Sunday, November 6, 2016


கீழ்த்தர அரசியல்!
By ஆசிரியர் | Last Updated on : 05th November 2016 01:34 AM |

DINAMANI


தில்லியில் முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரேவால் (70) தற்கொலையும் அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் ராம் கிஷண் கிரேவால் உடலுக்கு அஞ்சலி செலுத்த முயன்றபோது போலீஸாரால் தடுக்கப்பட்ட சம்பவமும் தேவையே இல்லாமல் அரசியலாகி, நாடு முழுவதும் இன்று கண்டனம் எழுப்பும் நிலை உருவாகியிருக்கிறது.
ராம் கிஷண் கிரேவால் எல்லைப் பாதுகாப்புப் படையில் 30 ஆண்டுகள் பணியாற்றி 2004-இல் ஹவில்தாராக ஓய்வுபெற்றவர். தான் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் குறித்து அவர் எதையும் எழுதி வைக்கவில்லை. அவர் தனது மகனுக்கு தொலைபேசியில் பேசியபோது, "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தில் தனக்கு தொகை குறைந்துவிட்டதாகக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையும் கேள்விக்குறியே.
அவருடைய ஓய்வூதியம் எவ்வளவு? அவருக்கு தவறாக கணக்கிடப்பட்டதா அல்லது விடுபட்டுப்போய் தொகை குறைந்துள்ளதா? இது அரசு தற்போது அறிவித்துள்ள திட்டத்தில் ஏற்பட்ட முரணா அல்லது கணக்கில் நேரிட்ட தவறா என்ற எதைப்பற்றியும் ஆராயாமல், அவர் தற்கொலை மட்டுமே நாடு முழுவதும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. தனிநபர்களின் தற்கொலை முடிவுகளுக்கெல்லாம் அரசைக் குற்றம் கூறுவது, காரணமாக்குவது என்று முற்பட்டால் அதற்கு முடிவே இருக்காது.
"ராகுல் காந்தியை தில்லி போலீஸார் தடுக்காமல் அஞ்சலி செலுத்த அனுமதித்திருந்தால், இந்த பிரச்னை மிகச் சாதாரணமானதாக முடிந்து போயிருக்கும். தேவையே இல்லாமல் தடுத்து நிறுத்தி, கைது செய்து பின்னர் விடுவித்ததன் மூலம், இந்த விவகாரத்தை பூதாகரமாக்கிவிட்டனர்' என்று கூறுவதிலும் அர்த்தம் இல்லை. அந்தப் பகுதியில் இருக்கும் இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கும் நோயாளிகள் போய்வர முடியாத அளவுக்குத் தொண்டர்கள் புடைசூழ அரசியல் தலைவர்கள் முற்றுகையிடும்போது, காவல்துறை வாளாவிருந்தால் அதன் விளைவுகள் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதையும் உணர வேண்டும்.
எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல் மூலம் ஆளும் பா.ஜ.க.வுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் ஆதரவும், ஒரு ராணுவ வீரரின் தற்கொலைக்கு அரசின் செயல்பாடு காரணமாக இருந்தால் மழுங்கடிக்கப்படும் என்கிற எண்ணத்தில், காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றன. போபால் சிறையில் தப்பிய எட்டு சிமி கைதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பின்னுக்குத் தள்ளப்படுவதற்கு இதுபோன்ற ஒரு சம்பவத்துக்காக பா.ஜ.க. தலைவர்களே காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஹவில்தார் ராம் கிஷண் கிரேவாலின் தற்கொலை உதவியிருக்கிறது. எதுவானபோதிலும், இது மிகவும் கீழ்த்தர அரசியலாக மாறியது என்பதே உண்மை.
இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, ராம் கிஷண் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கருணைத்தொகை அளிப்பதாக கேஜரிவால் அறிவித்துள்ளார். இது தற்கொலை அரசியலின் உச்சம். ராம் கிஷண் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பதே உறுதியாகாத நிலையில், ஓய்வூதிய முரண் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தற்கொலை செய்துகொள்வோர் அனைவருக்கும் கேஜரிவால் இதுபோல ஒரு கோடி ரூபாய் கருணைத்தொகை அறிவிப்பாரா? அறிவிக்கத்தான் முடியுமா?
இத்தனை ஆண்டு காலமாக நீடித்துவந்த முரண்களைக் களைய, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவத்தினர் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில் சில குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ராணுவத்திலிருந்து தன்னிச்சையாக விலகியவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பயன் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவத்தினரோ எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ராம் கிஷண் இந்த வகைப்பாட்டில் எத்தகைய இடத்தில் உள்ளார் என்பதுகூட இந்த தற்கொலை அரசியலில் பேசப்படவில்லை.
ஊதிய ஒப்பந்தம் அல்லது புதிய ஊதிய கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துதல் எதுவாக இருந்தாலும் சில விடுபடல்கள், சிலர் பாதிக்கப்படுதல், சிலருக்கு சில சலுகைகள் இல்லாமல் போதல் என பல்வேறு முரண்கள் எழுவது இயற்கையே. இத்தகைய முரண்களைக் களைவதற்கென தனி குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் தனியாக பரிசீலிக்கப்படுவதுதான் நடைமுறை.
"ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.5,500 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. 20.6 கோடி ஓய்வூதியதாரர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கவில்லை அல்லது ஓய்வூதிய பணம் வந்து சேரவில்லை என்ற குறைகள் இருக்கின்றன. இவையும் படிப்படியாக சரி செய்யப்படும் என்பது உறுதி. முன்னாள் ராணுவத்தினர் தங்கள் குறைகளை முறைப்படி அணுகி நியாயம் பெற முடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
போலீஸார், ராகுல் காந்தியை அஞ்சலி செலுத்த அனுமதித்திருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு அதிகம் பேசப்பட்டிருக்காதுதான். ஆனால், ராகுல் காந்தியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதல்ல, இதில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பதுதான் உண்மை. ராம் கிஷண் எதற்காக இறந்தார் என்பதே உறுதியாகாத நிலையில், அவரது மரணத்துக்காக குரல் கொடுப்பதும், இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதும் சரியான அரசியல் அணுகுமுறை அல்ல!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024