Saturday, October 28, 2017

கதை சொல்லும் குழந்தைகள்


By வியாகுலன்  |   Published on : 28th October 2017 01:42 AM  
காலங்காலமாக நம்முடனேயே உலவும் கதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கதைகளைச் சொல்லும் கதை சொல்லிகள் என்று நமது குழந்தைகளை நாம் கொண்டாட வேண்டும்.
ஓர் இசைக் கலைஞனின் சங்கீத மனோபாவத்தையும் ஓர் ஓவியக் கலைஞனின் வர்ண மனோபாவத்தையும் ஒரு கவிஞனின் சாஹித்ய மனோபாவத்தையும் ஒன்றாகக் கலந்த கற்பனைத் திறன்களைக் கொண்டவர்கள் குழந்தைகள்.
குழந்தைகளிடம் கதைகள் சொல்லும்போது அந்த கதைகளுக்கான முடிவுகளை சொல்லும்படி அவர்களிடமே கேளுங்கள். சாதாரணமான கற்பனைக் கதைகளுக்கு அவர்களின் கவனிப்புத் திறனும் கற்பனைத் திறனும் ஒருசேர அவர்கள் சிறந்த முடிவுகளையும் வினோதமான திருப்பங்களையும் சொல்வார்கள்.
குடும்பத்திலுள்ள மூத்தோர், தங்களது அனுபவ அறிவையும் கற்பனைகளையும் கலந்துக் குழந்தைகளுக்குக் கதைகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கதை சொல்லிகள் எனும் நமது குழந்தைகளை ஒரு நெருக்கடியான வாழ்வியலுக்கு உட்படுத்துவதிலேயே நாம் தீவிரமாக இருக்கிறோம்.
அதிகமாக பணம் வசூலிக்கும் பள்ளி தரமான பள்ளி என்ற நமது குருட்டு நம்பிக்கைக்கு குழந்தைகளைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் படைப்பாற்றலுக்கு வலு சேர்க்கும் கல்வி முறையில் கவனம் செலுத்தவில்லை.
வயிற்றுக்காகக் கற்றல், அவசியத் தேவைகளுக்காகப் படித்தல் இவை நமது கதை மரபை மரணமடையச் செய்துவிட்டன. இவற்றையெல்லாம் கடந்து நமது குழந்தைகளின் படைப்பாற்றல் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
ஒரு கதைக்கான திருப்புமுனைகளை விளக்கிவிட்டு கதைக்கான சாவியை கடலில் தூக்கிப் போட்டாலும் தேடிக் கண்டுபிடித்து அதனைத் திறக்க ஆரம்பித்து கதை எனும் கம்பளத்தை விரித்துவிடுவார்கள் நமது குழந்தைகள். எனவே நமது குழந்தைகளுடன் உறவாட கதைச் சொல்லிகளாக நாம் மாற வேண்டும்.
இன்றைய உங்களின் அலுவல்களை முடித்துவிட்டு வீட்டிற்குப் போனதும் உங்கள் குழந்தையிடம் ஒரு சாதாரணமான பாட்டி வடை சுட்டக் கதையைச் சொல்லி அந்த நரிக்கும் காகத்திற்கும் வேறு ஏதாவது ஒரு முடிவைச் சொல்லிச் சொல்லி கேட்டுப்பாருங்கள். கற்பனைகள் விதவிதமாக பிறக்கும். 
இலக்கிய மேதைகள் என நாம் எண்ணங்கொண்டிருக்கும் நம் இலக்கியவாதிகளே குழந்தை இலக்கியம் குறித்து பேசியதோ பதிவு செய்ததோ இல்லாத ஓர் இலக்கிய சூழல்தான் இங்கு நிலவுகிறது. 
எனவே நமது படைப்பாளிகளை ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கான இலக்கியம், இசை, ஓவியம், பாடல்கள் என்ற வகைமைகள் குறித்து கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நமது அரசு பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் நிகழ்த்த வேண்டும்.
கதைகள் கேட்டு வளர்ந்த குழந்தைகளின் மன வலிமை வேறு மாதிரியானது. அது ஒரு பாரம்பரியம். அற்புதமான மூதாதையர்களும், பெற்றோரும் வாய்த்த பாரம்பரியம். அவர்கள் கதை சொல்கிற நேரத்தைக் குழந்தைகள் அறிந்திருந்தார்கள். அந்த நேரத்திற்காகக் காத்துக்கிடந்தார்கள். 
அவர்களின் கதைகளில் தினந்தோறும் பாட்டி வடை சுட்டு காகம் தூக்கிப் போனாலும் பாட்டியும் காகமும் நரியுமுடனுமான இரவை குழந்தைகள் நேசித்தார்கள். கதைக்குள் இருக்கிற தந்திரங்களை அவர்கள் அறிந்தார்களில்லை. 
பின்பு, கதைகள் என்ன உணர்த்தின குழந்தைகளுக்கு? தாயை, தகப்பனை, தாத்தாவை, பாட்டியை, சகோதரனை, சகோதரியை, நண்பனை, ஆசிரியரை, வெட்டுக்கிளியை, காகத்தை, யானையை, நரியை, பூச்சிகளை, தட்டான்களை, இரவுகளை, சூரியனை, நிலவை, பேருந்தை, புகைவண்டியை, ஆகாய விமானத்தை இப்படி ஒவ்வொன்றாய் பரவசமாக முதன் முறையாக உணர்ந்தார்கள். 
மீண்டும் மீண்டும் கதை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் முதன் முறை போலவே உணர்ந்தார்கள்.
குழந்தைகளே கதைகளாக மாறி உறங்கிப் போனார்கள். அந்த உறக்கம் முக்கியமானது. அதுதான் அவர்களின் மனம். அது அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தில் அவர்களோடு நெருக்கமாக உறவாடும். 
உறக்கத்தில் அவர்கள் சிரிப்பார்கள். அழுவார்கள். பேசுவார்கள். பயம் கொள்வார்கள். மனம் அவர்களுள் உருவாகிறது. அவர்களாக உருமாறுகிறது. அந்த உருமாற்றமே காலம்பூராவும் அவர்களோடு வருகிறது. 
நம் குழந்தைகளிடம் கதைகள் கேட்க வேண்டும். அவர்களின் ஓவியங்களைப் பார்க்க வேண்டும். புதிய விதமான அவர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு அவர்களுக்குப் பிடித்தமான புன்சிரிப்போடு பதில்கள் தர வேண்டும். நமது நேரத்தை ஒதுக்கி அவர்களோடு ஒட்டி உறவாட ஒதுக்க வேண்டும். குழந்தைகளைக்காட்டிலும் முக்கிய வேலை எதுவுமில்லை.
கதை, விளையாட்டு, ஓவியம், நுண்களைகள் இவற்றின் மூலம் குழந்தைகளுக்கு அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல், வரலாறு, புவியியல், விண்வெளி ஆய்வு போன்றவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் மனோபாவத்தையும் பாடத்திட்டங்களில் ஆர்வத்தையும் உருவாக்கிட முடியும்.
இதிகாசங்கள், தொல்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், அறிவியல் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் இவற்றிலெல்லாம் ஒரு நுட்பமான ஈடுபாட்டைக் குழந்தைகள் கண்டடைய வழிவகை செய்ய வேண்டும்.
அவர்களின் இயல்பை சிதைக்கும் பாடத்திட்டத்தின் தேவையற்ற வரலாறுகள், வயதிற்கு மீறிய பாடத் திணிப்புகள் இவற்றிலிருந்து நம் பிள்ளைகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் என்னவாக உருவாக வேண்டும். அவர்களிடம் என்ன திறமை இருக்கிறது. அவர்களின் திறமையும் ஆர்வமும் எந்தப் புத்தகத்தில் புதைந்திருக்கிறது என்பதை ஓர் ஆசிரியர் கண்டறிய வேண்டும். இல்லையெனில் கதை சொல்லிகளுக்கு வழிவிட வேண்டும்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...