Tuesday, February 6, 2018

பெண்களைக் குறி வைக்கும் கொள்ளையர்கள்!

By இ. முருகராஜ் | Published on : 05th February 2018 02:57 AM

அண்மையில் முகநூலில் கண்ட வாசகம் மிகவும் கவனத்தை ஈர்க்கும்படியாக இருந்தது. "ஒரு காலத்தில் திருடர்கள் நடந்து வருவார்கள், நகைகளை பறிகொடுப்பவர்கள் இரு சக்கர வாகனங்களிலோ, மற்ற வாகனங்களிலோ வருவார்கள். ஆனால், தற்போது திருட்டில் ஈடுபடுபவர்கள் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தபடி வந்து சர்வ சாதாரணமாக பெண்களிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுகின்றனர்' என்பதுதான் அது.
வீட்டில் ஜன்னலோரத்தில் படுத்திருப்பவர்கள், வீட்டுக்கு வெளியே கோலம் போடுபவர்கள், தனியாக நடந்து செல்லும் முதியவர்கள் என பெண்களைக் குறி வைத்தே அதிக அளவில் சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதன் உச்சமாக, சென்னையில் பட்டப்பகலில் பட்டாக் கத்தியைக் காட்டி இளைஞர் ஒருவர் பெண்ணை மிரட்டி சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக, தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து இங்கு சங்கிலி பறிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சில வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது, கவலை அளிக்கும் செய்தி.
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள நகைக் கடையில் துளையிட்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் கடந்த மாதம் நகைகளை அபகரித்துச் சென்றனர். இந்த வழக்கில் கொள்ளையரைப் பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்தது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தில்லியைச் சேர்ந்த 2 பேரை சென்னையில் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் தில்லியிலிருந்து விமானம், ரயில் மூலம் சென்னைக்கு வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும், வழிப்பறி சம்பவங்கள் மூலம் பறிக்கப்பட்ட 300 பவுன் தங்க நகைகளை தில்லிக்கு அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்தக் குழுவில் பத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்ததும் தெரியவந்தது.

இதேபோல, வங்கி வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் வட மாநில கும்பல், அவர்களின் பற்று அட்டை எண், ரகசிய எண்களைத் தெரிந்துகொண்டு பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக, இதுபோன்ற குற்றச் செயல்களில் 18 - 32 வயதுக்கு உள்பட்டவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு, 15, 16, 17 வயதுடையவர்கள் உதவுகின்றனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற சம்பவங்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் கள்வர்கள் தவிர, வெளியூரைச் சேர்ந்த 150 முதல் 200 பேர் வரை சென்னையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கடந்த 2014, 2015 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2016-ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தொடர்ந்து வரும் சங்கிலிப் பறிப்பு சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், அதிக மதிப்பு கொண்ட தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகைகளை வெளியிடங்களுக்கு, வெளியூர்களுக்குச் செல்லும்போது அணிவதையும், பைகளில் வைத்து எடுத்துச் செல்வதையும் தவிர்க்கலாம். பெரும்பாலும் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்தே சங்கிலிப் பறிப்பு நிகழ்த்தப்படுவதால், துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லலாம்.
புறநகர்ப் பகுதிகளில், ஊர்களின் ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள வசதி படைத்தவர்களின் வீடுகளிலும், வெளியூர் சென்றவர்களின் வீடுகளிலும் அதிகளவில் திருட்டுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வீடுகள் மர்ம நபர்களால் கண்காணிக்கப்பட்டு, முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு, திருட்டு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பாதுகாப்பு ஏற்படுகள் மூலம் திருட்டுக்களை பெருமளவில் தவிர்க்கலாம்.

வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தை நம்பகமான உறவினர்களிடம் வைத்திருக்கச் சொல்லும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. இக்காலத்தில் எத்தனை பேர் அப்படி நம்பிச் செய்வார்களோ, தெரியவில்லை. இப்போது வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைப்பதன் மூலம் தங்க நகைகள் களவுபோவதை தடுக்க முடியும்.
தாலியை மஞ்சள் கயிற்றில் அணிவதென்பது தமிழர்களின் பாரம்பரியம். தங்கம் பிற்பாடு வந்தது. வசதிக்கேற்ப அது கனம் கூடத் தொடங்கியது! தற்போது, தங்கத்தில் அதிக எடை கொண்ட தாலியை அணிவதென்பது நாகரிகமாகிவிட்டது! கொள்ளையர்கள் தாலிச் சங்கிலியை பறித்துச் செல்வது வேதனையானது. நம்முடைய கடின உழைப்பின் பலனாய் சேர்த்த பொன் கொள்ளை போவதோடு, தாலிப் பறிப்பு வெளிப்படுத்தும் கலாசார சீரழிவும் வேதனையானதுதான். பெண்கள் தாலியை மஞ்சள் கயிற்றில் அணியும் பாரம்பரியத்துக்கே திரும்பினால், தங்கத் தாலியைப் பறி கொடுப்பது நிற்கும்! ஆனால்...

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...