கூடா நட்பு கேடாய் முடிந்தது! கொலையில் முடிந்த 23 வயது வித்தியாசம்
சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் லட்சுமிசுதாவும், தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக்கேயனும் இடையே 23 வயது வித்தியாசம். இவர்கள் இருவரும் வயது வித்தியாசம் இல்லாமல் நெருங்கிப் பழகியதே லட்சுமி சுதாவின் கொலைக்கான காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மேற்குமாம்பலம், குமரன்நகரில் குடியிருந்தவர் லட்சுமி சுதா. இவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்தார். இவரது மகன் திருமணமாகி பெங்களுரூவில் குடியிருக்கிறார். லட்சுமி சுதா, கடந்த 2-ம் தேதி வீட்டின் படுக்கையறையில் கத்திக்குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் அலங்கோலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக குமரன்நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக கார்த்திகேயனை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கார்த்திகேயன், கொலைக்கு சொல்லும் காரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "லட்சுமி சுதா கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினோம். கொலை நடந்த வீட்டிலிருந்து எந்த பொருட்களும் திருட்டுப்போகவில்லை. இதனால் நகை, பணத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பதை உறுதிசெய்தோம். இதையடுத்து லட்சுமி சுதா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தினோம். லட்சுமி சுதாவின் உடல் படுக்கையறையில் தலைகுப்புறமாக கிடந்தது. மேலும் அவரது முதுகு, கழுத்தின் பின்புறம், இடுப்பு என 10 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சில நாட்களுக்கு முன்பு கொலை நடந்திருக்க வேண்டும் என்று கருதினோம். மேலும், அவருக்கு தெரிந்த நபர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். இதனால் அவரது வீட்டுக்கு தினமும் வரும் நபர்கள் குறித்து விசாரித்தோம். அப்போது சென்னை நொளம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது லட்சுமி சுதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமே இந்த கொலைக்கு காரணம் என்றும் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்" என்றார்.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கார்த்திகேயன், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறார். இவரது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை. கார்த்திகேயன் பணியாற்றிய நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக லட்சுமி சுதா இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் அடிக்கடி லட்சுமி சுதா வீட்டுக்கு கார்த்திகேயன் வருவதுண்டு. லட்சுமி சுதாவுக்கு 58 வயதாகுகிறது. ஆனால் கார்த்திக்கேயனுக்கு 35 வயதாகுகிறது. இருவருக்கும் இடையே 23 வயது வித்தியாசம். வயது வித்தியாசம் இல்லாமல் இருவரும் பழகியுள்ளனர். இந்த நிலையில் கார்த்திக்கேயனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்துள்ளது. இதன்பிறகு லட்சுமி சுதா வீட்டுக்கு கார்த்திக்கேயன் வருவதை குறைத்துள்ளார். கடந்த 31-ம் தேதி வீட்டிற்கு வந்த கார்த்திக்கேயனிடம், எதற்காக முன்பு போல அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என்று லட்சுமி சுதா கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், லட்சுமி சுதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்" என்றனர்.
கூடா நட்பு மட்டும் கேடாய் முடிவதல்ல.... வயது வித்தியாசம் இல்லாமல் பழகுவது கூட பாதகமாக முடியும் என்பது கார்த்திகேயன், லட்சுமி சுதா சம்பவத்தில் நிரூபணமாகியுள்ளது.
No comments:
Post a Comment