குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும்? - முதலுதவிகள், மருத்துவ ஆலோசனைகள்! #ChildChoking
இரா.செந்தில் குமார்
குழந்தைகளின் சிரிப்பு, அழுகை இரண்டுமே எத்தனை கரடுமுரடான, முரட்டு மனிதர்களையும் கரைத்துவிடும். பலருக்கு, வாழ்வின் மீது பிடிப்பு ஏற்படுவதற்கே அவர்களின் குழந்தைகள்தான் காரணமாக இருக்கிறார்கள். விவாகரத்து கோரிவிடலாமா என நினைக்கும் பல தம்பதியர்களைக்கூட குழந்தைகளின் அன்புதான் பிரியவிடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. குழந்தைகள் ஆடுவதை, ஓடுவதை, அவர்களின் ஒவ்வோர் அசைவையும் ஆச்சர்யத்துடன் ரசித்துப் பார்ப்பதில்தான் எத்தனை ஆனந்தம்!
அதே நேரத்தில், குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; எந்த வேலையிலும் மனம் ஒன்றாது; வேலையே நடக்காது. ஒவ்வொரு விநாடியும் குழந்தையைக் குறித்த நினைவாகவே இருக்கும். இப்படிக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்... பதறிப் போய்விடுவோம். விழுங்கிய பொருள் வெளியே வரும்வரை நம் உயிர் நம் கையில் இருக்காது. அந்தப் பதற்றமான தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாது. `மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் அதற்குள் ஏதேனும் விபரீதம் நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வது?’ என்றெல்லாம் யோசித்துக் குழம்பிக்கொண்டிருப்போம்.
தவழும் வயதில், குழந்தைகளின் உலகம் தனித்துவமானது; பார்க்கும் ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குப் புதுமையாகத் தெரியும். எந்தப் பொருள் அருகில் இருந்தாலும், கையில் கிடைத்தாலும் முதலில் தொட்டுப் பார்ப்பார்கள். பிறகு, கையிலெடுத்து வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது என்னவென்று அறிந்துகொள்ளத் துடிக்கும் ஆர்வம்தான் காரணம்.
ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் கண்டதையும் வாயில் போட்டுக்கொள்ள ஒரு காரணம். உதாரணமாக, கால்சியம் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றைத் தின்பார்கள். இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பல்பம், சுவரிலிருக்கும் பெயின்ட் போன்றவற்றைத் தின்னத் துடிப்பார்கள். உடலில் மைக்ரோமினரல்ஸ் குறைபாடு உள்ள குழந்தைகள் சாம்பலையும், சால்ட் குறைபாடு உள்ள குழந்தைகள் ஊறுகாயையும் வாயில் போட்டுக்கொள்ளத் துடிப்பார்கள்.
சில நேரங்களில் கடித்துத் தின்னும் பொருள்களைக் குழந்தைகள் விழுங்கிவிடுவதும் நடக்கும். காசு, ரப்பர், கோலிக்குண்டு, பாசி, ஹேர்பின், நறுக்கிய காய்கறிகள், பேனா மூடி... என மிகப் பெரிய லிஸ்ட் அது.
அப்படி விழுங்கிவிட்டால் குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்? விரிவாக விளக்குகிறார் குழந்தைகள்நல மருத்துவர் செல்வன்...
"குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.
குழந்தைகள், ஏதாவது ஒன்றை விழுங்கும்போது நாம் பார்த்துவிட்டால் பிரச்னையில்லை . ஒருவேளை நாம் பார்க்காவிட்டால்தான் பிரச்னை. இதை எப்படி அறிந்துகொள்வது? அதுவரை ஓடி, ஆடி, பேசித் திரிந்த குழந்தை திடீரென அமைதியாக இருக்கும்; அழக்கூடச் செய்யலாம்; அவர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரியலாம். இதையெல்லாம் வைத்துத்தான் அவர்கள் எதையோ விழுங்கியிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.
பேசக்கூடிய பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களிடமே கேட்டுவிடலாம். எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.
கீழ்காணும் அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது.
பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சிறந்தது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும். வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.
ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.
சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்.

No comments:
Post a Comment