Thursday, May 21, 2015

தேவை தேர்வு முறைகளில் திருத்தம்

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள இந்த நேரத்தில், பயமும் கூடவே வருகிறது.
பெறும் மதிப்பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் ஆக்க சக்தியாக அமையப் போகின்றன என்றாலும் குறைந்த மதிப்பெண்கள், அதனினும் குறைந்து தேர்ச்சியில்லாமல் செய்துவிடுகின்ற மதிப்பெண்கள் எத்தனை இளங்குருத்துகளின் உயிர்களைக் குடிக்கப் போகின்றனவோ என்கிற அச்சம்தான் மிகுகிறது.
தேர்வு, அறிவின் வாசல்களைத் திறந்துவிடுகிற செயல்பாடாக இல்லாமல், ஒரு சூதாட்டம்போல் கவிந்துவிடுகிற அவலம் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்துவருகிறது.
பன்முகத் திறனைப் பரிசோதிக்கும் வகையில் இன்றி, மனப்பாடத் திறனை அளந்து பார்க்கும் மொன்னை அளவுகோலாகவே தேர்வுகள் இருப்பதால் அது பலரைச் சரித்துவிடுகிற சறுக்கு மரமெனவே ஆகிவிடுகிறது.
ஆண்டுக்கணக்கில் கற்ற பாடங்களை, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் விடைத்தாளில் கொட்டிவிடுகிற தன்மையைப் பொருத்துத்தான் எல்லாமும் என்றால், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு எழுதும் பிள்ளையின் மனநிலை, தேர்வெழுதும் வகுப்பறைச் சூழல், தட்பவெப்பம் எல்லாம் எல்லா நாள்களிலும் இயல்புற இருந்துவிடுமா என்ன?
எப்போதும்போல, முதல் மற்றும் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்ற பிள்ளைகளைப் பாராட்டிப் பரிசுகள் கொடுத்தும் படம் எடுத்தும் மகிழ்ந்து போகிற நம்மில் பலர், மதிப்பெண் குறைந்து உயிரைத் துறக்கிற குழந்தைகள் குறித்து அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையே என்கிற கவலையும் வருகிறது.
முன்னவர்களைக் காட்டிலும் பின்னவர்களே இந்தத் தேர்வில் அதிகம் இருக்கிறார்கள். முன்னவர்களைக் காட்டிலும் பின்னவர்களைப் பேணுவதுதான் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய அவசர அவசியப் பணி. அது தாற்காலிகப் பணி. நிரந்தரமாக நாம் செய்ய வேண்டியது, தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய திருத்தம்தான்.
கல்வி அறிவு சார்ந்தது; அறிவு ஒழுக்கம் சார்ந்தது; ஒழுக்கம் சூழல் சார்ந்தது; சூழல் சரியாக இருக்கும் வரையில் எல்லாமே சரியாக இருக்கும். சூழல் சரிகிறபோது அனைத்துமே சரிந்துவிடுகிற அபாயம் எழுகிறது.
உலகத்தின் அனைத்து வாயில்களுக்குமான திறவுகோலாகக் கல்வியைக் கருதும் காலம். ஏனைய எல்லாச் செல்வங்களையும் இதன் வாயிலாகப் பெற்றுவிட முடியும் என்பதால் பெறற்கரிய செல்வங்களில் தலைசிறந்த செல்வமாகக் கல்வியைக் கருதுகிற காலம்.
வாழையடி வாழையென வரும் மானுட குலத்தின் முந்தைய அனுபவங்களின் திரட்சியை, அடுத்துவரும் சந்ததியர்க்கு வழங்கும் பாங்கைக் கல்வி தனது அடிப்படைக் கூறாகக் கொண்டுள்ளது.
ஒவ்வோர் உயிரும் தாயின் கருவறையில் உதயமாகும்போதே, அதன் அறிவுபெறும் வாயில் திறக்கப் பெறுகிறது.
தாயின் மனவுணர்வுகள், உடல்கூறுகள், அந்தந்தப் பகுதித் தட்பவெப்பச் சூழல்கள் யாவும் அவ்வுயிரின் அணுக்களில் நுட்பமாகப் பதிவாகின்றன. மெல்ல வளர்ந்து, உருவெய்தத் தொடங்கியபின்பு, அந்தக் குழந்தை, தன் ஆற்றல்சார் சிந்தனைக்குரிய தளங்களில் அறியாமை நிரப்பியிருப்பதை, அனுபவங்கள் வாயிலாக உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக, அறியாமையை அகற்றி அறிவைக் குடியேற்றப் பயில்கிறது.
மகளுக்குத் தாயும், மகனுக்குத் தந்தையும் முன்மாதிரிகள். பின்னர், வெவ்வேறு நிலைகளில் குருவாக அமையும் இருபால் ஆசிரியப் பெருமக்களே அவர்களின் அறிவை விரிவு செய்ய உதவுபவர்கள்.
காணுதல், கேட்டல், உரைத்தல், உணர்தல் முதலிய தன்மைகளில் அனுபவங்களாகப் பெறும் கல்வி, புலன்கள் ஊடாகச் சென்று உணர்வில் கலந்து, உயிரில் நிலைபெறுகிறது. அவ்வாறு ஒருமுறை பெறும் கல்வி, எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்கிறது வள்ளுவம்.
பொதுவாக, உறுப்புகள் ஒத்து விளங்கினாலும், மானுட சமூகத்தில் ஒவ்வோர் உயிர்க்கும் வெவ்வேறு படிநிலைகள் இருக்கின்றன. ஒருதாய் வயிற்றில் பிறந்த, ஒரே சூழலில் வாழ்கிற, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாயினும், அவர்களிடையே தனித்த மனப்போக்குகள், அறிவாற்றல் தன்மைகள் நிலவக் காணலாம். எனவே, பெறும் கல்வி ஒன்றாக இருந்தாலும், பெறுபவர் - நல்குபவர் ஆகிய இருவேறு நபர்களின் இயல்புகளைப் பொருத்தே அமைகிறது.
1. காட்சி, கேள்விகளின் ஊடாக, உய்த்தறியும் அனுபவங்களின் அடிப்படையில் மெய்ப்பொருள் காண்பது.
2. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது.
3. எவ்வதுறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது.
என்ற நிலைபாடுகளில் எய்தும் அறிவு, சென்ற இடத்தால் செலவிடாது தீமையில் இருந்து நீங்கி, நன்றின்பால் உய்ப்பதாக இருத்தல் வேண்டும். அதுவே, அற்றம் காக்கும் கருவி கேடில் விழுச்செல்வம். அதன் பயன், பிறிதின் நோய் தன் நோயாய்க் கருதிக் களைந்து நலம் பேணும் பாங்கில் மன்னுயிர் ஆக்கத்துக்குத் தன்னைத் துணையாக்கித் தன்னுயிர்க்கும் ஆக்கம் பேணல்.
இந்த மரபில் வரும் கல்வியே, மாசுமறுவற்ற தூய அறிவை - வாலறிவை நோக்கி, மானுடத்தை உயர்த்துவது. இதன்வழி வளர்ந்து முன்னேகும் மானுட உயிர் கசடறக் கற்று, கற்றவாறு ஒழுகி, வானுறையும் தெய்வத்துக்கு நிகராக நிற்கும் தன்மையைப் பெறும்.
ஓதியுணர்ந்து பிறர்க்குரைத்துத் தானடங்கல் என்பதே கற்றல் முறை. இது, இன்றைய கல்வி முறையில் இருக்கிறதா என்பதுதான் இமாலயக் கேள்வி.
வணிகமயமான வாழ்வில், உலகமயமாக்கல் விரவிவரும் சூழலில், தனித்தன்மைகள் எல்லாம் அடிபட்டுப்போய் - உயிர் வளர்க்கும் கல்வி - பணம் சேர்க்கும் ஒரு வாயிலாகச் சுருங்கிப் போய்விட்டது.
அதனால்தான், மொழி என்பது உரையாடலுக்கு உதவும் ஓர் ஊடகம் மட்டுமே என்ற அளவில் மொன்னையாக்கப்பட்டுவிட்டது. ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் ஆகியன எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. விலை மதிப்பில் பல மடங்கு உயர்வு பெற்றுள்ள கல்வி, விழுமிய நிலைப்பாட்டில் பலமடங்கு சரிவு பெற்றுப்போகிறது.
இறைவனை ஒத்த குருவைக் கொண்டு பெறும் குருகுலக் கல்வி ஒழிக்கப்பட்டுவிட்டது. இயந்திரங்கள்போல் மொழி பேச, எழுதப் பழகிய மனிதப் பொம்மைகள் இன்றைய கல்விக் கூடங்களில் வார்க்கப்படுகின்றன.
என்னென்ன வகைகளில் முடியுமோ அந்தந்த வகைகளில் முயன்று குழந்தைகளின் மூளைகளில் விடைகளைத் திணிக்கவும், வேண்டும் நேரத்தில் விடைத்தாள்களில் இட்டு நிரப்பவும் போதுமானதாகக் கல்வித் தேர்வு முறைகள் ஆகிவிட்டன.
ஏன், எதற்கு, எவ்வாறு என்றெல்லாம் அறிந்து கொள்வதற்குப் பதிலாக அளவுக்கு மேலாக விழுங்கித் துப்பும் முறையே மிகுந்தமையால் முடிந்தவர்கள் விழுங்கப் பழகிக் கொள்கிறார்கள், முடியாதவர்கள் வேறு பல சாகசங்கள் நிகழ்த்தத் தூண்டப்படுகிறார்கள்.
தெய்வீக உறவாக இருந்த ஆசிரிய - மாணவ உறவு பல்வேறு சிதைவுகளுக்கு உள்ளாகிவிட்டது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதெல்லாம் தேர்வில்கூடச் செல்லாச் சொல்லாகிவிட்டது. ஒரு குற்றவாளியைக் கண்காணிப்பதுபோல் கண்காணித்து நடத்தப்படும் தேர்வில் எழுதப்படும் விடைகள் தரும் மதிப்புதான் என்ன?
கண்முன் பூதாகரமாய் நிற்கும் எதிர்காலத்தை வெல்லும் ஆயுதமாக, கல்வி திகழ்வதற்குப் பதிலாக அச்சம் தருவதாக அமைந்தால் அதற்கே தேர்வுகள் துணை செய்யும் என்றால் மிச்சத்தை என்ன சொல்ல?
வினாத்தாளில் வரிசை வரிசையாக நிற்கும் வினாக்குறிகள், கழுத்தை வளைக்கும் பாம்புகளைப்போல் பயமுறுத்தினால், தன்னம்பிக்கை, வளைந்த முதுகுத்தண்டுபோல் ஆகி பிள்ளைகளின் மனங்களையும் வளைத்துவிடுமே. அவர்கள் வருங்காலத்தை ஒடித்தும் போட்டுவிடுமே.
உணவுபோல் ருசித்து, மென்று தின்று, ஜீரணித்து உள்வாங்கப்படுவதாக அல்லவா அறிவுதரும் கல்வி அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு பெறுகிற கல்வியறிவு உணர்வில் கலந்து உயிரோட்டமாக அல்லவா வெளிப்பட வேண்டும்.
ஞானமும், ஒழுக்கமும் பேணப்படாத கல்வியால் நாம் பெறப்போவது என்ன? வெறும் மனப்பாடத் திறன் மட்டுமே அறிவை, ஆற்றல்சார் நம்பிக்கையை அளித்துவிடுமா?
தனித்தன்மை மிக்க குழந்தைகளின் ஆற்றல்களுக்குச் சவால் விடவேண்டிய தேர்வு முறை, பல்திறன் ஆற்றல்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்துதற்கு வழிவகுக்காமல், நினைவாற்றலை மட்டுமே பரிசோதிப்பதாக இருப்பதால் என்ன சிறப்பு?
அச்சமின்றி, மிகுந்த ஆர்வத்தோடு மாணவ உலகம் பங்கேற்கும் வண்ணம் உற்சாகமும், ஊக்கமும், நம்பிக்கையும் தருகிற தேர்வை நாம் எப்போது நடத்தப் போகிறோம்?
வெற்றிபெற்றால் கிடைக்கும் பரிசு, பாராட்டு ஆகியவற்றையெல்லாம்விட, தோல்வியுற்றால் கிடைக்கும் அவமானம், சரிவு ஆகியவற்றை எண்ணிக் கலங்கும் பல பள்ளிப் பிள்ளைகள் எடுக்கும் முடிவுகள் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்கிற ஆபத்தை யாரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதே ஐயமாக இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் பெறும் கல்வியின் விளைச்சல், இந்தத் தேர்வு முடிவுகளைப் பொருத்துத்தான் அமையும் என்பதால், அளவுக்கு மீறிய அச்சத்தையும், ஆபத்தான போக்குகளையும் எந்த நிலைக்கும் பிள்ளைகளைக் கொண்டுபோய் நிறுத்தும் என்கிற நம்பிக்கையற்ற தன்மையையும் இந்தத் தேர்வு முறை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருந்தால், இளைய சமுதாயத்திடம் இருந்து ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற முடியுமா என்பது ஐயமே.
ஒளிபடைத்த கண்ணோடும், உறுதி கொண்ட நெஞ்சோடும், களிபடைத்த மொழியோடும், கடுமை கொண்ட தோளோடும் இளைய பாரதம் வலம் வர வேண்டும் எனில், தெளிவு பெற்ற மதி வேண்டும். அத்தகு மதி தரும் கல்வி வேண்டும். அது நிம்மதியைத் தொலைத்துப் பெறுவதாக இருக்க கூடாது.
"கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதியது இயற்றுவாய் வா வா வா'
என்று பாரதியார் கூவி அழைக்கிற பாரத சமுதாயம் விரைவில் வரக் கல்வி முறையில் மாற்றம் தேவை. அதனைவிடவும் தேர்வு முறைகளில் உடனடி மாற்றம் தேவை.

கட்டுரையாளர்:
துணைப் பேராசிரியர்,
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,
புதுச்சேரி.
உணவுபோல் ருசித்து, மென்று தின்று, ஜீரணித்து
உள்வாங்கப்படுவதாக அல்லவா அறிவுதரும்
கல்வி அமைந்திருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024