தெரிந்த பெயர் தெரியாத விவரம்: எழும்பூர் ரயில் நிலையம்
Published on : 30th January 2018 03:49 PM |
சென்னை மாகாண ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரால், மொகலாய வைஸ்ராய் நவாப் சுல்ஃபிகர் அலி கானிடமிருந்து 1720-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்ட இடம்தான் எழும்பூர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.
இந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்தது. இதற்கு பெயர் "எழும்பூர் ரெடோ'.
ஆரம்பத்தில் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டது.
இந்தக் கட்டடம் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 1.7 ஏக்கர் டாக்டர் பால் ஆண்டி என்பவரிடமிருந்து பெறப்பட்டது. பின்னர் செளத் இந்தியா ரெயில்வே நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
இந்தோ-சாராசனிக் மற்றும் கோதிக் பாணியில் இக்கட்டடம் கட்டப்பட்டதாகும். ராபர்ட் சிஸ்ஹோம் என்ற ஆங்கிலேயர் கட்டடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்தார்.
பெங்களூரைச் சேர்ந்த டி. சாமிநாத பிள்ளையால் 1905-இல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுமானத்திற்காக சுமார் 1.7 மில்லியன் செலவிடப்பட்டது. இதற்கான செங்கல் பூந்தமல்லியில் இருந்த சாமிநாத பிள்ளையின் சூளையில் தயாரானது.
இந்த ரயில் நிலையம் 1908 ஜூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையத்திற்கு ராபர்ட் கிளைவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையம் என பெயர் வைக்கப்பட்டது. முதலில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது.
1951-ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே உருவான பிறகு சென்னையின் முக்கிய மீட்டர்கேஜ் முனையமாக எழும்பூர் நிலையம் மாறியது.
தொடக்கத்தில் எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகர் வரை ரயில்கள் இயக்கப்பட்டன. கொழும்பு செல்லும் பயணிகள் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயிலில் பயணம் செய்வர். பின்னர் அவர்கள் தனுஷ்கோடியில் இறங்கி, படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்குச் செல்வர். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும்.
சிகாகோவில் உரையாற்றிய பின் விவேகானந்தர் இலங்கை வழியாக தனுஷ்கோடி வந்து, சென்னை எழும்பூர் வந்திறங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனது. அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் 1,2,3 குறைந்த நீளம் கொண்டவை. இவை சிறிய ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
முக்கியமான 4ஆம் நடைமேடை எழும்பூர் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் நடைமேடைகள் நீள ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், இங்குள்ள நடைமேடை அருகே, கார்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இரண்டாவது நுழைவுவாயில் ரூ. 115.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வாயில் திறக்கப்பட்டது.
தினமும் சுமார் 35 முக்கிய வழித்தடங்களுக்கு ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள்.
உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், "ப்ரௌசிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகள் இங்கு உண்டு.
No comments:
Post a Comment