Monday, October 13, 2014

விருப்ப ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் வேலை கேட்டு வழக்கு: மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்




விருப்ப ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் வேலை கேட்டு வழக்கு: மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

புது டெல்லி, அக்.13-

நாகலாந்து மற்றும் கோவா சட்டசபைகளின் செயலகங்களில் பல்வேறு பொறுப்புகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் நிறைந்த கோதண்டராமன் என்பவர், டெல்லியில் உள்ள பாராளுமன்ற செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்த அவர், கடந்த 6-6-2008 அன்று பாராளுமன்ற தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக மனு அளித்தார்.

தலைமைச் செயலாளரும் அந்த மனுவினை பரிசீலனை செய்து கோதண்டராமன் விருப்ப ஓய்வில் (வி.ஆர்.எஸ்.) செல்வதற்கு அனுமதி வழங்கினார். இதனையடுத்து, அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுளுக்குப் பிறகு, தனது பணி ஓய்வை மனைவி விரும்பாததால், மீண்டும் தனக்கு பணி வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற செயலகத்தில் கோதண்டராமன் மனு அளித்தார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பாராளுமன்ற தலைமைச் செயலாளர் அவரது கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து, தனக்கு மீண்டும் பணி வழங்கும்படி பாராளுமன்ற தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் கோதண்டராமன் வழக்கு தொடர்ந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அந்த வழக்கை ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறி தள்ளுபடி செய்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் தீபா ஷர்மா ஆகியோர் விருப்ப ஓய்வினை திரும்பப் பெறும் தகுதியை கோதண்டராமன் இழந்து விட்டதாக கூறி கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதிப்படுத்தினர்.

’தனது ஓய்வூதிய விண்ணப்பத்தில் மனைவியின் புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் தானும் சான்றொப்பம் செய்துள்ள கோதண்டராமன், வேண்டுமேன்றே உண்மையை மறைத்து, பொய்யான காரணத்தை காட்டி, மீண்டும் அரசு வேலை பெற முயற்சித்துள்ளார்.

சட்டங்களை இயற்றக் கூடிய பாராளுமன்றத்தின் தலைமை செயலகத்தில் பொறுப்பு மிக்க அதிகாரியாக பதவி வகித்த ஒருவர், இரண்டாண்டுகள் வரை யோசித்து, நன்கு திட்டமிட்டு, சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறிய வகையில், ஏற்கனவே பல வழக்குகளை தீர்க்க திண்டாடிக் கொண்டிருக்கும் நீதிமன்றத்தில் இதைப்போன்ற ஒரு தேவையற்ற வழக்கை தொடுத்து, இந்த நீதிமன்றத்தின் பணிகளையும், எதிர்தரப்பு நேரத்தையும் வீணடித்துள்ளார்.

மேற்கண்ட காரணங்களை வைத்துப் பார்க்கும்போது, மனுதாரரின் வாதம் ஏற்கத்தக்கதல்ல என்று இந்த நீதிமன்றம் கருதுகின்றது. எனவே, கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பினை இந்த நீதிமன்றம் உறுதிப்படுத்துகின்றது.

எதிர்தரப்பின் நேரத்தை வீணடித்ததற்காகவும், அவர்களுக்கு தேவை இல்லாமல் கோர்ட் அலைச்சல் மற்றும் வழக்கு செலவினங்களை ஏற்படுத்தியமைக்காகவும் கோதண்டராமனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திர்ப்பளிக்கின்றோம்.

அவர் கடைசியாக வேலை செய்த அலுவலகத்துக்கு இந்த தொகையை இன்னும் நான்கு வார காலத்துக்குள் கோதண்டராமன் செலுத்த வேண்டும். தவறினால், அவரது ஓய்வூதியத்தில் இருந்து, மாதந்தோறும் ஐயாயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு பிடித்தம் செய்து, மேற்படி தொகையை பற்றாக்கிக் கொள்ளலாம்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 03.07.2026