Sunday, May 17, 2015

குட்டி நாய் கடித்தாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பெண் பலி: டாக்டர்கள் எச்சரிக்கை

மூன்று மாத நாய் குட்டி தானே கடித்தது என, அலட்சியமாக இருந்த சேலம் பெண் ஒருவர், 'ரேபிஸ்' நோய் பாதிப்பால் இறந்தார். 'குட்டி நாய் கடித்தாலும், அலட்சியம் வேண்டாம்; உடனடி சிகிச்சை பெறுங்கள்; நாய் எச்சில் உடலில் படுவதும் ஆபத்து' என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர், பழனியம்மாள், 45. இவரை, ஒரு வாரத்திற்கு முன், வீட்டின் அருகே சுற்றித்திரிந்த, மூன்று மாதமே ஆன, நாய் குட்டி கடித்தது; பெரிதாக காயம் இல்லை. 'குட்டிநாய் தானே; என்ன ஆகப்போகிறது' என, அவர், அலட்சியமாக இருந்தார். மூன்றாம் நாளில், நாய் கடித்த இடத்தில், திடீரென அரிப்பு ஏற்பட்டு, புண் ஆனது. பயந்து போய், குன்னூரில் உள்ள, அரசு நாய்க்கடி சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலை யில், அரிப்பு நின்று விட்டது; மூன்று நாட்களில் வீடு திரும்பினார். அடுத்த நாளே, எதிர்பாராதவிதமாக இறந்துள்ளார். இது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதார துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது: சேலம் அம்மாபேட்டையில், மூன்று மாத குட்டி நாய் கடித்து, ஒரு வாரத்தில், பழனியம்மாள் என்ற பெண் இறந்துள்ளது உண்மை தான். ஏதோ ஒரு வகையில், குட்டி நாய்க்கு, 'ரேபிஸ்' தொற்று இருந்துள்ளது. குட்டி நாய் கடித்த அன்றே, சிகிச்சை பெற்றிருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. விதவிதமான நாய்களை, வீடுகளில் செல்ல பிராணி யாக வளர்ப்பது, நகர்ப்புறங்களிலும் அதிகரித்து விட்டது. அவற்றுக்கு, முறையான தடுப்பூசி போட்டு பராமரிப்பது அவசியம்; இல்லாவிட்டால் சிக்கல் தான். நாய்கள் செல்லமாக, மனிதர்களை கொஞ்சும்போது, எச்சில், மனிதர்களின் உடலில் படுகிறது; இதை தவிர்க்க வேண்டும். எச்சில் படும் இடங்களில் நமக்கு புண் இருந்தாலோ, கீறல் பட்டிருந்தாலோ அதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள், முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; குட்டி நாய் கடித்தாலும், உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024