Saturday, October 28, 2017

வலியுறுத்துதல் கூடாது!


By ஆசிரியர்  |   Published on : 28th October 2017 01:40 AM  |
ஆதார் எண் இருந்தால் மட்டுமே மானியங்களையும், சலுகைகளையும், சேவைகளையும் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் என்று ஆதார் சட்டத்தின் 7-ஆவது பிரிவு கூறுகிறது. அதே நேரத்தில் ஆதார் எண் பெறாதவர்கள் வாக்காளர் அடையாள எண், வருமானவரி எண் உள்ளிட்ட அடையாளங்களின் மூலம் ஆதார் எண்ணைப் பெறுவது வரை, மானியங்களையும் சலுகைகளையும் பெறலாம் என்றும் அந்த சட்டம் கூறுகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்டிருக்கும் வழக்கு, வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அரசியல்சாசன அமர்வுக்கு முன்னால் விசாரணைக்கு வருகிறது. 
தேவையில்லாமல் ஆதார் எண் எல்லாவற்றுக்கும் வலியுறுத்தப்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அதுமட்டுமல்லாமல், ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்துவது என்பது குடிமகன் குறித்த தனிப்பட்ட தகவல்கள் பெறப்படுவதால் அடிப்படை உரிமையையும் தனி நபர் ரகசியத்தையும் பாதிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். 
ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் சில குறிக்கோள்களை அடைய முடியும் என்று அரசு கருதுகிறது. குறிப்பாக, அனைவரும் ஆதார் எண் பெற்றுவிட்டால் அரசின் மானியங்களையும் சலுகைகளையும் யாரும் போலியான பெயர்களில் பெறுவது தடுக்கப்படும். மானியங்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் இடையில் கசிவதோ, மடைமாற்றுவதோ தடுக்கப்படும். 
மாற்றுத்திறனாளிகள், மகளிர், குழந்தைகள், வறுமைக் கோட்டுக்குக்கீழே உள்ளவர்கள் தொடர்பான ஏறத்தாழ 10 திட்டங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில் இந்தப் பிரிவைச் சார்ந்த, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத, ஆதார் எண் பெறமுடியாத பலருக்கும் சலுகைகளும் மானியங்களும் மறுக்கப்படுகின்றன.
பெற்றோர் ஏழைகளாகவும் இடம்பெயர்ந்தவர்களாகவும் இருந்து, ஆதார் எண் பெறுவதற்கான ஆவணங்களோ, முகவரியோ, அடையாளச் சான்றுகளோ இல்லாமல் இருந்தால் அந்தக் குழந்தைகளுக்கு மானியங்கள் மறுக்கப்படுகின்றன. 
மிக அதிகமான அளவில் இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலமும், ஊர் விட்டு ஊரும், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் பிழைப்புத் தேடி இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கும் நிலையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே அன்றாடக் கூலி வேலையில் ஈடுபடும் பலரும், அவர்களது குழந்தைகளும் ஆதார் எண் பெற முடியாத காரணத்தால் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து புறந்தள்ளப்படுவது சரியான நடைமுறையாக தோன்றவில்லை. அதுமட்டுமல்லாமல், ஆதார் எண்ணுக்காக பெறப்படும் தகவல்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதா என்றால், அதுவும் கேள்விக்குறியாக இருக்கிறது. 
3.5 கோடி ஆதார் எண்கள் குறித்த விவரங்கள் அரசின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு அது பொதுவெளியில் கசிந்திருப்பதை அரசே ஒப்புக்கொண்டு இருக்கிறது. 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடையும் 1.35 கோடி பேர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கணினிப் பதிவுத் தவறால், அந்த அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஓய்வூதியக்காரரின் கணக்கு குறித்து அதன்மூலம் யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். பெங்களூருவைச் சேர்ந்த இணையதள சமூக மையம் என்கிற அமைப்பு, ஓய்வூதியம், சமூகநல திட்டம், ஊழியர் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை தொடர்பான ஏறத்தாழ 1.35 கோடி ஆதார் எண்களும் 10 கோடி வங்கிக் கணக்கு எண்களும் அரசு இணையதளங்களின் மூலம் பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது.
ஆதார் எண் பதிவுக்காக ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்கள் என்னவெல்லாம் தகவல்களைப் பெறலாம் என்று ஆதார் சட்டமும் விதிகளும் வரைமுறை விதிக்கவில்லை. அதேபோல, அரசிடமிருந்து தகவல்களைப் பெறாத மூன்றாவது நபரோ, அமைப்போ ஆதாரை எப்படி, எதற்காக, எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆதார் சட்டத்தில் குறிப்பிடவில்லை. ஆதார் அட்டையிலுள்ள விவரங்களைப் பயன்படுத்த ஆதார் எண்தாரரின் முன் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அப்படியே ஆதார் தகவல்கள் கசிந்தாலும் அதுகுறித்து ஆதார் அமைப்பு குடிமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் தனது தகவல்கள் கசிந்த விவரம் எண்தாரருக்கு தெரியக்கூட வாய்ப்பில்லை.
இந்தியாவின் உடனடித் தேவை, கடுமையான தகவல் பாதுகாப்புச் சட்டம். ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் ஆதாருக்காக நாம்பெறும் தகவல்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு அப்படி ஒரு சட்டம் மட்டுமே உத்தரவாதம் வழங்கும். 
இதுவரை எட்டு அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள் ஆதார் தொடர்பான சேவைகளை வழங்குவதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக பொதுமக்களிடமிருந்து ஆதார் எண்ணையும் தகவல்களையும் சேகரிப்பதாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனும்போது ஆதார் திட்டத்தில் எந்த அளவுக்கு தகவல் பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுகிறது.
ஆதார் கட்டாயப்படுத்தப்படுவது சரியா - தவறா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, உச்சநீதிமன்றத்தில் அதுகுறித்த வழக்கில் முடிவு எட்டப்படாத நிலையில் வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி இணைப்பு என்று எதற்கெடுத்தாலும் ஆதாரை கட்டாயப்படுத்துவது வியப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...