Sunday, October 12, 2014

டி.எஸ். பாலையா நூற்றாண்டு: எம்.ஜி.ஆர். பொறாமைப்பட்ட நடிகர்!



இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண். அங்கே பிரபலமாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்துவிடத் துடித்தவருக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி, பல இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.

அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.

எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.

அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.

பி.யூ.சின்னப்பா நடித்த ஆரிய மாலா (1941), ஜகதலப் பிரதாபன் (1944) போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர்தான் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.

மீட்டுவந்த சுந்தரம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார் பாலையா. பாண்டிச்சேரிக்குப் பட வேலையாகச் சென்றிருந்த மாடர்ன் தியேட்டர் டி.ஆர். சுந்தரம் கண்ணில் பட்டிருக்கிறார். ‘யார்டா அந்தச் சாமியார். பாலையா மாதிரி தெரியுதே’ என்று ‘கண்டு’ அவரைப் ‘பிடித்து’ அந்தக் கணமே அவரை வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சேலம் வந்து சேர்ந்து விட்டார். அடுத்தநாளே அங்கே படப்பிடிப்பு நடந்துவந்த ‘பர்மா ராணி’ என்ற படத்திலும் நடிக்க வைத்து விட்டாராம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சித்ரா’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். ஒரு மலையாளப் படம் ‘ப்ரசன்ன’. லலிதா, பத்மினி நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பாலையா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார்.
முன்னோடிக் கதாபாத்திரம்
வேலைக்காரி (1949) படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் பாத்திரம்தான் பின்னாட்களில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். செய்த பகுத்தறிவுக் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார். இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி! என்றாலும் பகுத்தறிவு இயக்கத்தின் அபிமானியாகவும் இருந்தார். திரையில் பகுத்தறிவு பீரங்கியாக இருந்த நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் கடைசி நாட்கள் வரை இணை பிரியாத நண்பராக இருந்தார்.
நகைச்சுவை வில்லன் முத்திரை
1956-ல் ‘மாமன் மகள்’ படத்தில் ஜெமினி,சாவித்திரி,சந்திரபாபு, டி.எஸ்.துரைராஜ் ஆகியோருடன் பாலையா நடித்தார். அதே வருடம் மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.

‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.
மாற்று இல்லாத குணச்சித்திரம்
குணச்சித்திர நடிப்பிலும் ரங்காராவ் போல உச்சத்தைத் தொட்டவர் பாலையா. பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. ‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.
தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’

அடிமைப ்பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார். அந்தப் பாத்திரத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை. அசோகன்தான் அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.
பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.
‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங்', ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை' போன்ற பாடல்கள் சாய்பாபா பாடியவைதான்.
அப்பா வழியில் திரைக்கு நடிக்க வந்த அவரது மற்றொரு மகன் ஜூனியர் பாலையா. அப்படியே பாலையாவின் மற்றொரு நகலாக விளங்குகிறார்.
ஏழு பிள்ளைகளின் தந்தையான பாலையா 1972-ல் மறைந்தபோது அவருக்கு வயது 60. ரங்காராவ் போல இவரும் முதுமையைப் பார்க்காமலே தான் மறைந்தார். நடிப்புலகில் அவரது முன்மாதிரி என்றும் மறையாது.

படங்கள் உதவி: ஞானம்
பாலையாவுக்கு மாற்று இல்லை!
காலத்தை வெல்லும் தமிழ்ப்படங்களின் வரிசையில் 50 ஆண்டுகளைக் கொண்டாடி முடித்திருக்கிறது ’காதலிக்க நேரமில்லை’. ஒய்.ஜி.மகேந்திரனின் முன்முயற்சியில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘காதலிக்க நேரமில்லை’ பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மனோபாலா, இந்தப் படத்தின் மறுஆக்க உரிமையை வாங்கியும் அதைப் படமாக்க முடியவில்லை என்று அதற்கான காரணத்தைக் கூறியபோது, அரங்கமே அதிர்ந்தது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
“காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சந்தோஷத்துடன், அந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீதரை பார்க்கச் சென்றேன். எனக்கு வாழ்த்துகள் சொன்ன அவர் நட்சத்திரங்களை தேர்வு செய்துவிட்டாயா என்றார். நான் இன்று பிரபலமாக இருக்கும் இளம் நட்சத்திரங்களின் பெயர்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வந்தேன். உடனே என்னை இடைமறித்த அவர், “எல்லாம் சரி.. பாலையா கேரக்டருக்கு யாரைப் போடப்போறே?” என்றார். நானும் அவர் முன்னால் அமர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் பாலையாவுக்கு மாற்றாக எனக்கு யாருமே தோன்றவில்லை. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு மறுஆக்க உரிமையை அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார்.

No comments:

Post a Comment

T.N. govt. fixes issues with non-subdivision online patta transfers

T.N. govt. fixes issues with non-subdivision online patta transfers The Hindu Bureau CHENNAI. 04.07.2026 The Tamil Nadu government has simpl...