Wednesday, November 16, 2016

இனி, வங்கிகளில் ஐந்தில் ஒரு பங்காக கூட்டம் குறையும்: மை வைக்கும் நடவடிக்கையால் ஒரே நபர் பலமுறை வர இயலாது

By கு. வைத்திலிங்கம்  |   Published on : 16th November 2016 02:53 AM  |   
விரலில் மை வைக்கும் திட்டத்தால், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவோர் கூட்டம் ஐந்தில் ஒரு பங்காக குறைந்துவிடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 5 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி ஒரு நாளைக்கு ரூ.4000 வீதம் பழைய நோட்டுகள் மாற்றப்படுகின்றன.
ஆதார் அட்டையை காட்டி பணம் மாற்றியவர்கள் அடுத்தமுறை அதே ஆவணத்தைக் காட்டினால், கணினி காட்டிக் கொடுக்கிறது. இதனால், வங்கி அலுவலர்கள் திருப்பிவிடுகிறார்கள்; அல்லது 10 நாட்களுக்குப் பிறகு வாருங்கள் என்கிறார்கள்.
இதனால், ஒருநாள் ஆதார் அட்டையை காட்டினால், மறுநாள் குடும்ப அட்டை, அடுத்த நாள் ஓட்டுநர் உரிமம் என்று மாற்றி மாற்றி பணம் எடுக்க வரும் கூட்டத்தால்தான் தற்போது வங்கிகளில் நீண்ட வரிசை இருக்கிறது.
இந்நிலையில், பணம் பெற்றவர்களுக்கு மை வைக்கப்படுவதால் அவர் ஏற்கெனவே பணம் பெற்றவர் அல்லது எத்தனையாவது முறையாக வருகிறார் என்பதையெல்லாம் கணித்துவிடுவது எளிது. இதனால், இனி வங்கிகளில் கூட்டம் குறையும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள்
""இதை முன்னதாகவே செய்திருக்கலாம். இதுவரை பல பேர் ரூ. 400 கமிஷனுக்காக பல முறை வந்திருக்கிறார்கள்.
அவர்களைத் தெரியும். ஆனால், திருப்பி அனுப்ப முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு ஆவணத்துடன் வருவார்கள். அவர்கள் உண்மையாகவே ஏழைகள். அது அவர்களுடைய பணம் அல்ல என்பதை ஊகிக்க முடியும்.
ஆனால், எங்களால் இல்லை என்று சொல்ல முடியாது. தொடக்கத்திலேயே இத்தகைய மை வைக்கும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தால், ஒரு நபர் திரும்பத் திரும்ப வருவது தடுக்கப்பட்டிருக்கும்'' என்கின்றனர் வங்கித் துறையினர். வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வருவோரே அதிகமாக இருக்கின்றனர். தங்கள் கணக்குகளில் பணத்தை வரவு வைப்போர் குறைவாக இருக்கின்றனர். ஒரு கிளைக்கு 1000 முதல் 1500 பேர் வரை பழைய நோட்டுகளை மாற்ற வருகிறார்கள். ஆனால், தங்கள் கணக்கில் பழைய நோட்டுகளை வரவு வைக்க வருவோர் சுமார் 200 பேர் மட்டுமே.
முடிந்தவரை, கணக்கில் போடாமல் மாற்ற முடியுமா என்பதிலேயே பலரும் விருப்பமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பழைய நோட்டுகளை கணக்கில் வரவு வைக்கும்போது, சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு எண், அதில் செலுத்தப்பட்ட பழைய நோட்டுகளின் தொகை என முழு விவரமும் ரிசர்வ் வங்கிக்கு நாள்தோறும் அனுப்பப்படுகிறது.
நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை செல்லாத நோட்டுகளை வழக்கத்துக்கு மாறாக, அல்லது அதிகமாக செலுத்தியவர்கள் எத்தனை பேர் என்று ஜனவரி மாதம் மிக துல்லியமாக ஆராயப்படும் என்கின்றனர் வங்கி உயர் அதிகாரிகள்.
வங்கி மேலாளர் உதவியுடன் பணத்தை மாற்றுகிறார்கள் என்றும், 20% கமிஷன் கிடைப்பதாகவும் வரும் செய்திகள் குறித்து கேட்டபோது, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், ""வங்கிகளில் முறைகேடு இரண்டு வகைகளில் மட்டுமே சாத்தியம். முதலாவதாக பணம் மாற்ற வருவோர், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட தொகையைவிட குறைவாக மாற்றினால், மீதியுள்ள தொகைக்கு வங்கி மேலாளரே, அவர் வாங்கியதாக கணக்கில் சேர்த்து காட்டி, கருப்பு பணத்தை மாற்ற உதவ முடியும். இரண்டாவது, சில செயல்படாத கணக்குகள் என வங்கியில் உண்டு. அந்தக் கணக்குகள் வங்கி மேலாளருக்குத் தெரியும். அதில் பணத்தைப் போடச் செய்து, போலி நபர்களைக் கொண்டு மீண்டும் வித்ட்ராயல் செய்யும்படியும் செய்யலாம். இரண்டுமே கிரிமினல் நடவடிக்கை. சிக்கிக் கொண்டால் சிறை செல்ல வேண்டியதுதான்'' என்று விளக்கம் அளித்தனர் வங்கி அதிகாரிகள்.
பெட்ரோல் பங்க்குகள் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடப்பது குறித்து வருமான வரித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, ""நவ.8-ம் தேதி முதல் டிச.30 வரை அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குக்கு எவ்வளவு பெட்ரோல் ஐஓசி மூலம் வழங்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்துகொண்டு, அதன் பிறகு அவர்கள் கணக்கை பிப்ரவரி வாக்கில் வருமானவரித் துறை நிதானமாக ஆய்வு செய்யும். அப்போது அவர்கள் ஐஓசியில் வாங்கிய பெட்ரோல்-டீசலுக்கும் அவர்களது நடப்புக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைக்கும் அதிக வித்தியாசம் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள்'' என்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024