Thursday, May 21, 2015

சிந்திக்க வைத்துவிட்டு போய்விட்டாயே அருணா

1800–ம் ஆண்டு இறுதியில் ஜெர்மன் நாட்டில் புகழ்பெற்ற தத்துவவாதியான பிரைடுரிச் நீட்ஷ் உதிர்த்த பல தத்துவங்கள் இன்றளவும் சமுதாயத்தை சிந்திக்க வைக்கும் கருத்துக்களாகவே இருக்கிறது. உலகில் பெருமையோடு வாழவழியில்லையென்றால், பெருமையோடு சாகவேண்டும் என்று அவர் அன்று சொன்னது, இன்று ஒரு விவாதத்துக்கு வழிவகுத்துவிட்டது. கருணைக்கு எடுத்துக்காட்டாக மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் 42 ஆண்டுகளாக 800 நர்சுகளின் அன்பான அரவணைப்பில் இருந்து, இப்போது இன்னுயிர் ஈத்த அருணா ஷென்பாக் என்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நர்சின் வாழ்க்கை உலகையே நெகிழவைத்துவிட்டது.

அதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்த சோகன்லால் பர்தா வால்மிகி என்ற காமப்பிசாசு, அருணா மாதவிலக்காக இருந்த நிலையிலும் அவரை நாயை கட்டும் சங்கிலியால் சத்தம் போடக்கூடாது என்பதற்காக கழுத்தில் கட்டி, பலாத்காரமாக இயற்கைக்கு மாறான முறையில் கற்பழித்தான். இதனால் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் அருணா செயலிழந்த நிலையில், ஒரு மரக்கட்டைபோல படுத்துக்கிடந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இந்த செயலை செய்த மாபாதகனுக்கு கற்பழிப்பு என்ற வழக்கு இல்லையாம். கொள்ளை, கொலை முயற்சி என்ற வகையில் வழக்குப்போட்டு, 7 ஆண்டுகள் தண்டனைக்குப்பிறகு சுதந்திர பறவையாக வெளியே வந்துவிட்டான்.

அருணாவை பெற்றோர், உற்றோர் கைவிட்டாலும், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுகள் ஒரு சிறு குழந்தையைப்போல நன்கு பார்த்துக்கொண்டனர். இடையில் அவரை கருணை கொலை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நர்சுகள் நாங்கள் பார்த்துக்கொள்வோம், அதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டதால், உச்சநீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை.

அருணாவின் சாவு நாட்டில் ஒரு விவாதத்தையே இப்போது உருவாக்கிவிட்டது. அருணாவை இத்தகைய கருணை கொண்ட நர்சுகள் கவனித்துக்கொண்டார்கள். ஆனால், இதுபோல உணர்வு இல்லாமல் உயிர்மட்டும் இருக்கும் அருணாக்களை நாட்டில் யார் பார்ப்பது?, பல நோயாளிகள் இதுபோல மூளைச்சாவு, அல்லது கோமா நிலையில் இருக்கும்போது டியூப் மூலம்தான் மூச்சு, டியூப் மூலம்தான் உணவு என்ற நிலையில் உயிர்மட்டும் இருக்குமே தவிர உணர்வு இருக்காது, நிச்சயமாக பிழைக்கவும்மாட்டார் என்ற நிலையில், இந்த வாழ்க்கையால் அவர்களுக்கும் பயனில்லை, மற்றவர்களுக்கும் பாடு என்கிறபோது, கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று குடும்பத்தினர் சொல்கிறார்கள். ஆனால், யூதனேசியா அல்லது கருணைக்கொலை செய்வதற்கு இந்தியாவில் உள்ள சட்டங்களில் இடமில்லை. என்றாலும், கருணை சாவு அதாவது யூதனேசியா பாசீவ் என்ற நிலையில் மருத்துவமனைகளில் டாக்டர்கள் அறிவித்தபிறகு, 3 நிபுணர்கள் அறிக்கை தந்து, அதை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உத்தரவைப்பெற்றால், அவர்களுக்கு செயற்கை முறையில் உடலை இயக்கும் அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்டபிறகு உயிர்தானாகவே போய்விடும்.

ஊசிபோட்டு கருணை கொலைசெய்வதை வேண்டுமானால் அனுமதிக்கவேண்டாம். ஆனால், இதுபோல அவர்களுக்கும் பயனில்லாமல் உயிர்பிழைக்கவும் வாய்ப்பே இல்லாமல், அனைவருக்கும் இடையூறாக இருக்கும் இதுபோல உயிர்களை கருணை சாவு மூலம் வழியனுப்ப உள்ள நடைமுறைகளை எளிதாக்கவேண்டும். இப்போதும் இது மருத்துவமனைகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிழைக்க வழியில்லை என்று தெரிந்துவிட்டால் குடும்பத்தினரே வீட்டுக்கு எடுத்துச்செல்கிறோம் என்று கூறி எடுத்து சென்றுவிடுகிறார்கள். எனவே, அரசு இதை ஆழமாக விவாதித்து, கருணை கொலைவேண்டாம், கருணை சாவுக்கு எளிதான முறைகளுக்கான சட்டங்களை கொண்டுவரவேண்டும். வாழும்போதே கருணை சாவுக்கு அனுமதிகேட்கும் வகையில் உயில் எழுதவும் வழிவகுக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024