாமே.

No comments:

Post a Comment

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration Kanward...