Friday, December 1, 2017

சிங்கப்பூருக்கு கிளம்புது ஆவின் பால்

Updated : டிச 01, 2017 02:14 | Added : டிச 01, 2017 01:28 |

ஆவின் நிறுவனத்தின், பதப்படுத்தப்பட்ட பால், இரு தினங்களில் சிங்கப்பூருக்கு விற்பனைக்காக செல்லவுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்து வருகிறது.ஆவினின் வருவாயை பெருக்கும் விதமாக, ஆவின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

மொபைல் ஆப் : அதன் ஒரு பகுதியாக, குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும், ஆறுமாதம் வரை கெட்டுப் போகாத, உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம், ஆவின் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இன்னும் இரு தினங்களில், 'கன்டெய்னர்' மூலம், பதப்படுத்தப்பட்ட பால் சிங்கப்பூருக்கு விற்பனைக்காக அனுப்பப்படவுள்ளது.

இது குறித்து, ஆவின் மேலாண் இயக்குனர், காமராஜ் கூறியதாவது: ஆவினின் வருவாயை பெருக்குவதற்காக, சிங்கப்பூருக்கு பால் ஏற்றுமதி செய்யவுள்ளோம்.ஏற்றுமதி முகவர்கள் மூலம், சிங்கப்பூரில் உள்ள, 150 சில்லரை விற்பனையகங்களில், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகள், வணிக வளாகங்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில், இந்த பால் விற்பனை செய்யப்படவுள்ளது.இது, சிங்கப்பூர் தர நிர்ணய ஆய்வு மையத்தால் ஆய்வு செய்யப்பட்டு விற்கப்படவுள்ளது.அங்குள்ள ஆவின் சில்லரை விற்பனையாளர்கள், 'மொபைல் ஆப்' மூலம், பால் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று லட்சம் லிட்டர் : இதுமட்டுமின்றி, ஆவின் எட்டு வகையான நறுமணப்பால், மோர் உள்ளிட்ட ஆவின் பொருள்களை, விரைவில் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. 20 ஆயிரம் லிட்டர் பால், இன்னும் இரு தினங்களில், கன்டெய்னர் மூலம், சிங்கப்பூர் செல்லவுள்ளது. ஒரு மாதத்திற்கு, 15 கன்டெய்னர் வரை, மூன்று லட்சம் லிட்டர் பால், ஏற்றுமதி செய்யப்படும்.விரைவில், மலேஷியா, மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனிஷியா உள்ளிட்ட, 11 தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு, பால் ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை, ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-நமது நிருபர்-


No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024