Saturday, October 28, 2017

மருத்துவமனை ஆவணத் துறை அடாவடி பெயரில் தவறு; திருத்துவதில் தகராறு! விண்ணப்பதாரர்களுக்கு கடும் நெருக்கடி
 மருத்துவமனை ஆவணத் துறை அடாவடி பெயரில் தவறு; திருத்துவதில் தகராறு!   விண்ணப்பதாரர்களுக்கு கடும் நெருக்கடி
கோவை:சான்றிதழ்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வருவோரை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவ ஆவண துறை ஊழியர்கள் அலைக்களிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவ உலகம் இன்று எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்து புதிய பரிணாமத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவத் துறையில் இன்று சாதிக்க முடியாத எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டாலும், தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலும், ஒரு சில இடங்களில் மட்டும், ஆங்கிலேயர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களே இன்று வரை பின்பற்றப்படுகின்றன.
இதனால், நேர விரயம் ஏற்படுவதுடன், வீண் அலைச்சலே ஏற்படுகிறது. இதற்கு உதாரணமான நிகழ்வுகள், கோவை அரசு மருத்துவமனை மருத்துவ ஆவண துறையில் தினமும் அரங்கேறி வருகின்றன.பல்வேறு மாவட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதால், கோவை அரசு மருத்துவமனையில் எப்போதும் கூட்டத்துக்கு குறைவிருக்காது. மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர், உயிரிழப்போர், விபத்து மற்றும் இயற்கைக்கு மாறான விதத்தில் உயிரிழப்போர், பிணவறையில் நடத்தப்படும், பிரேதப்பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், பாதுகாக்கும் பொருட்டு, மருத்துவமனையில் மருத்துவ ஆவண துறை (எம்.ஆர்.டி.,) செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு அவசர கதியில் வரும் விபத்தில் காயமடைந்தவர்கள், மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புக்குள்ளானவர்கள் முதலில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் அந்தந்த துறைக்கு மாற்றப்படுவர். மருத்துவமனைக்கு அவசர கதியில் வருவோர், நோயாளியின் பெயரை, சில நேரங்களில் தவறாக தெரிவித்து விடுகின்றனர். மேலும், மருத்துவமனை ஊழியர்கள் பல சமயங்களில், நோயாளியின் பெயரை எழுத்து பிழையுடன் பதிவு செய்து விடுகின்றனர்.
இந்த பிழைகளால், சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோருக்கு எவ்வித பிரச்னையும் இருப்பதில்லை. ஆனால், உயிரிழப்பவர்களின் உறவினர்களின் நிலை தான் பரிதாபத்துக்கு உரியதாகிறது.உயிரிழந்தவரின் பெயரில் எழுத்துப்பிழை, மாற்றம் இருப்பதால், அவர் பெயரில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழ் மூலம் எவ்வித சலுகையையும் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. 
குளறுபடிகளை தவிர்க்க, பெயர் திருத்தம் செய்வதற்கு அரசு வழிவகை ஏற்படுத்தியுள்ளது. பெயர் மாற்ற விரும்புவோர், 'விண்ணப்பத்துடன், அதற்கான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள மற்றும் இருப்பிட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்' என விதி உள்ளது.
இவ்வாறு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இருப்பிட மருத்துவ அலுவலர் கையொப்பம் பெற்ற பின்னர், தபால் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, மருத்துவ ஆவண துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு ஆவணங்களை பரிசோதித்த பின்னர் பெயரில் திருத்தம் செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
அங்கு தான் பிரச்னை ஏற்படுகிறது. மருத்துவ ஆவணத்துறையினர், ஆங்கிலேயர் காலத்தில் வகுக்கப்பட்ட விதிகளின் படி, 'வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., ஆகியோரிடம் சான்றிதழ் அல்லது 'நோட்டரி' சான்றிதழ் ஆகியவற்றை பெற்று சமர்பிக்க வேண்டும்' எனச் 'சட்டம்' பேசி விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர்.
மேலும், 'ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஆவணமாகக் கருத தங்களது சட்டத்தில் இடமில்லை' எனவும் தெரிவிக்கின்றனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால், சான்றிதழ்கள் பெற விண்ணப்பதாரர்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், அரசு உதவி, இன்சூரன்ஸ் போன்றவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், துறை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.
'அரசு ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக எடுத்துக் கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளது. அது செல்லாது என, மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிற்து. இது ஒரு புறம் இருக்க தற்கொலை, கொலை உள்ளிட்ட சட்டம் சார்ந்த வழக்குகளில், நன்கு விசாரித்த பின், போலீசார் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையில், பெயர் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவ ஆவணங்களில், பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டதற்காக ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., சான்றிதழ் பெற சொல்வதும் எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இத்தகைய பிரச்னைகளை தவிர்க்கவும், விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சட்டத்தில் திருத்தம் வேண்டும்!உயிரிழந்தவர் விபரங்களை சரிபார்த்து சான்றிதழ் வழங்க வேண்டியது வருவாய் துறை அலுவலர்களால் மட்டுமே முடியும். எனவே அவர்களிடம் சான்றிதழ் பெற்று வர அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, பெயர், முகவரியில் இருக்கும் தவறுகளை சரிசெய்து கொள்ளலாம். இது பலருக்கும் தெரிவதில்லை. தற்போது, பிரச்னைகளை தவிர்க்க, பெயர் திருத்தத்துக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோகன்,டீன், கோவை அரசு மருத்துவமனை.ரூ.1,000க்கு அனைத்தும்!மருத்துவ ஆவண துறை ஊழியர்கள் பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பங்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு அதை நிராகரிக்கின்றனர். ஆனால், 1,000 ரூபாய் கொடுத்தால் உடனே சான்றிதழை வழங்கிவிடுகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலத்தை ஒப்படைக்கும் முன் ஒரு முறை அனைத்து தகவல்களையும் சரிபார்த்தால், இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மருத்துவமனை ஊழியர்களுக்கு இதை செய்வதில் எவ்வித பிரச்னையும் இருக்க போவதில்லை. இதை மருத்துவமனை நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...