'எங்களுக்கு பணமே வேண்டாமே!' - பணமில்லா தேசங்கள் எப்படி இயங்குகின்றன? #CashlessCountries
இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், பணப் பரிவர்த்தனையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட சில நாடுகளும் (cashless countries) இருக்கின்றன. இங்கு பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் இதை அந்தந்த நாட்டு மக்கள் எதிர்த்தாலும் பின்னாளில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்
இத்தகைய நாடுகளில், 80 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை மக்கள் பணப் பரிவர்த்தனையை கைவிட்டு, அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குகின்றனர். ஆரம்பகாலத்தில் கொள்ளையர்கள் பேங்குகளிலும், பொருட்களை வாங்க கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்களிடம் பணத்தைக் கொள்ளையடித்ததால், இத்தகைய திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்பு, மக்களே ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதால், பணப் பரிவர்த்தனையை ஒழிக்கும் முயற்சியில் அந்த நாடுகள் இறங்கின. இதில், ‘இன்னும் 20 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களையும் கூடிய விரைவில் கேஷ்லெஸ் முறைக்கு (Cashless Method) மாற்றிவிடுவோம்’ என்கின்றன அந்த நாடுகள். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்...
பெல்ஜியம்
இங்கு முற்றிலும் பணப் பரிவர்த்தனை ஒழிக்கப்பட்டு, கேஷ்லெஸ் முறை கையாளப்பட்டு வருகிறது. இதை அதிகளவில் செயல்படுத்திவரும் முதல்நாடாக இது இருக்கிறது. இங்கு 93 சதவிகித வர்த்தகப் பரிமாற்றங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்தியே நடக்கின்றன. பெல்ஜியத்தில் 86 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டில் 3,000 யூரோக்களுக்கு அதிகமான தொகையை ஒருவர் செலவழிக்க விரும்பினால், அதை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே செய்யவேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் 2,25,000 யூரோக்கள் வரை அரசுக்கு அபராதம் செலுத்த நேரிடும்.
ஃபிரான்ஸ்
பெல்ஜியத்துக்கு அடுத்தபடியாக கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றும் நாடு ஃபிரான்ஸ். பெல்ஜியத்தைப் போன்றே ஃபிரான்ஸிலும் 3,000 யூரோவுக்கு மேல் ஒருவர் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால், அரசு மூலம் அந்த நபருக்கு கடும் தண்டனைகள் கிடைக்கும். அத்துடன், அதிக அபராதமும் செலுத்த நேரிடும். இங்குள்ள மக்களில் 93 சதவிகித மக்கள் பணப் பரிவர்த்தனையைச் செய்வது கிடையாது. இவர்கள் இணைய வழியாகவே தங்களின் பரிவர்த்தனையைச் செய்கிறார்கள். இங்கு, 70 சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
கனடா
கேஷ்லெஸ் முறையைப் பயன்படுத்துவதில், தற்போது கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள மொத்த வர்த்தகத்தில் 90 சதவிகிதம், ஆன்லைன் வர்த்தகமாக உள்ளது. கனடாவில், 88 சதவிகிதம் மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தகத்தில் பல நடவடிக்கைகளைக் கொண்டுவந்த கனடா அரசு, கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நாணயங்கள் அச்சடிப்பதையும், அவைகளைப் புழக்கத்தில்விடுவதையும் முற்றிலும் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து
சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை விட்டுத் தனியாகப் பிரிந்துவந்தது இங்கிலாந்து. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்போது அதன் தரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த நாட்டில் 90 சதவிகித மக்கள் கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்கிலாந்து மக்களில் சுமார் 89 சதவிகிதம் பேர் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இங்கு போக்குவரத்துக்காகப் பெறப்படும் கட்டணங்கள் யாவும் பணமாகப் பெறப்படுவதை இங்கிலாந்து அரசு நிறுத்தியுள்ளது.
சுவீடன்
முதன்முதலாக இந்த கேஷ்லெஸ் முறையைக் கையிலெடுத்தது சுவீடன்தான். காரணம், இங்குள்ள வங்கிகளில் இருந்த பணம், கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்த நாடு கேஷ்லெஸ் முறையைக் கொண்டு வந்தது. இங்கு வங்கிகள், அரசு அலுவலகங்கள், மால்கள், உணவகங்கள் போன்ற அனைத்துமே ஆன்லைன் வர்த்தகம் அல்லது கார்டு முறைகளைத்தான் பின்பற்றி வருகின்றன. இங்குள்ள பொதுப் பேருந்துகளும் கார்டு முறையையே பின்பற்றுகின்றன. இங்கு பெரும்பான்மையான மக்கள் கேஸ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்குள்ள நான்கு வங்கிகளில் ஒரு வங்கி மட்டும், பணப் பரிவர்த்தனையைச் செய்கிறது. அதுவும் கூடிய விரைவில் நிறுத்திவிடும் என்று சுவீடன் அரசு அறிவித்துள்ளது. கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றிவரும் நாடுகளில் சுவீடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment