Wednesday, October 18, 2017

அறிவு தீப ஒளி ஏற்றுவோம்!


By நெல்லை சு. முத்து  |   Published on : 18th October 2017 02:36 AM  |  
பாவளி என்ற சொல்லாட்சி உலக வழக்கில் முதன்முறையாக, "ஷாகா சம்வாத' யுகத்தின் 705-ஆம் ஆண்டு ஜீனúஸன ஆச்சாரிய(ர்) என்பவரால் இயற்றப்பட்ட "ஹரிவம்ஸ புராணம்' என்கிற சமண நூலில் காணப்படுகிறது.
"தத்ஸý லோகஹ: ப்ரதி வர்ஷம் ஆகரத் தீபாலிகய ஆத்ர பாரதே-- ஸமுத்யதஹ பூஜாயிதும் ஜீனேஷ்வரம் ஜீனேந்த்ர - நிர்வாண விபூதி - பக்திபாக்--'
அதாவது, (24-ஆம் தீர்த்தங்கரரான) ஜீனேந்திரர் ஆகிய மகாவீரர் நிர்வாண நிலை (மோட்சம்) அடைந்த நாளினை பாரத மக்கள் ஆண்டுதோறும் பிரபலத் "தீபாலிகயா' என்ற தீப ஆவளி (தீபங்களின் வரிசை) விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
மகாவீரர், பாவபுரியில் கார்த்திகை மாதம் சதுர்த்தசி நாளில் வீடுபேறு அடைந்த நாள் கி.மு.527 அக்டோபர் 15. பிரபஞ்சவியல் குறித்து பிராகிருத மொழியில் இயற்றப்பட்ட "திரிலோக ப்ரஞ்ஞாபதி' அல்லது "திலோயப் பன்னத்தி' எனப்படும் ஜைன நூலில் யதிர்விருஸப ஆச்சாரியார் தரும் குறிப்பு இது. 
அதனாலேயே முதன்முறையாக, 2016 அக்டோபர் 15 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை, தீபாவளிக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு சேர்த்தது.
தீபாவளி நாளில் ஜைனர் அனைவருக்கும் "நிர்வாண லாடு'ஆகிய இனிப்பு வழங்கி மகிழ்வர். கொல்லாமை, பிறர்க்கு இன்னா செய்யாமை, அகிம்சை போன்ற கொள்கை உடையவர்கள். ஆதலால், அவர்கள் தீபாவளி தினத்தில் பட்டாசுகள் வெடிப்பது இல்லை. அவற்றின் ஒலி முழக்கம் சிறு உயிர்களுக்கு இன்னல் விளைவிக்கும் என்பதே அவர்தம் கருத்து.
இன்றைக்கும் வெடிகளின் இடியோசையும், கண்ணைப் பறிக்கும் ஒளிமின்னல் பொறி மத்தாப்புகளும் வானத்தில் இருக்கும் தீய சக்திகளையும் துர்தேவதைகளையும் அச்சமடையச் செய்யும் என்ற நம்பிக்கை பழஞ்சீன மக்களிடையே நிலவுகிறது.
வரலாற்றில் மஹாஜன(ன்), வீராஜன(ன்) ஆச்சாரியர்கள் விஷ்ணுவைப் போற்றினர். அடிப்படையில் அவர்கள் மஹாயான பெளத்தர்கள். பெளத்த மதத்திலும் இந்திரனே காவல் தெய்வம். இந்திரர்கள், நரகாசுரன் என்ற அரக்கனின் கொடுஞ்செயல்கள் குறித்து கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர். 
கிருஷ்ணரது தாயார் ஆன பூமாதேவியினால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பது வரம். அதனால் பூமாதேவியின் அவதாரமான, கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா நரகாசுரனை அழித்தார். அவன், தனது மரணத்தை மக்கள் தீப ஒளியேற்றிக் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வேண்டினான். 
அதனாலேயே தீபாவளி, விஷ்ணுவைப் போற்றி ஒளியும் ஒலியும் ஆகக் கொண்டாடப்படுகிறது.
இதைப் போலவே, மகாபலி என்ற அசுரனையும் விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்துப் பாதாளத்தில் தள்ளினார் என்கிற ஒரு தொன்மக் கதையும் உண்டு. பிரகலாதனின் புதல்வனான வீராஜனனின் புதல்வன் அந்த மகாபலி. பிராகிருத - பாலி இன மன்னன். பண்டைய கேரளத்தில் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தவன். 
மகாபலி, இந்திரனை வென்றவன். ஆண்டுதோறும் கேரளத் துக்கு வருகை தரும் அவனை வரவேற்கும் திருவோணப் பூக்களின் திருவிழா இன்றைக்கும் கேரளத்தில் பிரபலம். "கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்' (மதுரைக் காஞ்சி 590 - 591) என்கிறார் மாங்குடி மருதனார் எனும் சங்கப் புலவர்.
உண்மையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது சங்க காலத்தின் "தைந்நீராடல்' இன்று மார்கழி நீராடல் ஆயிற்று. இதே கணக்கில்தான், கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற இந்தத் தீப ஒளிவிழா இன்று. வானவியல் அடிப்படையில் ஐப்பசியில் முன்னேறி வருகிறது என்க.
மகாகவி பாரதி வாழ்வில் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் புதல்வி யதுகிரியிடம் தோழி மீனா கூறுகிறார்: "திருவண்ணாமலையில் தீபம் அணையும் வரையில் எல்லோர் வீட்டு வாயில்களிலும், விளக்குகள் இருக்க வேணுமாம். 
நம் ஏழ்மையால் வருஷம் முழுவதும் ஏற்ற முடியாவிட்டாலும் தீபாவளியி
லிருந்து கார்த்திகை வரையில் ஆசாரமாய் விளக்கு ஏற்றினால் பார்வதி, லக்ஷ்மி, கங்கை மூன்று பேரும் நம் வீட்டில் தங்குவார்கள் என்று என் பாட்டியார் சொல்வார்.'
அதற்குப் பாரதியோ, "இதற்குக் காரணமே வேறு. நாம் வழக்கம், சாத்திரம் என்று சொல்லிக் கொண்டு முக்கியமான காரணத்தை மறந்துவிடுகிறோம். முன்பு தெருவில் விளக்குகள் இருக்கவில்லை. இந்த மழைக்காலங்களில் இருட்டு 
அதிகம். 
எல்லார் வீடுகளிலும் வரிசையாக விளக்கு ஏற்றினால் முக்கால்வாசி ஊரே வெளிச்சமாகி மேகம், இருட்டு இரண்டும் சேர்த்துச் செய்யும் கும்மிருட்டை நீக்கிவிடும் அல்லவா? அதற்குதான் முன்னோர்கள் உபாயம் செய்தார்கள். இப்போது அடிக்கொரு மின்சார விளக்கு இருக்கும்போது, இந்த மின்மினி விளக்கு எதற்கு? சொல்லுங்கள். 
எங்கள் தாத்தா இருட்டில் வளர்ந்தார். நாங்களும் இருட்டில்தான் இருப்போம் என்பது சரியான வாதமா? லக்ஷ்மிக்கு எண்ணெய் விளக்கு, அழுக்கு, மடி, கள்ள யோசனையுடைய பொய் பக்தி, வெளிவேஷம் இவைகளெல்லாம் வேண்டாம். முதலில் உள் அன்பு, உண்மை பக்தி, திடமனத்துடன் பாடுவது இவைதான் முக்கியம். அவள் ஆடம்பரத்தில் மயங்க மாட்டான்' என்கிறார்.
எது எப்படியோ, ஐப்பசி - கார்த்திகை மழைக்காலங்களில் தோட்டம் துரவுகளில் நீர் தேங்கிவிட்டால் டெங்கு கொசு உற்பத்தியும் நோய்களும் பரவும் அபாயம் வேறு இருக்கிறது.
ஒரு வகையில் தீபாவளி வெடிமருந்துப் புகையினால் வானமும் கதகதப்பாகும். கொசுத் தொல்லைகளும் குறையும். வீட்டிற்குள் கட்டில் இடைப் பொந்துகளிலும், தலையணைகளிலும் பதுங்கி இருக்கும் தீவிரவாத மூட்டைப் பூச்சிகளும்கூட மடிந்து போகும்.
பட்டாசு வெடிமருந்துகளின் இந்திய வரலாறும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.
கி.மு.325-ஆம் ஆண்டு கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் பஞ்சாப் வழி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, பியாஸ் நதிக் கரையோரம் வாழ்ந்துவந்த "ஆக்சித்ரேசிய' இன மக்கள் கிரேக்கப் படைகளைத் தங்கள் 
நகருக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டனர். மதில்களில் இருந்து இடிமுழங்கும் 
தீ அம்புகளை எதிரிகள் மீது வீசி எறிந்தனராம்.
தீ அம்புகள் என்பது வேறு ஒன்றுமில்லை, இயற்கையில் கிடைக்கும் கரி, கந்தகம் இவற்றுடன் நீற்றுச் சுண்ணாம்பும் கலந்ததுதான் தீ அம்பு. வீட்டுக்கு வெள்ளை அடிக்கப் பயன்படும் நீற்றுச் சுண்ணாம்புக் கற்களைத் தண்ணீரில் போட்டதும் வெப்பம் வெளிப்படும். அந்த வெம்மையில் கரி - கந்தகக் கலவை புகைந்து எரியக் கூடும்.
"சுக்ரநீதி' எனும் பழைமையான நூலில் வெடிமருந்து தயாரிப்பு முறை விளக்கப்பட்டு உள்ளது. "சால்ட் பெட்ரே' என்னும் பாறையப்பு (இந்துப்பு) ஆக்சிஜன் வாயுவைத் தனக்குள் அடக்கி இருக்கும். இது, பொட்டாசியம் நைட்ரேட் ஆகும். வடமொழியில் "லவண் உத்தம.' அதாவது உத்தம உப்பு.
இந்த வெடிமருந்தினை "விறலி விடு தூது' எனும் நூல் 619-ஆம் பாடல் "வெடி பாண உப்பு' என்று குறிப்பிடுகிறது. கி.பி.1092-ஆம் ஆண்டு "பதார்த்த குண சிந்தாமணி' என்ற தமிழ் இலக்கியமும் வேறு பல இலக்கியங்களும் இதனை "வெடியுப்பு' என்றே வழங்கின.
போதானந்த விருத்தி உரையும் ஆர்செனிக் (2 பங்கு), கரி (3 பங்கு), இந்துப்பு (3 பங்கு) அடங்கிய வெடிமருந்துத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
ஐரோப்பாவில் 1260-ஆம் ஆண்டு வாக்கில் ரோஜர் பேக்கன் என்னும் ஐரோப்பியச் சிந்தனாவாதி வெடியுப்பு பற்றி குறிப்பிடுகிறார். 1275-ஆம் ஆண்டில் டி-மிராபிலிஸ் முண்டி எழுதிய "அல்பர்த்தஸ் மாக்னஸ்' எனும் நூலில் "பறக்கும் தீ' பற்றியக் குறிப்பு உள்ளது. 
சாமுவேல் புருன்ட் எழுதிய "காக்லோகலினியாவுக்கு ஒரு பயணம்' என்ற புனைகதை 1727-இல் வெளியானது. அதில் பறவைகள் ஏந்திச் செல்லும் ஏவூர்தி எனும் ஒரு கருத்தாக்கம் இடம் பெற்றது. 700 பீப்பாய்களில் வெடிமருந்து நிறைத்து, அதன் வெடிவேகத்தில் நிலாவுக்குப் போகலாமாம்.
இந்தியாவைப் பொருத்தமட்டிலும் மொகலாயர் வருகைக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் போர்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் ஆங்கிலேயருக்கு எதிராக மைசூர் மன்னர் திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடத்திய போர்களில் முதன்முறையாக ராக்கெட்டுகள் போர்க் கருவியாகக் கையாளப் பெற்றன. நவீன இந்திய ஏவுகணை வரலாற்றின் முதல் அத்தியாயம் அது.
ஏறத்தாழ 10 அங்குல நீளமும் ஒன்றரை அங்குலக் குறுக்களவும் கொண்ட இரும்புக் குழாய்களில் வெடிமருந்து நிறைத்து ராக்கெட் தயாரிக்கப்பட்டது. 1799-ஆம் ஆண்டு துருக்கனஹள்ளியில் நடந்த போரில் வில்லியம் காங்கிரீவ்ஸ் என்ற 
ஆங்கிலத் தளபதி திப்புசுல்தானைக் கொன்றார். 
அவரது படையிலிருந்த 700 இந்திய ராக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு அவர்களிடமிருந்து ஏவுகணைத் தொழில்நுட்பங்களையும் ஆங்கிலேயர் கற்று அறிந்தனர். இந்தப் போர்க்கணைகள் தோற்றத்தில் இன்றைய தீபாவளி ராக்கெட்டுகள் போன்றவைதாம்.
தீபாவளி நெருப்பு விளையாட்டில் பாதுகாப்புக் கவனமும் தேவை. குறிப்பாக, வேட்டியை ஒட்டினாலும் கட்டினாலும் பரவாயில்லை. ஒரு சேலைக்கு இரண்டு சேலை இலவசம் என்று வாங்கினாலும் தப்பு இல்லை. 
ஏதேனும் கடையில் தீப்பற்றாத துணிமணிகள் கிடைத்தால் அவற்றை வாங்கி உடுத்திக் கொண்டு தைரியமாகப் பட்டாசு கொளுத்துங்கள். உங்கள் உடைகள் மட்டுமல்ல, பக்கத்து ஓலைக் கூரைகள், மின் கம்பங்கள் எதிலும், எவர் மீதும் தீப்பொறி பட்டுவிடாமல் பட்டாசுகள் கொளுத்தலாம். 
ஒவ்வொரு தீபாவளிக்கும் அரைக்கிலோ பட்டாசு எரித்தால் போதும் என்ற ஆத்ம திருப்தி கொள்வோம். ஒலிமாசு வரையறைக்கும் மதிப்பு அளிப்போம். அனைவருக்கும் அரைக்கிலோ செயற்கைச் சர்க்கரை ஜிலேபியுடன் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...