Wednesday, May 13, 2015

மதுரையில் அமைகிறது 'எய்ம்ஸ்' மருத்துவமனை: அறிக்கை சமர்ப்பித்தது ஆய்வுக்குழு..DINAMALAR 13.5.2015

சென்னை: தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடங்களை ஆய்வு செய்த மத்திய குழு, ஆய்வு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவ மனை கிளை அமைக்க, மத்திய குழு பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

'டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை போன்று, தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, தமிழகத்தில், மதுரை - தோப்பூர்; ஈரோடு - பெருந்துறை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களை, தமிழக அரசு பரிந்துரைத்தது. மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் தலைமையிலான, ஐந்து பேர் கொண்ட குழு, ஏப்ரல் மாத இறுதியில், தமிழகம் வந்து, மாநில அரசு பரிந்துரைத்த, ஐந்து இடங்களையும் ஆய்வு செய்தது.

இந்நிலையில், மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நேற்று தகவல் பரவியது. 'மத்திய குழு ஆய்வு அறிக்கையை, முறைப்படி மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; இன்னும், இடம் உறுதி செய்யபப்படவில்லை' என, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய குழுவின் ஆய்வு அறிக்கையில், 'மதுரை இடம், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, எல்லா வகையிலும் ஏற்புடையதாக உள்ளது' என, பரிந்துரைத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்மாவட்ட மக்கள் அதிகம் பயன்பெறும் வகையில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை, மதுரையில் அமையும் என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024