Thursday, November 17, 2016

நகைகள் 100கோடி...ஹெலிகாப்டருக்கு 20கோடி! காஸ்ட்லி கல்யாணத்தின் ஆச்சர்ய தகவல்கள் - படங்கள்


முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழில் அதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் இன்று பெங்களூருவில் இன்று பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. மகளின் திருமணத்தை நடத்த ரூ.200 கோடிக்கு மேல் ஜனார்த்தன ரெட்டி செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999-ம் ஆண்டுதான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்கள். தற்போதையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வாராஜுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ரெட்டி சகோதரர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது, சுரங்கத் தொழிலுக்கான லைசென்ஸ் கிடைத்தது. சுரங்கத் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஜனார்த்தனரெட்டிக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்ந்திருந்தது. கர்நாடகத்தில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார் ஜனார்த்தன ரெட்டி. தொடர்ந்து 2009-ம் ஆண்டு பெல்லாரி சுரங்க ஊழலில் சிக்கினார். இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்துதான் மகள் பராமனியின் திருமணத்தை நடத்துகிறார்.



மணமகன் ராஜிவ் ரெட்டிக்கு 25 வயதாகிறது. பிபிஎம் பட்டதாரி. மணமகள் பிரமானிக்கு 21 வயதாகிறது. ஹைதராபத் தொழிலதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன்தான் ராஜிவ். தந்தை நடத்தும் நிறுவனத்தின் வெளிநாட்டு தொடர்புகளை கையாள்கிறார்.

இந்த திருமணத்துக்காக எத்தனை கோடி செலவு செய்யப்பட்டது. எப்படி செலவிடப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். எல்ஈடி திரையுடன் கூடிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது.அழைப்பிதழை திறந்தவுடன் 'பிரமானி வெட்ஸ் ராஜிவ்' என்ற பாடல் திரையில் ஓடும். ரெட்டி குடும்பத்தினரும் திரையில் தெரிவார்கள். இதற்கு ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

திருமணத்துக்காக குடும்பத்தினர் அனைவருக்கும் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் ரூ.100 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் வருவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தவுள்ளது. இதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்துக்காக ரூ 20 கோடி செலவிடப்பட்டுள்ளது. திருமணத்துக்கான செட் அமைப்பது போன்ற பிற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திருமணத்துக்காக தனது 10 சொத்துக்களை அடமானம் வைத்து ஜனார்த்தன ரெட்டி பணத்தை திரட்டியுள்ளார். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக மாநில பெரும் அரசியல் புள்ளிகள் நடிகர்- நடிகைகள் தொழிலதிபர்கள் முதல் நண்பர்கள், உறவினர்கள் என 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.



இதனால் திருமணம் நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3000 தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வி.வி.ஐ.பிக்கள் திருமணத்தில் பங்கேற்பதால் 300 போலீஸ் அதிகாரிகளும் திருமணம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். திருமணத்தை நடத்தி வைக்க திருப்பதி கோயிலில் இருந்து 8 புரோகிதர்கள் வந்துள்ளனர்.

திருமணம் நடைபெறும் பெங்களூரு அரண்மனை மைதானம் பெல்லாரி நகரம் போலவே மாற்றப்பட்டுள்ளது. பெல்லாரி நகரில் உள்ள காவல் பஜார், தனாப்பா பீடி தெரு, ஜனார்த்தன ரெட்டி படித்த பள்ளி ஆகியவை அரங்குக்குள் எழுப்பப்பட்டுள்ளன. இரு பிரமாண்டமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெங்களூருவில் 1,500 நட்சத்திர ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல 2000 டாக்ஸிகள் விருந்தினர்களுக்காக ஓடுகின்றன. 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பறந்து பறந்து விருந்தினர்களை அழைத்து வரப் போகின்றன. குதிரைகள், யானைகள் போன்றவையும் விருந்தினர்களை வரவேற்க அரண்மனை முகப்பில் நிறுத்தப்படவுள்ளன.

- எம்.குமரேசன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024