சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினல் என்ற தகவல், பொது மக்களுக்கு பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. தரப்பில் இந்த கேள்வியை கேட்டதற்கும் மழுப்பலான பதிலையே அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கறுப்புப் பணத்தை கமிஷன் பெற்றுக் கொண்டு சிலர் மாற்றுவதாக தகவல் வந்தது. அதை தடுக்க பணத்தை மாற்ற வருபவர்களின் வலது கையில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் ஒரு நபர் மீண்டும், மீண்டும் அடுத்தடுத்த வங்கிகளில் ஒரே நாளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். இந்த மை அழியாது. வங்கி, தபால் நிலையங்களுக்கு ஆர்.பி.ஐ. ஆலோசனைபடி மை சப்ளை செய்யப்படும். முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும். அனைத்து வங்கி கிளைகளுக்கும் 5 மி.லி கொண்ட மை பாட்டில் கொடுக்கப்படும். அதில் உள்ள மூடியில் மை வைப்பதற்கான பிரஸ் இருக்கும். மை வைக்கும் பணியில் கேஷியர் அல்லது வங்கி தரப்பில் நியமிக்கப்படும் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இடது கை விரல்களில் மை வைக்கப்பட்டால் அவரால் பணத்தை மாற்ற இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து வங்கிகளுக்கும், தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், புதிய வரவான 2000 ரூபாய் நோட்டுக்களில் சாயம் போனால்தான் ஒரிஜினல் என்ற தகவலும் வெளியானதால் பொது மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த தகவல்கள் உண்மையா என்ற கேள்வியை ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பானா கில்வாலா முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "பணத்தை மாற்ற மட்டுமே விரலில் மை வைக்கப்படுகிறது. வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு மை வைப்பதில்லை. முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு நகரங்களிலும் கிராம பகுதிகளிலும் மை வைக்கும் பணி விரிவுப்படுத்தப்படும். ஆர்.பி.ஐ விதியில் சேதமடைந்த ரூபாய் நோட்டுக்களுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்கள் வழங்க முடியும். தேர்தலுக்கு மட்டுமே இடது விரலில் மை வைக்கப்படும். வங்கிகளில் பணத்தை மாற்ற வலது விரலில் மை வைக்கப்படுகிறது" என்றார்.
சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் ஒரிஜினல், மை வைக்கப்பட்ட நபர் மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா போன்ற கேள்விகளுக்கு அல்பானா கில்வாலா பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "விரலில் மை வைப்பதற்கு முன்பே குறிப்பிட்ட ஒரு வங்கியில் பணத்தை மாற்றியவர், அடுத்து 14 நாட்களுக்குப் பிறகே அந்த வங்கியின் எந்த கிளைகளிலும் பணத்தை மாற்ற முடியும். அதே நடைமுறை மை வைத்தப்பிறகும் தொடரும். இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் 2000 ரூபாய் நோட்டு சாயம் போனால்தான் ஒரிஜினல் என்பது குறித்தும் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் பவுண்ட் பணம், சாயம் போனால்தான் அது ஒரிஜினல் என்ற தகவலும் உள்ளது. தற்போது மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஆர்.பி.ஐ தெளிவான பதிலளிக்க வேண்டும். எங்களிடம் பொது மக்கள் கேட்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை" என்றனர்.
தபால்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஒரு நபர் 4,500 ரூபாய் வரை பணத்தை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் தபால்துறையில் புதிய ரூபாய் நோட்டு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் நலன்கருதி ஒரு நபருக்கு 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறோம். மேலும் 'மை' வைக்கும் நபர், மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா என்பதற்கும் பதில் இல்லை" என்றனர்.
இதனிடையே, ஏற்கனவே வெளியான 1000 ரூபாய் நோட்டிலும் சாயம் போனதாகவும் தகவல் உள்ளன. தற்போது, புதிய 2000 ரூபாய் நோட்டு வேறு வண்ணத்தில் இருப்பதால் அதிலும் சாயம் போகிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment