Monday, May 18, 2015

பி.இ. சேர்க்கை: வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகள், வெளிநாட்டினர் ஆகியோரிடமிருந்து பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் துறைகளில் குறிப்பிட்ட சதவீதம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வெளிநாட்டு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கும், வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்குமான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த ஒதுக்கீடுகளில் சேர விரும்புபவர்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆன்-லைனிலேயே பூர்த்தி செய்து, பதிவிறக்கம் செய்து விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 12,700 ஆகும். கட்டணத்தை "இயக்குநர், சர்வதேச விவகாரங்களுக்கான மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25' என்ற பெயரில் நியூயார்க்கில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "இயக்குநர், சேர்க்கை மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 600 025' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவர்களுக்கான படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 4.75 லட்சமாகும்.
தொழில் நிறுவன கூட்டமைப்பு ஒதுக்கீடு: இதுபோல் தொழில் நிறுவன கூட்டமைப்பு ஒதுக்கீட்டின் கீழான பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும் பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. மொத்த சேர்க்கை இடங்களில் 5 சதவீதம் இதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 500-க்கான வரைவோலையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 10 கடைசித் தேதியாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024