Wednesday, May 20, 2015

கேள்விக் குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 2 ஆயிரம் செவிலியர் பள்ளிகள் - நடவடிக்கை எடுக்க நர்ஸிங் கவுன்சில் முடிவு


தமிழகத்தில் அரசு அங்கீகாரம் இல்லாமல் சுமார் 2 ஆயிரம் தனியார் செவிலியர் பள்ளிகள் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 175 செவிலியர் கல்லூரிகள், 187 செவிலியர் பள்ளிகள் உள்ளன. செவிலியர் கல்லூரியில் 4 ஆண்டு பிஎஸ்சி நர்ஸிங் படிப்பும், செவிலியர் பள்ளியில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ நர்ஸிங் படிப்பும் நடத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள இடங்கள் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நடத்தும் கவுன்சலிங் மூலம் நிரப்பப் படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகள், பள்ளிகள் மாநில அரசுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, எஞ்சிய இடங்களை தங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பிக்கொள்கின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவ தும் சுமார் 2 ஆயிரம் தனியார் செவிலியர் பள்ளிகள் அரசு அங்கீகாரம் இல்லாமலேயே இயங்கிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் சங்கத் தலைவர் ஆர்.விவே கானந்தன், ஒருங்கிணைப் பாளர் எ.சிதம்பரம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் சுமார் 2 ஆயிரம் தனியார் செவிலியர் பள்ளிகள் இயங்கு கின்றன. இங்கு குறுகிய கால செவிலியர் சான்றிதழ், டிப்ளமோ நர்ஸிங் போன்ற படிப்புகளை நடத்துகின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள்தான் செவிலியர் படிப்பில் சேர முடியும். ஆனால், அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் செவிலியர் பள்ளிகள் 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், பிளஸ் 2-வில் தோல்வி அடைந்தவர்களைக்கூட சேர்த்துக்கொள் கின்றன. விளம்பரங்களை நம்பி, இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத செவிலியர் பள்ளிகளில் பல மாணவ, மாணவிகள் சேர்ந்துவிடுகின்றனர். அங்கீகாரம் இல்லாத பள்ளி என்பது, படித்து முடித்த பிறகுதான் அவர்களுக்கு தெரியவருகிறது. இதனால், அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் தனியார் செவிலியர் பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இணையதளத்தில் விவரம்

தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழும (நர்ஸிங் கவுன்சில்) பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி கூறியதாவது:அரசு அங்கீகாரம் இல்லாமல் தமிழகத்தில் பல தனியார் செவிலியர் பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்துள்ளன. இது பற்றி ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த செவிலியர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் செவிலியர் பள்ளிகள் போலியானவை.

அங்கு படித்து முடித்தவர்களை செவிலியர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பெற்றது போலிச் சான்றிதழாகும். தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் அவர்கள் பதிவு பெறவும் முடியாது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் கல்லூரிகள், பள்ளிகள் விவரம், தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் (http://www.tamilnadunursingcouncil.com) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதை பார்த்து தெரிந்துகொண்டு, தாங்கள் படிக்கப் போகும் செவிலியர் பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை நன்கு உறுதி செய்த பிறகே, படிப்பில் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024