புதிதாக பாஸ்போர்ட் பெற நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100-இல் இருந்து 2 ஆயிரத்து 550 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேர்முகத் தேர்வுக்கான முன் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக செல்பவர்கள் பாஸ்போர்ட் எடுக்க மேற்கண்ட நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர்.
இவர்களில் சிலருக்கு விண்ணப்பித்த உடனே பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க முன்கூட்டியே அனுமதி (அப்பாயின்ட்மென்ட்) பெற வேண்டும். இந்த அனுமதி ‛ஆன்-லைன்’ மூலமாகத்தான் பெற வேண்டும். இந்நிலையில், முன் அனுமதி கிடைப்பதற்கான கால அவகாசம் 20 நாளில் இருந்து 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‛தி இந்து’விடம் கூறியதாவது:
பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினம்தோறும் நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். சிலர் நாங்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து குறிப்பிட்ட காலத்திற்குள் பாஸ்போர்ட் பெற்று விடுகின்றனர். ஆனால், சிலர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பது இல்லை. அல்லது விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்வது, விண்ணப்பத்தை பெறும் அலுவலர் அதை சரியான முறையில் பரிசீலனை செய்யாதது மற்றும் காவல்துறை விசாரணையில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் அவர்களுக்கு பாஸ்போர்ட் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ‛சமூக தணிக்கைப் பிரிவு’ (Social Audit Cell) என்ற பெயரில் புதிய தகவல் உதவி மையம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், பொதுமக்களின் குறைகள் உடனடியாக கண்டறியப்பட்டு தீர்வு காணப்படுவதால் விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், நேர்முகத் தேர்வுக்கான முன் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித சிரமும் இன்றி விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும்.
இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
No comments:
Post a Comment